களத்தில் கால்பந்தை துரத்துகிறாரோ இல்லையோ, நெய்மரை சர்ச்சை விடாமல் துரத்துகிறது. உலகிலேயே விலை மதிப்புமிக்க வீரர் என கூறப்பட்டாலும், பிரேசில் மற்றும் பிஎஸ்ஜி அணியில் நெய்மருக்கு இந்த வருட சீசன் மோசமாகவே அமைந்துள்ளது. அடிக்கடி காயம் ஏற்படுதல், நடுவரை அவமதித்த காரணத்திற்காகவும் ரசிகர்களை தாக்கிய காரணத்திற்காகவும் தனித்தனியே போட்டியில் ஆட தடை, பிரேசில் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கம் மற்றும் வண்புணர்வு குற்றச்சாட்டு என களத்திலும், களத்திற்கு வெளியேயும் சர்ச்சையின் நாயகனாக இந்த வருடம் இருந்துள்ளார் நெய்மர்.
கடந்த சில மாதங்களாக நெய்மர் தொடர்பான சர்சைகளின் தொகுப்பே இந்தக் கட்டுரை.
அதே கால், அதே காயம்:
பட்ட காலிலே படும் என்பது போல், நெய்மருக்கும் காயத்திற்கும் அவ்வுளவு பொருத்தம். ஜனவரி மாதம் பிரெஞ்ச் கோப்பை போட்டியில், பிஎஸ்ஜி அணி ஸ்டார்ஸ்பர்க் அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த சமயத்தில் நெய்மருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதே காலில் தான் 13 மாதங்களுக்கு முன்பு அவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்சைக்குரிய கேளிக்கை திருவிழா
காயத்திலிருந்து முழுதும் மீளாத நிலையில், மார்ச் மாதம் சால்வடார் மற்றும் ரியோவில் நடைபெற்ற கேளிக்கை திருவிழாவில் நெய்மர் நடனம் ஆடிய புகைப்படமும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுவர் மீதான சீற்றம்
காயம் காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடாமல், போட்டியை அரங்கிலிருந்து பார்வையிட்டார் நெய்மர். இந்தப் போட்டியில் தனது அணியான பிஎஸ்ஜி சர்சைக்குரிய முறையில் தோல்வியுற்றதும், “இது அவக்கேடான விஷயம். கால்பந்தை பற்றி தெரியாத நான்கு பேர் தொலைக்காட்சி முன் உட்கார்ந்து ஸ்லோ மோஷனில் போட்டியை பார்க்கிறார்கள்” என தனது இன்ஸ்டாகிரமில் போட்டி நடுவர்கள் குறித்து வசைபாடினர் நெய்மர். இதனால் மூன்று போட்டிகளில் விளையாட நெய்மருக்கு தடை விதித்தது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு.
வருமான வரி விசாரணை
2017-ம் ஆண்டு பார்சிலோனா அணியில் ஒப்பந்த நீட்டிப்பின் போது போனஸ் மூலமாக கிடைத்த வருவாய் குறித்தும் பிஎஸ்ஜி அணிக்காக 222 மில்லியன் யூரோ தொகைக்கு ஓப்பந்தம் ஆகும் போது கிடைத்த வருமானம் குறித்தும் ஸ்பெயின் நாட்டு வருமான துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ரசிகர் மீதான தாக்குதல்
பிரெஞ்ச் கோப்பை இறுதிப் போட்டியில் ரெனஸ் அணி நெய்மரின் பிஎஸ்ஜி அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோற்கடித்தது. அன்று பிஎஸ்ஜி அணிக்காக கோல் அடித்திருந்தாலும், தோல்வியின் விரக்தியில் இருந்த நெய்மர் ரசிகர் ஒருவரை கடுமையாக தாக்கினார்.
பிரேசில் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கம்
கோப்பா அமெரிக்கா தொடர் தொடங்க முன்று வாரங்களே இருந்த நிலையில், நெய்மரிடம் இருந்த கேப்டன் பதவியை பறித்து அணுபவ வீரரான டேனி ஆல்வ்ஸ்-யிடம் கொடுத்தார் பயிற்சியாளர் டைட்டீ. இந்த சம்பவம் நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு தான், கோப்பா அமெரிக்கா தொடருக்கு தயாராவதற்காக பிஎஸ்ஜி அணியின் கடைசிப் போட்டியிலிருந்து விலக்கு பெற்று வந்திருப்பதாக கூறினார் நெய்மர். ஆனால் அவருக்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என பிஎஸ்ஜி அணி கூறியது.
வண்புணர்வு குற்றச்சாட்டு
சம்மதம் இல்லாமல் வன்முறையை உபயோகித்து தன்னை வன்புணர்வு செய்துவிட்டார் என நெய்மர் மீது பெண் ஒருவர் சவோ பவுலோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நெய்மர், “இது அபாண்டமான பொய் குற்றச்சாட்டு. இப்படியொரு சம்பவம் நடைபெறவே இல்லை” என கூறியுள்ளார்.