கோப்பா அமெரிக்கா 2019: தங்க காலனி விருது வெல்ல வாய்ப்புள்ள 3 வீரர்கள்

sergio aguero
sergio aguero

இது யூரோ கோப்பை போன்று பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால், சர்வதேச கால்பந்தில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தொடர்களில் இதுவும் ஒன்று. இதில் ப்ரீமியர் லீக் முதல் லீகு1 தொடர் வரையுள்ள வீரர்கள் தங்கள் தேசிய அணிக்காக விளையாட உள்ளனர். ஆம், நான் கூறுவது கோப்பா அமெரிக்கா தொடர் பற்றியே.

அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கும் 46-வது கோப்பா அமெரிக்க தொடர், வருகிற ஜூன் 14-ம் தேதி பிரேசில் நாட்டில் தொடங்கவுள்ளது. ஆசிய அணிகளான ஜப்பான் மற்றும் கத்தார் அணிகளும் இந்த வருடம் கலந்துகொள்ள உள்ளன.

பல நாடுகளைச் சேர்ந்த திறமையான வீரர்கள் விளையாடவுள்ள நிலையில், இந்த தொடரில் அதிக கோல் அடித்து தங்க காலனி விருதை பெற வாய்ப்புள்ள 3 வீரர்கள் பர்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

3. செர்ஜியோ ஆகுவேரா – அர்ஜெண்டினா

செர்ஜியோ ஆகுவேரா போன்ற ஆபத்தான ஸ்ட்ரைக்கர்கள் ஒரு சிலரே உள்ளனர். சமீபத்தில் நிறைவடைந்த ப்ரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் பெற்ற மான்செஸ்டர் சிட்டி அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டார் ஆகுவேரா. மான்செஸ்டர் அணிக்காக 43 போட்டிகளில் கலந்து கொண்டு 32 கோல்கள் அடித்து சிறந்த ஃபார்மில் உள்ள ஆகுவேரா, பிரேசிலில் விளையாடி தனது அர்ஜெண்டினா அணிக்கு கோப்பை வென்று தர தயாராக உள்ளார்.

கடந்த காலங்களில் கொன்சாலோ ஹுகுயன் மற்றும் கார்லோஸ் தாவேஸ் போன்ற வீரர்கள் இருந்ததால் சரியான வாய்பு கிடைக்காத ஆகுவேரா, பல சமயங்களில் மெஸ்ஸியின் பக்கவாத்தியமாகவே இருந்து வந்தார். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. இந்த முறை அர்ஜெண்டினா அணியின் தாக்குதல் ஆட்டத்தை இவரே முன்னெடுத்து செல்ல உள்ளார்.

2. துவான் ஜபாடா – கொலம்பியா

Duvan Zapata
Duvan Zapata

சீரி ஏ தொடரின் இந்த வருட நட்சத்திர வீரராக திகழும் துவான் ஜபாடா, கடந்த பத்து மாதங்களில் தனது அசாத்திய திறமையால் பல உச்சங்களை தொட்டுள்ளார். இவரது சிறப்பான ஃபார்மை பார்த்து 23 பேர் கொண்ட அணியில் சேர்த்துக் கொண்டார் பயிற்சியாளர் குய்ரோஸ். கொலம்பிய அணிக்காக இவர் பங்கேற்கும் முதல் சர்வதேச தொடர் இது தான்.

அட்லாண்டா அணிக்காக இந்த வருடம் 37 போட்டிகள் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார் ஜபாடா. ரொனால்டோ அடித்த கோலை விட இரண்டு கோல் இவர் அதிகமாக அடித்துள்ளார். அதோடு தனது சிறப்பான ஆட்டத்தால் அட்லாண்டா அணியை முதல் முறையாக சம்பியன்ஸ் லீக் கோப்பைக்கு தகுதி பெற வைத்துள்ளார். இதே ஃபார்மில் பிரேசிலுக்கு செல்லும் ஜபாடா, கொலம்பிய அணிக்கு தூணாக விளங்குவார் என எதிர்பார்க்கலாம்.

1. லியோனல் மெஸ்ஸி – அர்ஜெண்டினா

Lionel Messi
Lionel Messi

தங்க காலனி என்றால் அதில் மெஸ்ஸி பெயர் இல்லாமல் போகுமா? சமீபத்தில் தான் ஆறாவது முறையாக ஐரோப்பிய தங்க காலனி விருதை வென்றுள்ளார் மெஸ்ஸி. இந்த வருடமும் அனைத்து போட்டிகளையும் சேர்த்து ஐம்பதுக்கும் மேலான கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, வழக்கம் போல தனது பார்சிலோனா அணியை லா லீகா கோப்பை வெல்வதற்கு உதவி செய்துள்ளார்.

ஆனால், அர்ஜெண்டினா உடையை அணிந்து கொண்டால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதுவரை அர்ஜெண்டினா அணிக்காக எந்த சர்வதேச கோப்பையும் பெற்று தராதவர் என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளார் மெஸ்ஸி. இந்த முறை தங்க காலனி விருதை வெல்ல மெஸ்ஸிக்கு அதிக வாய்பிருந்தாலும், கோப்பையை பெற்று தருவாரா என்ற கேள்வி தான் ரசிகர்கள் மனதில் உள்ளது.

Edited by Fambeat Tamil