கால்பந்து விளையாட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு, எதிர்காலத்தில் பயிற்சியாளர் ஆகும் திட்டம் உள்ளதாக பார்சிலோனா அணியின் முன்னாள் வீரரும் ஸ்பெயின் அணிக்காக உலக கோப்பை பெற்று தந்தவருமான ஆண்ட்ரே இனியஸ்டா கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு இனியஸ்டாவின் திறமைகள் குறித்து நன்றாக தெரிந்திருக்கும். தான் விளையாடிய பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்த இனியஸ்டா, கால்பந்தின் சிறந்த மத்திய கள ஆட்டக்காரராக சென்ற ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஸ்பெயின் அணி யூரோ கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை (2008 & 2012) வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் இனியஸ்டா. அதுமட்டுமின்றி, 2010-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 116-வது நிமிடத்தில் இனியஸ்டா அடித்த கோலை எந்த கால்பந்து ரசிகராலும் அவ்வுளவு சீக்கிரத்தில் மறந்திருக்க முடியாது. அந்த ஒரு கோலின் மூலம், முதல் முறையாக ஸ்பெயின் அணி உலக கோப்பை வெல்லவதற்கு காரணமாக இருந்தார்.
தனது தேசிய அணிக்காக எந்தளவிற்கு முழு மூச்சோடு விளையாடினாரோ, அதே அளவிற்கு தனது கிளப் அணியான பார்சிலோனா அணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார் இனியஸ்டா. பார்சிலோனா அணிக்காக 650-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள இனியஸ்டா, உலக கால்பந்து அரங்கில் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக நிச்சியம் வரலாற்றில் இடம் பிடிப்பார். பார்சிலோனா மற்றும் ஸ்பெயின் தேசிய அணியிலிருந்து சென்ற ஆண்டு ஓய்வு பெற்றுள்ள இனியஸ்டா, தற்போது ஜப்பான் லீக்கில் விசெல் கோபே என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் மார்கா இதழுக்கு பேட்டியளித்துள்ள இனியஸ்டா, “முன்பெல்லாம், பயிற்சியாளர் ஆகும் எண்ணம் எனக்கு தோன்றியதில்லை. ஆனால் தற்போது, எதிர்காலத்தில் வாய்பிருந்தால் பயிற்சியாளர் ஆக வேண்டும் என நினைத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “லா லீகாவை விட்டு நான் விலகியிருந்தாலும் பார்சிலோனா அணி விளையாடும் போட்டியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பார்த்து வருகிறேன். இப்போது நான் ஜப்பானில் இருப்பதால் போட்டி நடைபெறும் நேரமும் இங்குள்ள நேரத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இதனால் பல போட்டிகளை பார்க்க முடியாமல் போகிறது. இங்கிருக்கும் வரை, தூங்குவதற்கு விருப்பம் இல்லாமல் இருந்தால் மட்டுமே உங்களால் பல லா லீகா போட்டிகளை பார்க்க முடியும்” என வருத்தப்படுகிறார்.
தனது ஜப்பான் வாழ்க்கை குறித்து பேசிய இனியஸ்டா, “இப்போது தான் எல்லாம் சீராக ஆனது போல் தெரிகிறது. தினசரி வாழ்விலும் சரி, விளையாட்டு நிலையிலும் சரி, மாற்றம் எப்போதுமே அழுத்தம் தரக்கூடியது. கால்பந்தை பொறுத்தவரை, இப்போது எனக்கு புதிய அணி, புதிய வீரர்கள், புதிய வகையான மைதானம், புதிய அரங்கம் மற்றும் வேறு வகையான எதிரணிகள். இவை எல்லாம் நிச்சயம் உங்கள் மீது தாக்கம் செலுத்தும்” என்கிறார்.
பயிற்சியாளர் பதவிக்கு கூடிய விரைவில் வருவார் என்றாலும், தற்போதைய நிலையில் இனியஸ்டாவின் கவனம் முழுவதும் ஜப்பான் லீக்கில் தான் உள்ளது. வெகல்டா செண்டல் என்ற அணிக்கு எதிராக இவரது அணி ஏற்கனவே ஒரு போட்டியில் தோற்றுள்ளது. அதனால் இந்த அணிக்கு எதிராக மறுபடியும் மார்ச் 10-ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் நிச்சியம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் இனியஸ்டா.