வரும் புதன்கிழமை கோப்பா அமெரிக்கா தொடரில் உலகமே எதிர்பார்க்கும் போட்டி நடைபெற இருக்கிறது. ஆம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும் பிரேசில் அணியும் அரையிறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. நிச்சியம் இந்தப் போட்டி கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இரு அணிகளுமே இந்த தொடரில் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் இதுவரை விளையாடவில்லை. பராகுவே அணியுடனான காலிறுதி போட்டியில் பெனால்டி முறையால் தான் பிரேசில் அணியால் வெல்ல முடிந்தது. மற்றொரு புறம், வெனிசுலா அணியுடனான போட்டியில் அவ்வுளவு சிறப்பாக விளையாடா விட்டாலும், எப்படியோ 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுக்குள் நுழைந்தது அர்ஜெண்டினா.
சர்வதேச கால்பந்தில் தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா மட்டுமே வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இதுவரை பிரேசில் ஐந்து முறையும் அர்ஜெண்டினா இரண்டு முறையும் உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில், பிரேசில் அணியே அதிக வெற்றியை பெற்றுள்ளது. 45 போட்டிகளில் பிரேசிலும், 39 போட்டிகளில் அர்ஜெண்டினாவும் 25 போட்டிகள் டிராவிலும் முடிவடைந்துள்ளன. சமீப காலங்களில் கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேசில் அணியும் அர்ஜெண்டினாவும் மோதுவது அரிதாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் கடைசியாக சந்தித்த மூன்று போட்டிகளை பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
அரையிறுதிப் போட்டி (1999) – பிரேசில் (2) Vs அர்ஜெண்டினா (1)
1999-ம் ஆண்டின் கோப்பா அமெரிக்கா தொடரில் விளையாடிய பிரேசில் அணியில் ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ என பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அதே சமயத்தில் அர்ஜெண்டினா அணியிலும் ரோமன் ரிக்கெல்மே, டியாகோ சிமோன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். இதனால் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அனல் பறந்தது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிரேசில் தடுப்பாட்ட வீரரை மீறி தனது இடது காலால் கோல் அடித்து அர்ஜெண்டினா அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார் ஜுயான் பாப்லோ சோரின். சுதாரித்து கொண்ட பிரேசில், 32-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இதை கோலாக்கி போட்டியை சமநிலை படுத்தினார் ரிவால்டோ.
போட்டி இரண்டு பக்கமும் சரிசமமாக சென்று கொண்டிருந்தது. யார் வெற்றி பெறுவர்கள் என்ற நிலையே நீடித்தது. போட்டி முடிய சில நிமிடங்கள் இருக்கும் நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ தூரத்திலிருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இந்த கோலின் மூலம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது பிரேசில். இறுதிப் போட்டியில் உருகுவே அணியை சந்தித்த பிரேசில், 3-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பா அமெரிக்க கோப்பையை தனதாக்கி கொண்டது.
இறுதிப் போட்டி (2004) – பெனால்டி முறையில் பிரேசில் வெற்றி
இந்தப் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லை. 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் இரண்டு கோல்களை அடித்து சமநிலையில் இருந்ததால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது. காகா, ரொனால்டோ, ரொனால்டினோ என நட்சத்திர வீரர்களை அனுப்பாமல் இளம் வீரர்களை இந்த தொடருக்கு பிரேசில் அனுப்பியிருந்தாலும், லூயிஸ் ஃபேபியானோ மற்றும் அட்ரியானோ பிரேசிலுக்கு கோப்பையை பெற்று தந்தனர்.
போட்டியின் 20-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து அர்ஜெண்டினா அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார் கிலி கொன்சாலஸ். பதிலடியாக 45-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் படுத்தியது பிரேசில். 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் சீஸர் டெல்கடோ கோல் அடித்ததால், இனி பிரேசில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என பலரும் நினைத்தனர். ஆனால் கூடுதல் நேரத்தில் பிரேசில் வீரர் அட்ரியானோ கோல் அடித்து மீண்டும் சமநிலைப் படுத்தினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது. அர்ஜெண்டினா அடித்த முதல் இரண்டு பெனால்டிகளும் வீணானது. முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்று கோப்பையை உச்சி முகர்ந்தது.
இறுதிப் போட்டி (2007): பிரேசில் (3) Vs அர்ஜெண்டினா (0)
இந்த முறையும் நட்சத்திர வீரர்களை களம் இறக்காமல் இளம் வீரர்கள் கொண்ட அணியை அனுப்பியது பிரேசில். இந்த அணியில் ரோபினோ, எலனோ, ஜூலியோ பாப்டிஸ்டா போன்ற பல இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் அர்ஜெண்டினா அணியில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸி, கார்லோஸ் தாவேஸ் போன்ற நட்சத்திர மற்றும் அணுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.
அர்ஜெண்டினா அணி எளிதாக வெற்றி பெறும் என நினைத்த வேளையில், போட்டியின் ஆரம்பம் முதல் பிரேசிலின் கையே ஓங்கியிருந்தது. 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து பிரேசில் அணியை முன்னிலை பெற வைத்தார் பாப்டிஸ்டா. அதன்பிறகு அர்ஜெண்டினா வீரர் பந்தை தடுக்கப் போக, அது தவறுதலாக கோல் வலைக்குள் சென்றது. இதனால் பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் மற்றொரு கோலை அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது பிரேசில்.