புதிய பயிற்சியாளர் திறந்த மனதோடு வீரர்களை அணுகுகிறார் – இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் ஷேத்ரி

Sunil Chhetri
Sunil Chhetri

விரைவில் இந்திய உள்நாட்டு கால்பந்து லீக் தொடர் ஆரம்பமாகவுளள் நிலையில், அதற்குள் விரைவாக இதைச்சுற்றி நீடிக்கும் குழப்பத்தை தெளிவு படுத்துமாறு கால்பந்து லீக்கின் பங்குதாரர்களை கேட்டுக் கொண்டுள்ளார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி. இந்தியன் சூப்பர் லீக், இந்தியன் லீக்கோடு இணையுமா என இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதனால் உள்நாட்டு கால்பந்தின் எதிர்காலம் குறித்து ரசிகர்களும் வீரர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

“விரைவாக பதில் கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒட்டுமொத்த போட்டிக்கான அட்டவணை, எந்த அணி, எந்த லீக், எத்தனை போட்டிகள் போன்ற விஷயங்கள் தெரிந்தால் தான் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என அனைவரும் கடுமையாக உழைத்து வருவதை நான் அறிந்துள்ளேன். இதற்கான பதில் விரைவில் கிடைக்க வேண்டும் என நம்புகிறேன். அப்படி எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், உங்களைப் போன்ற ஊடகங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும்” என கூறுகிறார் சுனில் ஷேத்ரி.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக பதவியேற்றுள்ள இகோர் ஸ்டீமேக் தலைமையில், தாய்லாந்தில் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பைக்காக டெல்லியில் உள்ள முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது இந்திய கால்பந்து அணி. பயிற்சியின் கடைசி நாளன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார் ஷேத்ரி.

34 வயதான ஷேத்ரி, இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற இன்னும் ஒரு போட்டியே உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா 107 போட்டிகள் விளையாடி முதலிடத்தில் உள்ளார். “எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. என் வாழ்க்கையில் இப்போது தான் நல்ல உடல் தகுதியோடு உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. இப்படி நான் சொல்வது வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் இது தான் உண்மை” என்கிறார் ஷேத்ரி.

மேலும் அவர் கூறுகையில், “சரியான உணவை உட்கொண்டு, சரியான பயிற்சியை எடுத்து, இப்போது தான் என் வாழ்க்கையில் ஒழுக்கமும் அறிவும் உச்சத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் தான் நான் ஃபிட்டாக இருக்கிறேன். கிங்ஸ் கோப்பைக்காக இங்கு 7-8 நாட்கள் பயிற்சி எடுத்து வருகிறோம். எங்கள் பயிற்சியாளரின் செயல் திட்டம் மற்றும் தொழில்நுட்ப அறிவு குறுத்து அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக உள்ளோம். இதன் மூலம் பல விஷயங்களை புரிந்து கொண்டு எங்க்ளை மேம்படுத்தி கொண்டுள்ளோம்” என்றார்.

Igor Stimac
Igor Stimac

“ஸ்டீமேக் வீரர்களை மேலாண்மை செய்யும் விதம் அருமையாக உள்ளது. ஒவ்வொரு வீரரிடமும் தனித்தனியாக பேசுகிறார். திறந்த மனதோடு இருப்பதால், அவரிடம் எந்த நேரம் வேண்டுமென்றாலும் வீரர்கள் பேசலாம். ஒரு வீரராகவும் அவர் இருந்ததால், அவர்களுக்கு என தேவை என்பதை அவரால் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது” என பயிற்சியாளர் குறித்து மனம் திறகிறார் ஷேத்ரி. இதுவரை 67 கோல்கள் அடித்துள்ள சுனில் ஷேத்ரி, சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் முன்னனியில் உள்ளார்.

ஜூன் 5-ம் தேதி தாய்லாந்து நாட்டில் கிங்ஸ் கோப்பை தொடங்கவுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் குராகுவா நாட்டை எதிர்கொள்ள உள்ளது. புதிய பயிற்சியாளரின் கீழ் முதல் போட்டியை சந்திக்கவுள்ள இந்தியா, தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

Edited by Fambeat Tamil