தனக்கு தானே சூன்யம் வைத்து கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி..!

வெற்றி களிப்பில் மெஸ்ஸி மற்றும் சவ்ரெஸ்
வெற்றி களிப்பில் மெஸ்ஸி மற்றும் சவ்ரெஸ்

ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதன் காலிறுதி போட்டி ஒன்றில் பிரீமியர் லீக் ஜாம்பவானும் ஸ்பானிஷ் ஜாம்பவானும் மான்செஸ்டர் நகரில் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். மெஸ்சியா அல்லது போக்பாவா என்ற நிலையில் ஆட்டம் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் அனைவரும் உள்ளூர் அணியான மான்செஸ்டர் பக்கம் இருக்க, செல்லும் இடெமெல்லாம் சிறப்பு என்பதை போல பார்சிலோனா மெஸ்ஸி தலைமையில் களம் கண்டது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வியூகம்: 3-5-2

பார்சிலோனா அணியின் வியூகம்: 4-3-3

முதல் பாதி:

இரு அணிகளும் 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிக்கு பிறகு சந்திக்கும் முதல் போட்டியாகும் இது. அந்த போட்டியில் ஆச்சர்யமின்றி பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிவாகை சூடியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் ஷாட்டாக யுனைடெட் அணியின் ராஷ்போர்ட் அடித்தார். பிரீ-கிக் வாய்ப்பான அதை சற்று தூரத்தில் இருந்து அந்த ஷாட்டை எடுத்தார், ஆனால் பந்து கோல் போஸ்டை விட்டு விலகி சென்றது.

இதையடுத்து, எங்கு பார்த்தாலும் பந்து பார்சிலோனா அணி வீரர்களிடமே தவழ்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது. மெஸ்ஸி ஒரு கிராஸ் ஷாட் அடிக்க அதை ஹெட்டர் மூலம் கோலாக மாற்ற முயற்சித்தார் சவ்ரெஸ் ஆனால் அந்த பந்தை தடுக்க முயன்ற யுனைடெட் அணியின் வீரர் ஷாவ் தலையால் முட்ட பந்து வலைக்குள் விழுந்தது.

ஷாவ் போட்ட சுய கோல் படம்
ஷாவ் போட்ட சுய கோல் படம்

அதிர்ச்சி கலந்த விரக்தியில் யுனைடெட் அணி வீரர்கள் ஒரு புறம் இருக்க, முதல் கோல் கணக்கை துவங்கிய பார்சிலோனா அணி மகிழ்ச்சியில் திளைக்க, ரெபிரீ ஆப்சைடு என குண்டை தூக்கி போட்டார். பிறகு VAR உதவியுடன் அது கோல் தான் என முடிவுக்கு வந்தனர். தங்களுக்கு கிடைத்த அபார அதிர்ஷ்டத்தை நினைத்து கோலை கொண்டாடினர் பார்சிலோனா வீரர்கள்.

இப்படி ஆட்டத்தின் 12' வது நிமிடத்தில் முன்னிலை பெற்ற கையோடு தனது வழக்கமான ஆட்டத்தை தொடர்ந்தது பார்சிலோனா அணி. அந்த தருவாயில், யுனைடெட் அணிக்கு ஒரு பிரீ-கிக் வாய்ப்பு கிட்டியது இந்த முறை நடுகள வீரரான ஃபிரட் ஷாட்டை எடுக்க முன்வந்தார். ஆனால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சரியாக முன்னின்ற பார்சிலோனா வீரர்களின் தடுப்புகள சுவர்மீது அடித்தார்.

இந்த வாய்ப்பும் பறிபோக 29'வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்புக்கு முறையிட்டனர் யுனைடெட் அணியினர். ஆனால் மேக்டோமினாய் அந்த இரவு முழுக்க சிறப்பாக செயல்பட்டார், அந்த தருணத்தில் அவர் எந்த தவறும் இழைக்கவில்லை. இதனால் பெனால்டி வாய்ப்பும் இல்லை என அறிவித்தார் ரெபிரீ.

மெஸ்ஸி காயம்
மெஸ்ஸி காயம்

அடுத்த சில கணங்களில் தான் ஆட்டத்தின் எதிர்பாராத தருணம் ஒன்று அரங்கேறியது, கிறிஸ் ஸ்மால்லிங் இடையேயான சிறிய போராட்டத்தில் மெஸ்ஸி மூக்கு மற்றும் கண்களில் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஆட்டம் வெகு நேரம் தடைபட்டது. பிறகு சிறிய மருத்துவ உதவியுடன் மீண்டும் களம்கண்டார் மெஸ்ஸி.

36'வது நிமிடத்தில் ஒரு அற்புத வாய்ப்பு பார்சிலோனா அணிக்கு கிட்டியது கோடின்ஹோ ஷாட் அடிக்க டேவிட் ஜியா அதை அற்புதமாக தடுத்தார்.

இரண்டாம் பாதி:

முதல் பாதி 1-0 என்ற முன்னிலையுடன் பார்சிலோனா ஆட்டத்தை தொடர, யுனைடெட் அணியும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தது. யுனைடெட் அணியின் ராஷ்போர்ட் கோல் போட ஒரு சாத்திய சூழலில் , அவர் அடித்த வாலியானது முற்றிலும் தவறாக போய் முடிந்தது. இதனால் யுனைடெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

பந்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணி வீரர்கள்
பந்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணி வீரர்கள்

ஆட்டம் சிறிது நேரம் எந்தவித ஷாட்கள் இன்றி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது 65'வது நிமிடத்தில் சவ்ரெஸ் ஒரு ஷாட் அடிக்க அதையும் லாவகமாக தடுத்தார் டீ ஜியா.

இதையடுத்து 70வது மிமிடத்தில் யுனைடெட் அணிக்கு ராஷ்போர்ட் பிரீ-கிக் கிடைக்க அதை வீணடித்தார். அதே போல 84'வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி ஒரு பிரீ-கிக் வாய்ப்பை பெற்று அதனை வீணடித்தார்.

இந்த போட்டியில் யுனைடெட் அணிக்காக முழுமையாக போராடியவர் என்றால் அது டேவிட் டீ ஜியா தான். அவரின் துரிதமான ஆட்டத்தால் பார்சிலோனா அணி மேலும் முன்னிலை பெறாமல் பார்த்துக்கொண்டார்.

முதல் லெக் முடிவில் பார்சிலோனா முன்னிலை
முதல் லெக் முடிவில் பார்சிலோனா முன்னிலை

இறுதியில் பார்சிலோனா அணி 1-0 என்ற முன்னிலையுடன் இரண்டாவது லெக் போட்டியில் தனது சொந்த ஊரில் யுனைடெட் அணியை சந்திக்கவிருக்கிறது. அதிலும் ஆதிக்கம் தொடரும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறலாம்.

இல்லையெனில் பார்சிலோனா அணிக்கு யுனைடெட் அணி அதிர்ச்சி அளிக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் கடந்த பல வருடங்களாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது சொந்த ஊரில் தோற்றதில்லை பார்சிலோனா அணி.

காத்திருபோம்.....

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now