போட்டியின் 20-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து அர்ஜெண்டினா அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார் கிலி கொன்சாலஸ். பதிலடியாக 45-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் படுத்தியது பிரேசில். 87-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் சீஸர் டெல்கடோ கோல் அடித்ததால், இனி பிரேசில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என பலரும் நினைத்தனர். ஆனால் கூடுதல் நேரத்தில் பிரேசில் வீரர் அட்ரியானோ கோல் அடித்து மீண்டும் சமநிலைப் படுத்தினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி முறை கொண்டு வரப்பட்டது. அர்ஜெண்டினா அடித்த முதல் இரண்டு பெனால்டிகளும் வீணானது. முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்று கோப்பையை உச்சி முகர்ந்தது.
இறுதிப் போட்டி (2007): பிரேசில் (3) Vs அர்ஜெண்டினா (0)
இந்த முறையும் நட்சத்திர வீரர்களை களம் இறக்காமல் இளம் வீரர்கள் கொண்ட அணியை அனுப்பியது பிரேசில். இந்த அணியில் ரோபினோ, எலனோ, ஜூலியோ பாப்டிஸ்டா போன்ற பல இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் அர்ஜெண்டினா அணியில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸி, கார்லோஸ் தாவேஸ் போன்ற நட்சத்திர மற்றும் அணுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.
அர்ஜெண்டினா அணி எளிதாக வெற்றி பெறும் என நினைத்த வேளையில், போட்டியின் ஆரம்பம் முதல் பிரேசிலின் கையே ஓங்கியிருந்தது. 4-வது நிமிடத்திலேயே கோல் அடித்து பிரேசில் அணியை முன்னிலை பெற வைத்தார் பாப்டிஸ்டா. அதன்பிறகு அர்ஜெண்டினா வீரர் பந்தை தடுக்கப் போக, அது தவறுதலாக கோல் வலைக்குள் சென்றது. இதனால் பிரேசில் 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் மற்றொரு கோலை அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது பிரேசில்.