சுற்று 16க்கான முதல் லெக் போட்டிகளில் பேயர்ன் மற்றும் லிவர்பூல் இரு அணியும் மோதிய போட்டி லிவர்பூலில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் ஏதும் அடிக்க முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. குறிப்பாக சொந்த மைதானத்தில் லிவர்பூல் அணி கோல் அடிக்காதது பெருத்த பின்னடைவாக அமைந்தது.
பேயர்ன் ஆதிக்கம் - லிவர்பூல் சாமர்த்தியம்
இரண்டாவது லெக்கில், போட்டி பேயர்ன் மைதானத்தில் நடைபெற்றது. துவக்கத்தில் இருந்து சொந்த மைதானத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது பேயர்ன் அணி. இருப்பினும், அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கோல்நோக்கி தாக்கத்தை ஏற்படுத்தியது லிவர்பூல்.
துரதிஷ்டவசமாக, ஆட்டத்தின் 13 வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் கேப்டன் ஆண்டர்சன் காயம் ஏற்பட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக ஃபேபினோ உள்ளே வந்தார்.
இருப்பினும் 29 வது நிமிடத்தில் பின்கள வீரர் வேன் டிஸ்க் கொடுத்த பந்து லாவகமாக எடுத்துச் சென்று முன்கள வீரர் சாடியோ மானே கோலாக்கினார். இதனால் லிவர்பூல் முன்னிலை பெற்றது.
இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 39 நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜோயல் மாடிப் பந்தை வெளியே தள்ள முயற்சித்தது வலைக்குள் தள்ள அது ஓன் கோலாக மாறியது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றனர்.
அனல் பறந்த இரண்டாவது பாதி - பேயர்ன் ஏமாற்றம்
அனல் பறந்த இரண்டாவது பாதியில் இரு அணிகளும் துவக்கத்திலிருந்து கோல் போஸ்டை தாக்கத் துவங்கினர். பேயர்ன் அணி தன்னை பலப்படுத்திக் கொள்ள 61 வது நிமிடத்தில் அணியில் சிறு மாற்றம் செய்தது. அதாவது, இளம் வீரரான கிங்ஸ்லி வெளியேறி, அனுபவ வீரர் ஃபிராங்க் ரிபெரி உள்ளே வந்தார். அதே 61வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லவெண்டாஸ்கி மயிரிழையில் கோல் வாய்ப்பை தவறவிட்டார்.
69 வது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில், மில்நர் அடித்த பந்தை அபாரமாக தன் தலையில் முட்டி வலைக்குள் தள்ளினார் வேன் டிஸ்க். இதன் மூலம் 2 - 1 என லிவர்பூல் அணி மீண்டும் முன்னிலை பெற்றது.
இதற்கு சமன்செய்து முன்னிலை பெற பேயர்ன் அணி வீரர்களில் சில மாற்றங்களை செய்தது. இருப்பினும் அது பெருமளவு எடுபடவில்லை.
கோல் அதிர்ச்சியிலிருந்து தெளிவதற்கு வெளிவருவதற்குள் ஆட்டத்தின் 54 வது நிமிடத்தில் சாடியோ மானே மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் வலுவான ஆதிக்கத்தைச் செலுத்தியது லிவர்பூல் அணி.
இறுதிவரை அதிலிருந்து பேயர்ன் அணி மீண்டு வரவே இல்லை. இதனால் சாம்பியன்ஸ் லீக் 2-வது லெக்கில் 3-1 என வென்று காலிறுதிக்குள் நுழைந்தது லிவர்பூல். இதனால், சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது பலம்வாய்ந்த ஜேர்மன் க்ளப் அணியான பேயர்ன் முன்ச்.
போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு கோல்களை அடித்து அசத்திய லிவர்பூல் முன்கள வீரர் சாடியோ மானே தேர்வு செய்யப்பட்டார்.