“நீல வானம்” என்றழைக்கப்படும் உருகுவே அணி கோப்பா அமெரிக்க தொடர் தொடங்கியதிலிருந்து பங்கேற்று வருகிறது. கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்கர் தபரேஸ் தலைமையில் 16-வது முறையாக கோப்பை வெல்ல தயாராகி வருகிறது உருகுவே. கடைசியாக, 2011-ம் ஆண்டு நட்சத்திர வீரர் டியாகோ ஃபோர்லான் தலைமையில் கோப்பா அமெரிக்க கோப்பையை வென்றது உருகுவே. அந்த அணியில் இளம் வீரராக லூயிஸ் சாரெஸ் இடம் பெற்றிருந்தார்.
2018 உலக கோப்பையில் தனியொரு வீரரை சார்ந்திராமல், ஒட்டுமொத்தமாக சிறந்த அணியாக விளங்கியது உருகுவே. ஆனால் பிரான்ஸ் அணியிடம் எதிர்பாராமல் காலிறுதி போட்டியில் தோல்வியுற்றது உருகுவே. இந்த முறை கோப்பா அமெரிக்காவையும் எளிதாக வெல்ல முடியாது போல் தான் தெரிகிறது. ஏனென்றால், உருகுவே இடம்பெற்றுள்ள க்ரூப் C-யில் ஜப்பான், நடப்பு சாம்பியன் சிலி மற்றும் கணிக்க முடியாத ஈகுவடார் அணிகள் இடம் பெற்றுள்ளது.
முக்கியமான வீரர்கள்:
லூயிஸ் சாரெஸ்
உருகுவே அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கும் லூயிஸ் சாரெஸ், சக வீரரான கவானியோடு சேர்ந்து சரியான புரிதலில் விளையாடுவார். பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கவானி கோல் அடிக்கும் திறன் உள்ளவர் என்றாலும், அவரை விட சாரெஸ் எதிரணிக்கு ஆபத்தானவர். 2011-ம் ஆண்டு நான்கு கோல்கள் அடித்து கோப்பா அமெரிக்காவின் சிறந்த வீரர் விருதை வென்ற சாரெஸ், 2018 உலக கோப்பையிலும் உருகுவே அனியில் முக்கிய பங்காற்றினார். இந்த சீசனில் பார்சிலோனா அணிக்காக 21 கோல்கள் அடித்துள்ளார் சாரெஸ். காயத்தால் அவதிப்பட்டு வரும் சாரெஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னர் முழு உடல் தகுதி பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டியாகோ கோடின்
உருகுவே அணியின் கேப்டனும் தடுப்பாட்ட வீரருமான டியாகோ கோடின், பல ஆண்டுகளாக உருகுவே அணியின் மையமாக திகழ்கிறார். 6.2 அடி உயரம் கொண்ட கோடின், உண்மையில் வலிமையான தடுப்பாட்டகாரர். 2018 பிஃபா கனவு அணியின் இடம் பெற்றுள்ளதோடு மூன்று தனித்தனி சீசன்களில் UEFA அணியில் இடம் பெற்றுள்ளார். அதோடு 2015/16 சீசனில் லா லீகாவின் சிறந்த தடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது முக்கியத்துவத்தை காண்பிக்க இந்த சாதனை போதுமா?
லுகாஸ் டொரேரியா
அணியில் சிறந்த தடுப்பாட்ட வீரர் உள்ளார். சிறந்த ஸ்ட்ரைக்கர் உள்ளார். இப்போது வேண்டியது ஒரு சிறந்த மிட் ஃபீல்டர் மட்டுமே. மைதானத்தின் ஒவ்வொரு இன்ச்சையும் கவர் செய்யும் லுகாஸ் டொரேரியா அதற்கு தான் இருக்கிறார். 2018 உலக கோப்பையில் கண்டெடுக்கப்பட்ட இந்த மிட் ஃபீல்டர், தற்போது ஆர்செனல் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது திறனும், அணுகுமுறையும், மன வலிமையும் இவரை ஆர்செனல் அணியின் சிறந்த மிட் ஃபீல்டர்களில் ஒருவராக மாற்றியுள்ளது. இந்த இளம் வயதிலேயே உருகுவேயின் போராடும் குணத்தை களத்தில் வெளிப்படுத்துகிறார். நிச்சியம் இவரது பங்களிப்பு உருகுவே அணியின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கும்.
போட்டி அட்டவணை:
ஜூன் 16 – உருகுவே Vs ஈகுவடார்
ஜூன் 20 – உருகுவே Vs ஜப்பான்
ஜூன் 24 – உருகுவே Vs சிலி