கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேசில் மற்றும் வெனிசுலா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் எந்த அணியும் கோல் அடிக்காத காரணத்தால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியில் கோல் தான் அடிக்கவிலையே தவிர பரபரப்பிற்கும் சர்ச்சைகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இந்த ஆட்டம் நடந்தது.
பிரேசில் அணியின் மூன்று கோல்களை வீடியோ ரிவ்யூ மூலம் நிராகரித்தார் நடுவர். போட்டியின் 60-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் கேப்ரியல் ஜீசஸ் அழகான கோலை அடித்தார். ஆனால் அது ஆஃப் சைட் கோல் என நடுவர் நிராகரித்தார். 87-வது நிமிடத்தில் வெனிசுலாவின் தடுப்பையும் மீறி அற்புதமான கோலை அடித்தார் கவுண்டினோ. ஆனால் இந்த கோலும் நடுவரால் ஆஃப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது. இதனால் பிரேசில் வீரர்களும் ரசிகர்களும் விரக்தியின் உச்சத்திற்கே சென்றார்கள்.
தனது முதல் போட்டியில் பொலிவியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்திய பிரேசில், இந்தப் போட்டியின் முதல் பாதியில் கோல் அடிக்க மிகவும் திணறியது. போட்டி முழுவதும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் ஒரு கோலை கூட பிரேசில் அணியால் அடிக்க முடியாதது ஆச்சர்யமாக உள்ளது.
வீடியோ ரிவ்யூ இந்தளவிற்கு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நட்சத்திர வீரர் நெய்மர் அணியில் இல்லையென்றாலும், அவரது இடத்தை நிரப்ப பல திறமையான வீரர்கள் அணியில் இருந்தனர். இதனால் வெனிசுலா அணியை விட எல்லா வகையிலும் பலம் பொருந்தியதாகவே இருந்தது பிரேசில். மேலும், இந்தப் போட்டியில் தடுப்பாட்டத்தில் வெனிசுலா அணி கவனம் செலுத்தும் என்பதை பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட்டீ தெரிந்தே வைத்திருந்தார்.
போட்டி முடிவடைந்த பிறகு மைதானத்தில் இருந்த பல ரசிகர்கள் பிரேசில் அணிக்கு எதிராக கரகோஷம் இட்டார்கள். இதற்கு காரணமும் இருக்கிறது. ஏனென்றால், கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கபடும் பிரேசில் அணி இதுவரை வெனிசுலா அணியை 24 முறை எதிர்கொண்டு 21 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இந்தப் போட்டியில் மிக எளிதாக பிரேசில் வெற்றி பெறும் என்றே பலரும் நினைத்திருந்தனர்.
போட்டி குறித்து பிரேசில் அணியின் மூத்த வீரர் தியகோ டீ சில்வா கூறுகையில், “வெனிசுலா அணியினர் மிகவும் தற்காப்பு மனநிலையில் விளையாடினர். இரண்டாம் பாதியில் அவர்கள் இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை. நாங்கள் ஒரு கோலும் அடிக்காத போது, எல்லாம் தவறாகவே இருப்பது போல் தெரியும். வீடியோ ரிவ்யூ பற்றி நாங்கள் எந்த குறையும் சொல்லவில்லை” என்றார்.
மிகப்பெரிய தொடரை நடத்தும் நாட்டிற்கு பல சமயம் அதுவே பலமாக அமையும். ஆனால் சில சமயங்களில் இது சாபமாக கூட மாறிவிடும். நீங்கள் ஒழுங்காக விளையாடும் வரை ரசிகர்கள் உங்களுக்கு மிகப்பெரும் ஆதரவை தருவார்கள். அவர்கள் மைதானத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சி பிளம்பில் எதிரணிகள் திணறக் கூடும். அதே சமயத்தில் போட்டியை நடத்தும் நாடு மோசமாக விளையாடியது என்றால் ரசிகர்களின் ஏச்சு பேச்சுகளை வாங்கியாக வேண்டும். இதனால் தேவையில்லாத அழுத்தம் போட்டியை நடத்தும் நாடு மீது உள்ளது. பிரேசில் இதை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தப் போட்டி டிரா ஆன காரணத்தால் க்ரூப் ஏ-வில் எந்த அணியும் அடுத்த சுற்றுகு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் அணி தனது அடுத்தப் போட்டியில் பெரு அணியை சந்திக்க உள்ளது.