அடுத்த மாதம் நடைபெறவுள்ள கோப்பா அமெரிக்கா போட்டிக்கான பிரேசில் அணியின் கேப்டனாக 36 வயதான டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இனி பிரேசில் அணியின் நிரந்தர கேப்டன் நட்சத்திர வீரர் நெய்மர் தான் என சென்ற வருடம் பிரேசில் பயிற்சியாளர் கூறியிருந்த நிலையில், இப்படியொரு முடிவை எடுத்துள்ளது பிரேசில் கால்பந்து நிர்வாகம்.
இதுகுறித்து பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவு குறித்து பயிற்சியாளர் டைட்டீ மூலம் நெய்மரிடம் ஏற்கனவே கூறப்படுள்ளது” என தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடிவரும் நெய்மர், இடையில் காயம் காரணமாக விலகியிருந்த போதிலும் இந்த சீசனில் மொத்தம் 23 கோல்களை அடித்துள்ளார்.
நெய்மர் மீது தொடர்ச்சியாக எடுக்கபட்ட ஒழுங்கு நடவடிக்கைகளே கேப்டன் பதவியை விட்டு அவரை தூக்கியதற்கு முக்கிய காரணம் என பலர் கூறுகின்றனர். இந்த மாதம் கூப் டீ பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் ரென்னஸ் அணியும் மோதியது. இதில் அதிர்ச்சிக்குள்ளான வகையில் பிஎஸ்ஜி அணி தோல்வியுற்றது. தோல்வியால் ஏற்பட்ட கோபத்தில், எதிரணியின் ரசிகரை தாக்கியுள்ளார் நெய்மர். இதற்காக மூன்று போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டார். மேலும், அவ்வப்போது பிஎஸ்ஜி அணி வீரர்களோடு டிரஸிங் அறையில் சண்டையில் நெய்மர் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
சமீப காலமாக டைட்டீயின் பயிற்சியின் கீழ் பிரேசில் அணியில் சுழற்சி முறையில் கேப்டன்சி பொறுப்பு வழங்கப்படுகிறது. குறிப்பாக, அணுபவம் வாய்ந்த வீரர்களான மார்சிலோ, கேசிமிரோ, நெய்மர், டேனி ஆல்வ்ஸ் மற்றும் தியாகோ டி சில்வா போன்றவர்களுக்கு நட்பு முறையிலான போட்டிகள், உலக கோப்பை தகுதிச் சுற்று மற்றும் 2018 பிஃபா உலக கோப்பை போட்டிகளில் கேப்டன் பொறுப்பு தரப்பட்டது.
கோப்பா அமெரிக்கா தொடருக்கு நெய்மர் தான் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால், நெய்மரின் கேப்டன்சியின் கீழ் தான் 2016 ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணி தங்கப் பதக்கம் வென்றது.
கோப்பா அமெரிக்கா தொடருக்கான 23 பேர் கொண்ட பிரேசில் அணியில் மிகவும் அணுபவம் வாய்ந்தவர் டேனி ஆல்வ்ஸ் தான். இவர் இதுவரை 107 போட்டிகளில் விளையாடியுள்ளார். காயம் காரணமாக மற்றொரு மூத்த வீரர் தியாகோ டி சில்வா குரூப் போட்டிகளில் விளையாட முடியாத காரணத்தினால், டேனியே கேப்டன்சி பொறுப்பிற்கு சரியான நபராக இருப்பார்.
கோப்பா அமெரிக்க தொடங்குவதற்கு முன்பாக கத்தார் மற்றும் ஹோண்டுராஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் நட்புறவு போட்டிகளுக்கும் டேனி ஆல்வ்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை நான்கு முறை பிரேசில் அணிக்கு கேப்டனாக இருந்துள்ள ஆல்வ்ஸ், சமீபத்தில் இவரது கேப்டன்சியின் கீழ் ஜெர்மனிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பிரேசில். மேலும், நட்சத்திர வீரர் நெய்மர் விளையாட்டின் மீது மட்டும் கவனம் செலுத்துவதற்காகவே கேப்டன்சி பொறுப்பு அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேசில் அணியோடு பொலிவியா, பெரு மற்றும் வெனிசுலா நாடுகள் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன. தங்களது முதல் போட்டியில் பொலிவியா அணியை ஜூன் 14-ம் தேதி சந்திக்கவுள்ளது பிரேசில். இதற்கிடையில், கோப்பா அமெரிக்கா தொடங்க இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், நேற்று நடந்த பயிற்சி முகாமில் நெய்மர் காயம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.