ஐரோப்பாவில் பலநாடுகள் உள்ளன. எல்லா நாடுகளிலும் அடிப்படையாக ஒன்று உள்ளது. அதுதான் கால்பந்து. கால்பந்து, ஐரோப்பா மக்களின் அன்றாட ஒரு பேச்சுப் பொருளாக மாறிவிட்டது. ஐரோப்பாவில் பல நாடுகள் தங்கள் நாடுகளில் லீக் தொடரை நடத்துகின்றனர். இந்த லீக் தொடர் கடந்த 150 வருடமாக நடந்துவருகிறது. இதில் ஜெர்மனி நாட்டில் நடக்கும் லீக் தொடர் தான் "புண்டேஸ்லிகா". இது ஐரோப்பாவின் மூன்றாவது மிகப் பெரிய லீக் தொடராகும். இதில் மொத்தம் 18 அணிகள் விளையாடுகிறது. இதில் விளையாடும் ஒரு அணியைப் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
டார்ட்மண்ட்:
ஜெர்மனியில் உள்ள "டார்ட்மண்ட்" மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அணிதான் டார்ட்மண்ட். இந்த அணி ஜெர்மன் புண்டேஸ்லிகா லீக் டைட்டில்-க்கு போட்டி போடுகிறது. இந்த அணி இதுவரை எட்டு முறை புண்டேஸ்லிகா லீக்-ஐ வென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐரோப்பாவின் மிகப்பெரிய லீக்கான "சாம்பியன்ஸ் லீக்" தொடரை ஒரு முறை வென்றுள்ளது. ஜெர்மனியின் உள்ளூர் லீக்கான DFB போகேல்ஸ்-ஐ நான்கு முறை வென்றுள்ளது. கடைசியாக புண்டேஸ்லிகா தொடரை டார்ட்மண்ட் 2011 - 12ல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சிக்னல் இடுனா பார்க் :
டார்ட்மண்ட் தனது ஹோம் மைதானமாக வெஸ்ட் ஜெர்மனியில் உள்ள சிக்னல் இடுனா பார்க் மைதானத்தை பயன்படுத்தி வருகிறது. இந்த மைதானத்துக்கும் டார்ட்மண்ட் அணிக்கும் உள்ள ஒரு பெருமை என்னவென்றால், ஐரோப்பாவில் நடக்கும் எல்லா போட்டியைவிடவும் டார்ட்மண்ட் ஹோம் மைதானமான சிக்னல் இடுனா பார்க்கில் நடக்கும் போட்டிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
டெர்பி :
ஐரோப்பாவை பொறுத்தவரை ஒவ்வொரு அணிக்கும் ஒரு தனிப்பட்ட எதிரி அணி உண்டு. எடுத்துக்காட்டாக, இப்போது ஒரே மாகாணத்தில் இரு அணிகள் மோதிக்கொண்டால் அதை டெர்பி என்று அழைப்பார்கள். அதேபோல் டார்ட்மண்ட் அணிக்கும் ஒரு எதிரி அணி உண்டு, அந்த அணியின் பெயர் ஸ்சாள்கே(SCHALKE 04) அணியாகும். இதுவும் டார்ட்மண்ட் மாநகரத்தை மையமாக கொண்ட அணி. இந்த இரு அணிகளும் மோதும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். இந்த டெர்பி போட்டியை இரு அணிகளும் தன் சுயமரியாதை போட்டியாகக் கருதும்.
எல் க்ளாஸ்ஸிகேர்:
டெர்பி போலவே இதுவும் ஒரு சிறப்பம்சம் கொண்ட போட்டியாகும் இந்த எல் க்ளாஸ்ஸிகேர் போட்டியைப் பொறுத்த வரை புண்டேஸ்லிகா-வின் இரு பெரும் அணிகள் மோதும். ஒன்று ஜெர்மனியின் முனிச் மாநகரத்தை மையமாகக் கொண்ட பேயர்ன் முனிச் அணி. மற்றோன்று டார்ட்மண்ட் அணி. இந்தப் போட்டி டெர்பி போட்டியை விடவும் மிகவும் பிரசத்தி பெற்றது. இந்த போட்டியைப் பொறுத்தவரை, அணியை விடவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இரண்டு அணி ரசிகர்களும் இது அவர்களின் தன்மானமாக நினைக்கிறார்கள். இந்த வகை போட்டியில் பேயர்ன் முனிச் அணியே அதிக முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துரோகம்:
டோர்ட்முண்ட் அணி ஐரோப்பாவில் உள்ள அணிகளில் மிகவும் அதிக துரோகத்தைச் சந்தித்த அணியாகும். தனது அணியின் நட்சத்திர வீரர்களால் பலமுறை துரோகத்தைச் சந்தித்துள்ளது. இன்று புண்டேஸ்லிகா சாம்பியன் ஆன பேயர்ன் முனிச்-ல் விளையாடும் பல வீரர்கள் ஒரு காலத்தில் டார்ட்மண்ட் அணிக்கு விளையாடியவர்கள் தான். அதிக பணம் அதிக புகழுக்கு ஆசைப்பட்டு தன்னை வளர்த்துவிட்ட அணிக்குத் துரோகம் செய்தவர்கள். டார்ட்மண்ட் பொறுத்தவரை பல நட்சத்திர வீரர்கள் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து டார்ட்மண்ட் அணியின் செயல்பாட்டால் ஹீரோ ஆன கதையும் உண்டு. அப்படி ஆனவர்தான் லேவாண்டோவ்ஸ்கி, இவர் 2010-ம் ஆண்டு டார்ட்மண்ட் அணி வீரர். இவரை ஸிரோவிலிருந்து ஹீரோவாக்கியது டார்ட்மண்ட் அணி. ஆனால் இவர் 2014-ம் ஆண்டு டார்ட்மண்ட்-ன் எதிரி அணியான "பேயர்ன் முனிச்" அணிக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டார். இவர் மட்டுமின்றி வேறு பலரும் குறிப்பாக 'ஆபுமயங்' , 'டேம்பேலே' , 'சாக்ரடிஸ்' , 'ஹும்மேல்ஸ்' போன்றோர் டார்ட்மண்ட் அணியிலிருந்து நட்சத்திரமாய் வேறு அணிக்குச் சென்றவர்கள் ஆவர்.
எழுச்சி :
டார்ட்மண்ட்-ஐ பொறுத்தவரை அந்த அணி எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்கியது கிடையாது. தனது நட்சத்திர வீரர்கள் வேறு அணிக்குச் சென்றாலும் விடாமுயற்சியுடன், உத்வேகத்துடன் திரும்பிவரும். 'டேம்பேலே' , 'ஆபுமயங்' சென்றவுடன் வீழ்ச்சி கண்ட டார்ட்மண்ட் சென்ற புண்டேஸ்லிகா சீசனில் (2017-18) நான்காவது இடத்தைப் பிடித்தது. மற்ற அணியாக இருந்தால் இந்தச் சறுக்கல்களிலிருந்து மீண்டு வரக் குறைந்தபட்சம் 2 சீசன்-கள் தேவைப்படும். ஆனால் டோர்ட்முண்ட் அடுத்த லீக் தொடரிலேயே பல இளம் வீரர்களுடன் மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. இந்த முறை ரூஇஸ் தலைமை பொறுப்பை ஏற்றார். அவருக்குத் துணையாக 'சன்சோ' , 'விட்செல்' , 'அல்கசர்' போன்ற வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இதனால் டார்ட்மண்ட் அணி மிட்(mid) சீசனில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகமொத்தத்தில் டார்ட்மண்ட் அணிக்கு இது கோல்டன் வருடம். நல்ல வீரர்கள், மிகச்சிறந்த பயிற்சியாளர் என்று சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் டார்ட்மண்ட் அணி புண்டேஸ்லிகா மட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் லீக் தொடரையும் கைப்பற்றினாலும் ஆச்சரியமில்லை.