இந்திய கால்பந்து லீக் போட்டிகளின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக கொல்கத்தாவில் துவங்கியது. இதற்கான முதல போட்டி அட்லெடிக்கோ கொல்கத்தா மற்றும் கேரளா ப்ளாஸ்டர்ஸ் இரு அணிகளும் மோதின.
10 அணிகளுடன் துவங்கிய இத்தொடரில் ஒவ்வொரு அணியின் எதிர் அணியுடன் தலா 2 போட்டிகளில் மோதுவர். லீக் போட்டியில் முடிவில் ஒவ்வொரு அணியும் 18 போட்டிகள் ஆடி இருக்கும். அதன் பிறகு புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் ஒரு அணி தனது எதிரணியுடன் இரண்டு போட்டிகளை மேற்கொள்ளும் இரண்டு போட்டிகளிலும் கோல் அடிப்படையில் எந்த அணி அதிக கோல்களை பெற்றுள்ளதோ அந்த அணி மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
இப்படி நடந்து முடிந்த லீப் சுற்றுகள் மற்றும் அரையிறுதி இரண்டின் முடிவில் இறுதி போட்டியில் ஆடுவதற்கு பெங்களூரு எப்.சி அணியும் கோவா எப்.சி அணியும் தகுதி பெற்றன.
கோலாகலமான இறுதிப்போட்டி

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி மும்பையில் நேற்று கோலாகலமாக துவங்கியது. இரு அணிகளும் தனது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கின. துரதிஷ்டவசமாக, கேரளா அணி இரு முறை (2015, 2017) இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. அதேபோல கடந்த சீசனில் பெங்களூரு அணி இறுதி வரை வந்து கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.
இதனால் துவக்கத்திலிருந்தே ஆட்டம் அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் துவண்டு போகாமல் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தனர். ஆனால் இரு அணிக்கும் முதல் பாதி 0-0 என சோகமாகவே முடிந்தது.
இரண்டாம் பாதியும் ஏமாற்றம்
0-0 என துவங்கிய இரண்டாம் பாதியில் கோல் போடவில்லை என்றாலும், எதிர் அணி வீரர்களை சோர்வடைய செய்ய முட்டல் மோதல்கள் அதிகமாக இருந்தன. இவற்றை தாண்டி 81வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிக்கு கோல் அடிக்க முயற்சிக்கையில், பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேறி ஏமாற்றம் அளித்தது. அதன் பின், 90 நிமிடங்கள் முடிவில் மீண்டும் 0-0 என இருந்தது.
இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால், விதிமுறைப்படி கூடுதல் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்பொழுது, ஆட்டத்தின் நடுவே இரண்டாம் பாதியை போலவே முட்டலும் மோதலும் சற்று அதிகமாக காணப்பட்டன. இதற்கிடையில் கோவா வீரர் அகமது ஜாகோ இருமுறை மஞ்சள் அட்டை பெற்றதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேறினார். இது கோவா அணிக்கு பெருத்த பின்னடைவை தந்தது. கூடுதல் நேரத்தில் இரண்டாம் பாதியில் வெறும் 10 வீரர்களுடன் களமிறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் கோவா அணியினர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்டத்தின் 116 ஆவது நிமிடத்தில், கிடைத்த "கார்னர் கிக்" வாய்ப்பில் அடித்த பந்தை அழகாக தலையில் முட்டி கோல் போஸ்டுக்கு தள்ளினார் பெங்களூரு வீரர் ராகுல் பெகே. இதனை கோவா கோல் கீப்பர் தடுக்க முடியாததால் கோலாக மாறியது. இறுதியில் 1-0 என கோவா அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது பெங்களூரு எப்.சி அணி. 2வது முறையாக இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது கோவா அணி.

கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு 8 கோடி ரூபாயும், 2வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு 4 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
