2018 19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் பரபரப்பான லீக் சுற்றுகளை முடித்து விட்டு தற்பொழுது கால் இறுதியில் முதல் பகுதியில் உள்ளது. இதில் நேற்றைய முன்தினம் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியை டாட்டிங்ஹாம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் அணி போர்டோ அணியுடன் 2-0 என கோல் அடித்து முன்னிலை பெற்றது.
நேற்றைய நள்ளிரவு ஆட்டத்தில் ஜுவான்டஸ் அணி அஜாக்ஸ் அணியை எதிர்கொண்டது . இப் போட்டி அஜாக்ஸ் அணியின் சொந்த மைதானமான ஜூயன் க்ருய்ப் அரேனாவில் நடைபெற்றது. அஜாக்ஸ் அணி 3 முறை தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் அணியை சுற்று 16ல் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி காலிறுதிக்குள் நுழைந்தது .
அதேபோல பலம்வாய்ந்த அட்லெடிக்கோ மாட்ரிட் அணியை ஹாட்ரிக் கோல் அடித்து ஜுவேண்டஸ் அணியை வெல்ல செய்து காலிறுதிக்குள் முன்னேற உதவினார். இரு அணிகளும் அதீத பலத்துடன் நேற்றைய போட்டியில் மோதினர்.
ரொனால்டோ அசத்தல்
போட்டி துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜுவேண்டஸ் அணியின் வீரர் பெர்னாடெஸ்கி பந்தை கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். துரதிஷ்டவசமாக மயிரிழையில் கோல் மிஸ் ஆனது. இதனால் அஜாக்ஸ் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணி வீரர் சியாத் கோல் அடிக்க முயற்சித்து தவற விட்டார். அதேபோல 11 வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்டார்.
இம்முறை 45வது நிமிடத்தில் தடுப்பு வீரர் கன்சீலோ கொடுத்த பாஸை நேர்த்தியாக தலையில் முட்டி கோலாக்கினார் நட்சத்திர வீரர் ரொனால்டோ. முதல் பாதியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை உடன் முடித்தது ஜுவேண்டஸ் அணி.
பதிலடியுடன் துவங்கிய இரண்டாம் பாதி
இந்த முன்னிலையை நீண்ட நேரம் நிலைக்க விடவில்லை அஜாக்ஸ் அணி. இரண்டாம் பாதியில் முதல் நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணியின் முன்கள வீரர் நேரேஷ் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். இதன் பின்னரே அஜாக்ஸ் ரசிகர்களிடம் சற்று ஆறுதல் தென்பட்டது. 51 வது நிமிடத்தில் அஜாக்ஸ் வீரர் அடித்த கோல் அங்குலம் வித்தியாசத்தில் ஜுவேண்டஸ் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.
அதன்பின் ஜுவேண்டஸ் அணி வீரர் டியாகோ கோஸ்டா அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியே சென்றது. இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பின்னர் இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்தும் இறுதி நிமிடம் வரை எந்த ஒரு பயனும் இல்லை. கூடுதலாக ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்ட போதும் அதிலும் கோல் அடிக்க முடியாமல் காலிறுதி சுற்றில் முதல் லெக் சமநிலையில் முடிந்தது.
2வது லெக் போட்டி ஏப்ரல் 17-ம் தேதி ஜுவேண்டஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது.