46-வது கோப்பா அமெரிக்கா தொடர் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ளது. 12 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் ஆசிய நாடுகளான ஜப்பானும் கத்தாரும் பங்கேற்கவுள்ளன. தொடரின் இறுதிப் போட்டி புகழ்பெற்ற மரக்கானா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இப்போது கோப்பா அமெரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
3. உருகுவே
பயிற்சியாளர் ஆஸ்கர் தபாரெஸ் தலைமையில் வந்துள்ள உருகுவே, இந்த வருடம் நிச்சியம் கோப்பை வெல்லக் கூடிய அணியாக திகழ்கிறது. கோப்பா அமெரிக்காவை 15 முறை வென்று அதிக முறை கோப்பை வென்ற அணிகள் பட்டியலில் முதலிடத்தில் உருகுவே தான் உள்ளது. மேலும், இந்த அணியில் லூயிஸ் சாரெஸ், எடிசன் கவானி மற்றும் டியகோ கோடின் போன்ற உலகத்தரமான வீரர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களை கொண்டுள்ள அணியாக உருகுவே திகழ்கிறது. முன்களத்தில் சாரெஸ், கவானி கூட்டணி நிச்சியம் எதிரணியின் தடுப்பாட்டத்திற்கு கிலியை உண்டாக்கும். இன்னும் காயத்தில் இருந்து மீளாத சாரெஸ் முதல் இரு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு குறைவே.
மிட் ஃபீல்டில் தான் உருகுவே பலமிக்கதாக உள்ளது. லுகாஸ் டொரேரியா, ரோட்ரிகோ பெண்டன்குர் மற்றும் மட்டியாஸ் வெசினோ போன்ற உலகின் சிறந்த மிட்ஃபீல்டர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். மற்றொரு வீரரான ஃபெட்ரிக்கோ வல்வெர்டே இந்த தொடரில் தாக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
இப்படி பல திறமையான வீரர்களை கொண்டு திகழ்வதால் கோப்பை வெல்லும் அதிக வாய்ப்புள்ள பிரேசில் அணிக்கு உருகுவே கடுமையான போட்டியை அளிக்கும்.
2. அர்ஜெண்டினா
கடந்த சில வருடங்களாக சர்வதேச தொடர்களில் அர்ஜெண்டினா சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. கடைசியாக அர்ஜெண்டினா வென்ற முக்கியமான சர்வதேச கோப்பை என்றால் 1993-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்றது தான். உலகப் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் மெஸ்ஸி அணியில் இருந்தும் இதுவரை அர்ஜெண்டினாவால் எந்த கோப்பையையும் வெல்ல முடியவில்லை.
அர்ஜெண்டினாவின் தாக்குதல் ஆட்டத்தை மெஸ்ஸி மற்றும் செர்ஜியோ ஆகுவேரோ தலைமையேற்று நடத்துவார்கள். இவர்கள் தவிர, டைபாலா, டீ மரியா மற்றும் மார்டினெஸ் போன்ற வீரர்களும் அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள். மிட் ஃபீல்டர் பொசிஷனிலும் பலமாகவே காணப்படுகிறது. லோ செல்சோ இந்த வருட லா லீகாவில் பெடிஸ் அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார். இதே ஃபார்மை தனது தேசிய அணிக்காகவும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
ஓய்வு பெறுவதற்கு முன் அர்ஜெண்டினா அணிக்கு ஒரு கோப்பையாவது வென்று கொடுத்து விட வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் மெஸ்ஸிக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. 26 வருடங்கள் கழித்து கோப்பை வெல்லுமா அர்ஜெண்டினா? பொறுத்திருந்து பார்ப்போம்.
1. பிரேசில்
இப்போதைய பிரேசில் அணியை முழுமையான அணி என்று கூறலாம். ஏனென்றால் ஒவ்வொரு நிலையிலும் உலகத்தரமான வீரர்களை கொண்டுள்ளது பிரேசில். இந்த முறை கேப்டன் பதவியிலிருந்து நெய்மர் நீக்கப்பட்டு டேனி ஆல்வ்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது பிரேசில். கடைசியாக அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2007-ம் ஆண்டு கோப்பா அமெரிக்கா கோப்பையை வென்றது பிரேசில். அதனால் இந்த முறை நட்சத்திர வீரரும் சர்சை நாயகருமான நெய்மர் மீது அதிக அழுத்தம் உள்ளது.
மார்செலோ மற்றும் ஃபேபினோ போன்ற பிரபல வீரர்கள் அணியிலிருந்து நீக்கபட்டாலும் அவர்களின் இடத்தை நிரப்ப பல சிறந்த வீரர்கள் அணியில் உள்ளனர். பிரேசிலின் தாக்குதல் ஆட்டம் நெய்மர், கவுண்டினோ மற்றும் கேப்ரியல் ஜீசஸ் பொறுப்பில் உள்ளது. மற்றொரு ஸ்ட்ரைக்கரான ரபர்டோ ஃபிர்மினோவும் அணியில் உள்ளார். இதனால் மிக ஆபத்தான தாக்குதல் கூட்டணியை கொண்டுள்ளது பிரேசில்.
இப்படி பலம் வாய்ந்த அணியாக திகழும் பிரேசிலே இந்த முறை கோப்பை வெல்ல அதிக வாய்புள்ளது.