2018-19 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது தான் காலிறுதி சுற்றுக்கு வந்துள்ளது. அதற்குள், ஏராளமான பரபரப்பை சந்தித்துள்ளது. அஜாக்ஸ் அணி முன்னாள் சாம்பியன் அணியான ரியல் மாட்ரிட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அட்லெடிகோ மாட்ரிட் அணியை ஹாட்ரிக் அடித்து ஓடவிட்ட ரொனால்டோ, இறுதி நிமிடத்தில் கோல் அடித்து பாரிஸ் அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த மான்செஸ்டர் யுனைடெட் என எதிலும் பரபரப்பு நிறைந்திருந்தது.
இந்நிலையில், இதைவிட பரபரப்பு காலிறுதிக்குள் காத்திருக்கிறது என்றால் அது சற்றும் மிகையாகாது. காரணம், மோதப்போகும் அணிகள் அப்படி.
காலிறுதி முதல் லெக்
சுற்று 16ல் பாரிஸ் அணியை கடைசி நிமிடங்களில் பெனால்டி மூலம் வீழ்த்தி வந்த மான்செஸ்டர் யுனைடெட் அணி, அதே சுற்று 16ல் லியொன் அணியை 5-1 என கம்பீரமாக வீழ்த்தி வந்த பார்சிலோனா அணியுடன் மோதுகிறது.
இதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, முதல் லெக் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடப்பதால், அந்த அணிக்கு கூடுதலான சப்போர்ட் இருக்கும்.
இதையெல்லாம் தவிடுபொடியாக்கும் வண்ணம் மெஸ்ஸியின் சமீபத்திய நிலை உள்ளது. ல லிகா தொடரில் இப்போதே 32 கோல்கள் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 8 கோல்கள் இதுவரை அடித்துள்ளார். இவரை சமாளிக்க தனி திட்டத்தை கட்டாயம் எதிரணி வகுக்க வேண்டும்.
ஒளிபரப்பு விவரம்
இப்போட்டி, வியாழனன்று நள்ளிரவு 12.30 மணிக்கு துவங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை சோனி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது.
சாத்தியமான அணி வீரர்கள்
மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள்
கோல் கீப்பர் - டி கே;
தடுப்பாட்ட வீரர்கள் -யங்க், ஸ்மால்லிங், லிண்டலோஃப், ஷா;
நடுகள வீரர்கள் - மெக்டமினே, போக்பா, ஃப்ரெட், லிங்கர்ட்;
முன்கள வீரர்கள் - ராஷ்ஃபோர்ட், லுகுகு;
பார்சிலோனா அணி வீரர்கள்
கோல் கீப்பர் - டேர் ஸ்டெகன்;
தடுப்பாட்ட வீரர்கள் - ராபர்டோ, உமட்டிட்டி, பிகே, ஜோர்டி ஆல்பா;
நடுகள வீரர்கள் - புஸ்கெட்ஸ், ராகிடிக், ஆர்தர்;
முன்கள வீரர்கள் - மெஸ்ஸி, சுவாரஸ், மால்கம்;
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 8 முறை சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் மோதி இருக்கின்றன.
பார்சிலோனா அணி - 4 முறை, மான்செஸ்டர் யுனைடெட் அணி - 3 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
இரு அணிகளின் சமீபத்திய நிலை
இறுதியாக ஆடிய 5 போட்டிகளில், 2 போட்டிகளை மட்டுமே மான்செஸ்டர் யுனைடெட் அணி வென்றுள்ளது. தோல்வியை சந்தித்த அனைத்தும் வெளி மைதானங்கள் என்பதால் சற்று ஆறுதல் அளித்தாலும், தோல்வி நல்ல உத்வேகத்தை தருவது இல்லை.
அதே நேரம், பார்சிலோனா அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இது பார்சிலோனா அணிக்கு தனி பலத்தினை கொடுக்கும்.
கணிப்பு
இந்த போட்டி இரு அணிகளுக்கு இடையே டிராவில் முடியும் எதிர்பார்க்கப்படுகிறது.