2018-19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடர் பரபரப்பான லீக் சுற்றுகள் முடிந்து, தற்பொழுது காலிறுதி சுற்றுக்குள் 8 அணிகள் இடம்பெற்று, முதல் லெக் போட்டிகள் வெகு விறுவிறுப்புடன் முடிந்தும் விட்டன. இரண்டாம் லெக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
குறிப்பாக, சுற்று 16ல் நாம் கண்ட சில அதிர்ச்சி தரும் போட்டிகளில், முதலாவதாக, தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ரியல் மாட்ரிட் அணி அஜாக்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து அதிர்ச்சி அளித்தது.
அடுத்ததாக, பாரிஸ் அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் கடைசி நிமிடத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது.
காலிறுதி முதல் லெக்
பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் இரு அணிகளும் மோதிய காலிறுதி சுற்றின் முதல் லெக் போட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சொந்த மைதானமான ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.
இரு பலம் மிக்க அணிகள் மோதியதால் துவக்கத்திலிருந்து போட்டியில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்சி கொடுத்த பந்தை பார்சிலோனா அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் சுவாரேஸ் கோல் அடிக்க கோல் போஸ்டில் நோக்கி உதைத்தார். ஆனால் அதை தடுக்க முயற்சித்த மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தடுப்பாட்ட வீரர் லுக் ஷா காலில் பட்டு பந்து கோல் போஸ்ட்டின் உள்ளே போக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்த கோலாக மாறியது.
இதனால், துவக்கத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது பார்சிலோனா அணி. அதன்பிறகு, இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி கோல் அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து தாக்குதலை நடத்தியும் பார்சிலோனா அணியின் தடுப்பாட்ட வீரர்களை கடந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால், கால் இறுதியில் முதல் லெக் போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் லெக் - பார்சிலோனா மைதானம்
காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் பார்சிலோனா அணியின் கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெறுகிறது. 1-0 என முதல் லெக் போட்டியை இழந்த மான்செஸ்டர் உன்கிட்டேர் அணி, நிச்சயம் பதில் தாக்குதல் அளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கும். ஆனால், பார்சிலோனா அணியை அதன் சொந்த மைதானத்தின் ஆரவாரத்தில் வீழ்த்துவது அந்த அளவிற்கு எளிதான ஒன்றல்ல. இரு அணிகளுக்கும் இடையே ஒரு அனல் பறக்கும் ஆட்டத்தை நாம் நிச்சயம் காணலாம்.
நட்சத்திர வீரர்கள்
பார்சிலோனா அணி - மெஸ்ஸி, சுவாரேஷ், பிகே
மான்செஸ்டர் யுனைடெட் அணி - பால் போக்பா, லுக்காக்கு.
சாத்தியமான அணி வீரர்கள்
பார்சிலோனா அணி
கோல் கீப்பர் - டெர் ஸ்டெகன்;
பின்கள வீரர்கள் - செமடோ, பிக்கு, லெங்லட், ஆல்பா;
நடுகள வீரர்கள் - புஸ்கெட்ஸ், ஆர்தர், ராகிடிக்;
முனகள வீரர் - மெஸ்ஸி, சுவாரஸ், டேம்பேலே;
மான்செஸ்டர் யுனைடெட் அணி
கோல் கீப்பர் - டேவிட் டீ கே;
பின்கள வீரர்கள் - தால்ட், ஸ்மலிங், லிண்டலோஃப், யங்;
நடுகள வீரர்கள் - மேட்டி, போக்பா, ஃப்ரெட்;
முனகள வீரர் - மார்ஷியல், லூக்காக்கு, ராஷ்போர்ட்;
நேருக்கு நேர்
பார்சிலோனா மண்ணில் இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக, ஆடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது மான்செஸ்டர் யுனைடெட் அணி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் பார்சிலோனா அணி அதன் சொந்த மண்ணில் கொண்டிருக்கும் பலத்தை.
கணிப்பு
பார்சிலோனா மண்ணில் இதுவரை மான்செஸ்டர் யுனைடெட் அணி வென்றதே இல்லை. இம்முறையும் அதே நிகழ்வு தான் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இரண்டாவது லெக் போட்டியில் 2-0 ( மொத்தம் 3-0) வெல்லும் என யூகிக்கப்படுகிறது.