2018 19 ஆம் ஆண்டுக்கான UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டன. இதில் முதலில் நடந்து முடிந்த இரண்டு போட்டியில் ஜுவெண்டஸ் அணியை 3 - 2 என வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது அஜாக்ஸ் அணி. அதன் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கம்பீரமாக அரையிறுதிச் சுற்றுக்குள் சென்றது பார்சிலோனா அணி.
இரண்டாவது நாள் நடந்த காலிறுதி சுற்றின் முதல் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதின. இரண்டாவது போட்டியில், லிவர்பூல் மற்றும் போர்ட் இரு அணிகளும் மோதின.
மான்செஸ்டர் சிட்டி மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகள் மோதிய ஆட்டத்தை நாம் காண்போம்.
மான்செஸ்டர் சிட்டி vs டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் - முதல் லெக் பார்வை
காலிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானமான டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அதன் சொந்த மைதானத்தில் நல்ல கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சியும் பலிக்காமல், 0-0 என்ற நிலையில் முடிந்தது.
இரண்டாவது பாதியில், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. மான்செஸ்டர் சிட்டி அணி தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட முடிந்தது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் முன்கள வீரர் சோன் ஹியுங்-மின் சொல் அடித்து அசத்தினார். இதனால், டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலை பெற்றது.
அதை தொடர்ந்து மான்செஸ்டர் சிட்டி அணி தொடந்து கோல் அடிக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது, இதனால் முதல் லெக் போட்டியில் டோட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என முன்னிலையில் நீடித்தது.
மான்செஸ்டர் சிட்டி vs டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் - இரண்டாவது லெக் கண்ணோட்டம்
டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1 - 0 என்ற முன்னிலையுடன் களம் கண்டது. இந்த போட்டி மான்செஸ்டர் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் நட்சத்திர முன்கள வீரர் கேன் காயம் காரணமாக ஆடவில்லை.
முதல் பாதி கோல் மழை
ஆட்டம் துவங்கிய 4 வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்கள வீரர் ஸ்டெர்லிங் கோல் அடித்து அசத்தினார். சற்றும் அசராத டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு சொன் ஹியுங்-மின் 7வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். மீண்டும் 10வது நிமிடத்தில் எரிக்சன் கொடுத்த பந்தை லாவகமாக கோல் ஆக்கினார் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் வீரர் சொன் ஹியுங்-மின்.
11வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நடுகள வீரர் பெர்னாண்டோ சில்வா கோல் அடித்து 2-2 என சமன் செய்தார். மீண்டும் மான்செஸ்டர் சிட்டி 21வது நிமிடத்தில் டீ ப்ருயின் கொடுத்த பந்தை ஸ்டெர்லிங் கோல் அடித்தார் . இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 முன்னிலை பெற்றது.
முதல் பாதியில் மட்டுமே மொத்தம் 5 கோல்கள் இரு தரப்பில் இருந்தும் போடப்பட்டன.
இரண்டாம் பாதி - மான்செஸ்டர் சிட்டி முயற்சி வீண்
சொந்த மண்ணில் தோல்வியை தழுவ கூடாது என்பதற்காக தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த மான்செஸ்டர் சிட்டி அணிக்கு டீ ப்ருயின் கொடுத்த பந்தை 59வது நிமிடத்தில் நேர்த்தியாக கோலாக்கினார் நட்சத்திர வீரர் செர்ஜியோ அகுரோ. இதன் மூலம் 4-2 என முன்னிலை பெற்றது மான்செஸ்டர் சிட்டி அணி.
ஆனால், மனம் தளராத டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி, 73 வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி ட்ரிப்பியர் கொடுத்த பந்தை பின்களா வீரர் லோரெண்டே தலையில் முட்டி கோல் போஸ்டுக்குள் தள்ள கோல் கணக்கு 4-3 என ஆனது.
7 கூடுதல் நிமிடங்கள் கொடுத்தும் இரு அணிகளும் அதன் பிறகு கோல் அடிக்கவில்லை. முதல் லெக் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 1-0 எனவும், இரண்டாவது லெக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 எனவும் வென்றன. மொத்தம் 4-4 என்ற கணக்கில் காலிறுதி சுற்று சமனில் முடிந்தது.
இரண்டாவது லெக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வென்றிருந்தாலும், வெளி மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி கோல் ஏதும் போடவில்லை. மாறாக, டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் 3 கோல்கள் அடித்தது. இந்த விகிதத்தில் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
அரையிறுதி சுற்று
டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி அரையிறுதியில் அஜாக்ஸ் அணியை எதிர்கொள்கிறது.