2018-19 ஆம் ஆண்டுக்கான UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டன. இதில் முதலில் நடந்து முடிந்த இரண்டு போட்டியில் ஜுவேண்டஸ் அணியை 3-2 என வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது அஜாக்ஸ் அணி. அதன் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கம்பீரமாக அரையிறுதிச் சுற்றுக்குள் சென்றது பார்சிலோனா அணி.
இரண்டாவது நாள் நடந்த காலிறுதி சுற்றின் முதல் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதின. இரண்டாவது போட்டியில், லிவர்பூல் மற்றும் போர்ட் இரு அணிகளும் மோதின.
போர்டோ மற்றும் லிவர்பூல் இரு அணிகள் மோதிய காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் ஆட்டத்தை நாம் காண்போம்.
போர்டோ vs லிவர்பூல் - முதல் லெக் பார்வை
லிவர்பூல் மற்றும் போர்டோ அணிகள் மோதிய காலிறுதிச் சுற்றில் முதல் லெக் போட்டி லிவர்பூல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி 5வது நிமிடத்தில் அந்த அணியின் நபி கெய்ட்டா ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 26 வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ ஒரு கோல் அடிக்க, முதல்பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போர்டோ அணி லிவர்பூல் அணியின் தடுப்பாட்ட வீரர்களை தாண்டிச் செல்ல முடியாமல் இறுதியில் கோல் ஏதும் அடிக்க முடியாமல் முதல் லெக் போட்டியை இழந்தது.
போர்டோ vs லிவர்பூல் - இரண்டாவது லெக் கண்ணோட்டம்
காலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டி போர்டோ அணியின் மைதானத்தில் நடைபெற்றது. 2 கோல்கள் முன்னிலையுடன் துவங்கிய லிவர்பூல் அணி இரண்டாவது லெக் போட்டியிலும் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது.
போட்டியின் 26வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் சாடியோ மானே முஹம்மது சாலா கொடுத்த பந்தை சிறப்பான கோல் ஆக்கினார். ஆட்டத்தின் முதல் பாதி 1-0 என்ற கணக்கில் முடிந்தது.
லிவர்பூல் அணி கோல் மழை
இரண்டாம் பாதியை துவங்கியதும் லிவர்பூல் அணிக்கு முன்கள வீரர் பிர்மின்ஹோ உள்ளே வந்தார். 65வது நிமிடத்தில் முஹம்மது சாலா கோல் அடிக்க போர்டோ அணியால் வேடிக்கை மட்டுமே பார்க்க நேர்ந்தது.
ஆனால், ஆறுதல் தரும் விதமாக 68வது நிமிடத்தில் ஈடேர் மிலிட்டவ் போர்டோ அணிக்கு ஒரு கோல் அடிக்க 1-2 என ஆனது. தொடர்ந்து தாக்குதல் நடத்திய பிர்மின்ஹோ 77வது நிமிடத்தில் கோல் அடிக்க 3-1 என முன்னிலையில் நீடித்தது லிவர்பூல். 84வது நிமிடத்தில் கிடைத்த கார்னெர் கிக் வாய்ப்பில் தலையில் முட்டி கோல் அடித்தார் லிவர்பூல் அணியின் பின்கள வீரர் டி ஜிக்.
இரண்டாவது லெக் போட்டியில் 4-1 எனவும், காலிறுதி சுற்றில் மொத்தம் 6-1 எனவும் வென்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி.
அரையிறுதி
அரையிறுதி சுற்றி பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை எதிர்கொள்கிறது லிவர்பூல் அணி.