ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றுகள் முடிந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு பிரீமியர் லீக் அணிகளாக டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் லிவர்பூல், ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியான லா லிகாவில் ஆடும் கிளப் அணியான பார்சிலோனா அணியும், டச்சு நாடுகளின் கால்பந்து அணிகளில் ஆம்ஸ்டர்டம் நாட்டை சேர்ந்த கிளப் அணியான அஜாக்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் லிவர்பூல் மற்றும் பார்சிலோனா இரு அணிகளும் மோதின. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணி பார்சிலோனா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அடுத்ததாக நடைபெற்ற அஜாக்ஸ் மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதிய அரையிறுதி போட்டியின் இரண்டாவது லெக் போட்டியின் கண்ணோட்டத்தை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
முதல் லெக் போட்டி ஒரு பார்வை
அஜாக்ஸ் மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதிய முதல் அரையிறுதி போட்டியின் முதல் லெக் போட்டி டொட்டிங்ஹாம் அணியின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் பாதியின் 15வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் இளம் வீரர் வான் டி பீக் கோல் அடித்து அணியை முன்னிலைக்கு எடுத்து சென்றார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கததால், முதல் லெக் போட்டி 0-1 என அஜாக்ஸ் அணிக்கு சாதகமாக முடிந்தது.
இரண்டாவது லெக் போட்டி ஒரு பார்வை
அஜாக்ஸ் அணி வெளி மைதானத்தில் பெற்ற முன்னிலையுடன் இரண்டாவது லெக் போட்டியை சொந்த மைதானத்தின் பலத்துடன் களம் இறங்கியது. அதே போலவே, முதல் பாதி முழுவதுமாக ஆட்டம் அஜாக்ஸ் அணி கைவசம் இருந்தது.போட்டி துவங்கிய 6வது நிமிடத்தில் இளம் வீரர் டி லைட், சொனே கொடுத்த பந்தை தலையில் முட்டி கோல் ஆக்கினார். இதனால் 2-0 என முன்னிலை பெற்றது. அடுத்தடுத்து, இரு முறை கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட அஜாக்ஸ் அணிக்கு, 35வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியினஅணியின் நட்சத்திர வீரர் ஜியாச் ஒரு கோல் அடிக்க, டொட்டிங்ஹாம் அணியிடம் மயான அமைதி. இம்முறை 3-0 என முன்னிலையுடன் முதல் பாதியை முடித்தது அஜாக்ஸ்.
இரண்டாவது பாதியில் செய்வதறியாது களமிறங்கிய டொட்டிங்ஹாம் அணிக்கு, அந்த அணியின் முன்கள வீரர் லூகாஸ் மோரா 55 மற்றும் 59வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடிக்க புத்துயிர் கிடைத்தது. மீண்டும் ஆட்டம் சூடு பிடித்தது. கூடுதல் நிமிடம் வரை 3-2 என்ற கணக்கில் அஜாக்ஸ் அணி முன்னிலையுடன் பைனலுக்குள் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தது. அந்த நம்பிக்கை களைக்க 90+6வது நிமிடத்தில் லுகாஸ் மோரா ஒரு கோல் அடித்தார். 3-3 என சமநிலை பெற்றாலும், வெளி மைதானத்தில் அதிக கோல்கள் (3 கோல்கள்) என்ற அடிப்படையில் டொட்டிங்ஹாம் அணி சாம்பியன்ஸ் லீக் பைனலுக்குள் சென்றது.
டொட்டிங்ஹாம் அணி பைனல் போட்டியில் சக பிரீமியர் லீக் அணியான லிவர்பூல் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட்-ல் நடைபெற உள்ளது.