ஐரோப்பிய கால்பந்தாட்ட தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றுகள் முடிந்து அரையிறுதிச் சுற்றினை எட்டியுள்ளது. காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இரு பிரீமியர் லீக் அணிகளாக டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் மற்றும் லிவர்பூல், ஸ்பெயின் நாட்டு லீக் போட்டியாக லா லிகாவில் ஆடும் கிளப் அணியான பார்சிலோனா அணியும், டச்சு நாடுகளின் கால்பந்து அணிகளில் ஆம்ஸ்டர்டம் நாட்டை சேர்ந்த கிளப் அணியான அஜாக்ஸ் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
அரையிறுதிச் சுற்றில் முதல் போட்டியில் அஜாக்ஸ் மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதின. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் லெக் போட்டி டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் கண்ணோட்டத்தை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் vs அஜாக்ஸ் - அரையிறுதி முதல் லெக் போட்டி கண்ணோட்டம்
டொட்டிங்ஹாம் அணி காலிறுதியில் பலம்மிக்க மான்செஸ்டர் சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் சிறப்பாக வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் காலடி பதித்தது. அதேபோல, அஜாக்ஸ் அணி சுற்று 16ல் ரியல் மாட்ரிட் அணியையும் மற்றும் காலிறுதியில் ஜுவேண்டஸ் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதால் இரு அணிகளும் தனி பலத்துடன் மோதின.
இப்போட்டி டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதால், அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மாறாக, துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது அஜாக்ஸ் அணி தான். ஆட்டத்தின் பதினைந்தாவது நிமிடத்தில் அஜாக்ஸ் அணி நட்சத்திர வீரர் ஜியாச் கொடுத்த பந்தை முன்கள வீரர் வான் டி பீக் கோல் அடித்து அசத்தினார். மேலும், 24 வது நிமிடத்தில் கோல் வாய்ப்பை மயிரிழையில் நழுவ விட்டார் வான் டி பீக். அதேபோல், 45+4வது கூடுதல் நேரத்தில் டொட்டிங்ஹாம் அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார் ஆல்டெர்வெரால்டு. இதனால், முதல் பாதியில் 1-0 என அஜாக்ஸ் அணி முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோல் அடிக்க முயற்சித்தனர். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் முன்கள வீரர் நேரெஸ் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு திரும்பியது. அதனை டொட்டிங்ஹாம் அணியின் வீரர்கள் அதிஷ்ட வசமாக, வெளியே தட்டி விட்டனர். இல்லையேல், 2-0 என பலமான முன்னிலை பெற்றிருக்கும் அஜாக்ஸ் அணி.
இறுதிவரை முயற்சித்தும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணியால் அஜாக்ஸ் அணியின் கோலை சமன் செய்ய முடியவில்லை.இறுதியில், அரையிறுதி போட்டியின் முதல் லெக் போட்டியை சொந்த மண்ணில் 0-1 என இழந்தது. டொட்டிங்ஹாம் அணி. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் போட்டியின் முடிவில் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இந்த இரு அணிகளுகுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது லெக் போட்டி அஜாக்ஸ் அணி மைதானத்தில் வரும் மே 9ஆம் தேதி நடைபெற உள்ளது.