ஒவ்வொரு முறை உலக கோப்பை வரும் போதும் நம் இந்திய அணி அடுத்த தடவையாவது இதில் பங்கேற்குமா என நாம் ஒவ்வொருவரும் கனவு கான்போம். ஆனால் வருடங்கள் செல்கிறதே தவிர இந்த கனவு இப்போதைக்கு நிறைவேறுவது போல் தெரியவில்லை. பயிற்சியாளர்களும் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். தற்போது இந்திய தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இனியாவது இந்திய அணி உலக கோப்பை கதவை தட்டுமா?
புதிய பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ள இகோர் ஸ்டிமக்-ற்கு பல சவால்கள் உள்ளன. சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த U-17 FIFA உலக கோப்பை, கால்பந்து விளையாட்டின் பிரபலத்தையும் உள்கட்டமைப்பையும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்திய சீனியர் அணியோ இன்றும் சுனில் ஷேத்ரி என்ற ஒற்றை வீரரை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது.
“சுனில் ஷேத்ரிக்கு அடுத்து இன்னொரு வீரரை கண்டுபிடிப்பதே இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் முன்னுள்ள மிகப்பெரிய சவால். அவருக்கும் வயதாகி கொண்டு போகிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் அவர் ஓய்வு பெற்றுவிடுவார். அதற்குள் அணியை வழி நடத்தக் கூடிய இன்னொரு வீரரை புதிய பயிற்சியாளர் ஸ்டிமக் கண்டுபிடிக்க வேண்டும்” என்கிறார் ஹவுடன் அணியின் முன்னாள் துணை பயிற்சியாளர் ஸ்டேன்லி ரோசரியோ.
ரோசரியோ கூறுகையில், “பல வீர்ர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஸ்டிமக் தேர்வு செய்துள்ள அணி ஏறக்குறைய முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் கன்ஸ்டண்டைன் தேர்வு செய்த அணி போல் தான் உள்ளது. ஆனால் இந்த முறை பல இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். என்னை கேட்டால், நடுகளத்தில் சோதனை முயற்சியாக லென்னி ரோட்ரிகுஸை (FC கோவா அணி வீர்ர்) பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து தாய்லாந்தில் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பையில் இந்த அணி எப்படி விளையாடுகிறது என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். அதற்கு முன்னால், அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்”.
இந்த ஆண்டு பயிற்சியாளர் ஸ்டிமக்கிற்கு பல முக்கிய பணிகள் உள்ளன. ஜூன் ஐந்தாம் தேதி தாய்லாந்தில் கிங்ஸ் கோப்பை தொடங்க உள்ளது. அதன்பிறகு ஜூலை மாதம் ஏழாம் தேதி தொடங்கவுள்ள இண்டர்காண்டினட்டல் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா உள்பட சிரியா, தஜகிஸ்தான், வட கொரியா போன்ற அணிகள் பங்கேற்கவுள்ளன. இது முடிந்த பிறகு, மிக முக்கியமான உலக கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன.
“இந்திய கால்பந்தில் மூன்று விஷயங்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒன்று, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பிரஃபுல் படேலுக்கு பிஃபா கவுன்சிலில் இடம் கிடைத்திருப்பது. இரண்டு, இந்திய தேசிய அணியின் தொழில்நுட்ப இயக்குனராக டோரு ஐசக் நியமிக்கப்பட்டிருப்பது. மூன்றாவது மற்றும் கடைசியாக, இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இகோர் ஸ்டிமக் நியமிக்கப்படிருப்பது. இந்த மூன்றும் சரியாக அமைந்தால், அது நிச்சியம் இந்திய கால்பந்திற்கு புதிய காலகட்டமாக இருக்கும். நிச்சியம் இந்த அணியிடம் நாம் சிறப்பான விஷயத்தை எதிர்பார்க்கலாம்” என்கிறார் ரோசரியோ.
இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் நன்றாக விளையாடியது இந்திய அணி. முதல் போட்டியில் தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, பயிற்சியாளர் கான்ஸ்டாண்டைனின் தவறான முடிவால் பஹ்ரைனிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அந்தப் போட்டியில் டிரா செய்தாலே போதும். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்காமல் தோல்வியுற்றனர்.
தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் ஸ்டிமக் பயிற்சியாளராக வந்துள்ள நிலையில், இது அணிக்கு எந்த விதத்தில் பயனளிக்கும்? “ஸ்டிமக் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். விளையாடும் காலத்தில் அவர் தடுப்பாட்ட வீரராக இருந்தார். ஆகையால் இந்திய அணியின் தடுப்பாட்டத்தை நிச்சியம் வலுப்படுத்துவார். பல ஐஎஸ்எல் மற்றும் இந்தியன் லீக் போட்டிகளை பார்த்து, நேர்காணலுக்கு வரும் போதே 36 வீரர்கள் கொண்ட பட்டியலுடன் தான் ஸ்டிமக் வந்தார் என்று கேள்விப்பட்டேன். இந்திய கால்பந்தை உயர்த்த வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் உள்ளது. அவருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கியிருப்பது என்னைப் பொருத்தவரை நல்லதே. நல்ல முடிவுகள் வர வேண்டுமென்றால், ஸ்டிமக்கிற்கு போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார் ரோசரியோ.
சமீபத்தில் தான் Aizawl அணிக்கு பயிற்சியாளராக இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரோசரியோ.