2018-19 ஆம் ஆண்டு கண்ணன் சாம்பியன்ஸ் லீக் தொடரில் is காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் ஒரு போட்டியில் ஜுவேண்டஸ் மற்றும் அஜாக்ஸ் அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.
இதில் பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-0 என இரண்டாவது லெக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி மொத்தம் 4-0 என அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
மற்றுமொரு ஆட்டமான, அஜாக்ஸ் மற்றும் ஜுவேண்டஸ் அணிகள் மோதிய காலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்தின் கண்ணோட்டத்தை காண்போம்.
அஜாக்ஸ் vs ஜுவேண்டஸ் - முதல் லெக் ஒரு பார்வை
காலிறுதி சுற்றின் முதல் லெக் அஜாக்ஸ் அணியின் சொந்த மைதானமான ஜூஹான் க்ருய்ப் அரேனாவில் நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ரொனால்டோ கோல் அடித்தார். இரண்டாவது அதற்கு பதிலடி கொடுத்து அஜாக்ஸ் அணி ஒரு கோல் அடிக்க முதல் லெக் போட்டி 1 - 1 என சமநிலையில் முடிந்தது.
ஜுவேண்டஸ் vs அஜாக்ஸ் - இரண்டாவது லெக்
காலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டி ஜுவேண்டஸ் அணியின் சொந்த மைதானமான ஜுவேண்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.போட்டி துவங்கிய 12வது நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணி வீரர் கடுமையாக காயம் அடைந்து வெளியேறினார். இதற்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டது.
போட்டியின் 21 வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் முன்கள வீரர் நேரெஸ் அடித்த பந்தை ஜுவேண்டஸ் அணியின் கோல்கீப்பர் அற்புதமாக தடுத்ததால் ஜுவேண்டஸ் நிம்மதி பெருமூச்சு விட்டது. பிறகு, 28 வது நிமிடத்தில் நடுகள வீரர் பஜனி கொடுத்த பந்தை தலையில் முட்டி சிறப்பான கோலாக்கினார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதனால் இரண்டாவது லெக்கில் 1 - 0 என முன்னிலை பெற்றது ஜுவேண்டஸ்.
ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அஜாக்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜியாச் கொடுத்த பந்தை லாவகமாக கோலாக்கினார் அதே அணியின் நடுகள வீரர் வான் டீ பீக். இதனால் 1 - 1 சமன் ஆனது. மீண்டும் முன்னிலை பெற ஜுவேண்டஸ் அணி தொடர்ந்து முயற்சித்தும் பலன் இல்லாமல் போனது. இதனால், ஆட்டத்தின் முதல் பாதி 1 - 1 என இருந்தது.
இரண்டாம் பாதியில் அஜாக்ஸ் ஆதிக்கம்
முன்னிலை பெறுவதற்காக இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் போஸ்ட் நோக்கி தாக்குதல் நடத்தினர். இதில் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் ஜுவேண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போஸ்ட் நோக்கி அடிக்க அதை சிறப்பாக தடுத்தார் அஜாக்ஸ் அணி கோல் கீப்பர் ஓனானா. மேலும், அஜாக்ஸ் அணி நட்சத்திர வீரர் ஜியாச் ஆட்டத்தின் 61 வது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சித்து நூலிழையில் தவற விட்டார். தொடர்ந்து தாக்குதல் நடத்திய அஜாக்ஸ் அணி ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியது. அஜாக்ஸ் அணியின் சொனே கார்னரில் இருந்து அடித்த பந்தை தலையில் முட்டி கோலாக்கினார் அதே அணியின் பின்கள வீரர் டி லைட். இதனால் 2-1 என முன்னிலை பெற்றது.
அதன் பிறகு அடுத்தடுத்து பல முயற்சிகளை மேற்கொண்டும் ஜுவேண்டஸ் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில், காலிறுதி சுற்றின் இரண்டாவது லெக்கில் 2-1 எனவும், மொத்தம் 3-2 எனவும் பலம் மிக்க ஜுவேண்டஸ் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது அஜாக்ஸ் அணி.