ஐரோப்பா லீக் போட்டிகள் தற்போது காலிறுதி சுற்றை எட்டிவிட்டது. பரபரப்பான சுற்று 16ல் பல திருப்புமுனைகளை கண்ட பின்னர் காலிறுதிக்குள் நுழைந்திருக்கிறது 8 அணிகள். காலிறுதியின் முதல் லெக் சுற்றில் ஆர்சனல் மற்றும் நாபொலி, ஸ்லாவியா ப்ரஹா மற்றும் செல்சி, பேன்பிகா மற்றும் எய்ண்ட்ரிச், வில்லாரியல் மற்றும் வலன்சியா என எட்டு அணிகள் மோதும் 4 போட்டிகள் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இதில் ஆர்சனல் மற்றும் நாபொலி இரு அணிகளும் மோதிய நேற்றைய போட்டியின் விவரங்களை நாம் இங்கு காண்போம்.
ஆர்சனல் அணியிடம் சரணடைந்த நாபொலி
பரபரப்பாக துவங்கிய முதல் பாதியின் துவக்க நிமிடங்களில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது ஆர்சனல் அணி. நட்சத்திர வீரர் ஆரோன் ராம்சே 7வது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சிக்கையில், நாபோலி அணியின் தடுப்பு வீரர் கௌலிபாலி அற்புதமாக தடுத்தார்.
ஆனால், தொடர் தாக்குதலை நடத்திய ராம்சே 14 வது நிமிடத்தில் அசத்தலான கோல் அடிக்க, இம்முறை யாராலும் தடுக்க இயலவில்லை. 1-0 என ஆர்சனல் அணி முன்னிலை பெற்றது.
அதன் பிறகு, 25வது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் நடுகள வீரர் நிலெஸ் கோல் அடிப்பதற்காக காத்திருந்த டோரேய்ராவிற்கு பாஸ் செய்கையில் கௌலிபாலி தடுக்க முயற்சிக்கையில் பந்து கோல் போஸ்டுக்குள் சென்றது. சொந்த அணிக்கு எதிராக கோல் அடித்ததாதால், ஆர்சனல் அணி முதல் பாதியிலேயே 2-0 என முன்னிலை வகித்தது.
நாபோலியின் தொடர் முயற்சி வீண்
இந்த முன்னிலையை சரி கட்டுவதற்காக தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வந்த நாபோலி அணி, ஓரிரு வாய்ப்புகளை மயிரிழையில் தவறவிட்டு ஏமாற்றம் அளித்தது . குறிப்பாக, 53 வது நிமிடத்தில் நாபோலி அணிக்கு கிடைத்த கார்னெர் கிக் வாய்ப்பில், கௌலிபாலி தலையில் முட்டி கோலாக்க முயற்சித்தார். துரதிஷ்ட வசமாக, போஸ்டில் பட்டு பந்து வெளியே சென்றது.
அதேபோல, 59வது நிமிடத்தில் ராம்சே அடித்த பந்து போஸ்டில் பட்டு வெளியே சென்றது.
மீண்டும் 72வது நிமிடத்தில் நாபோலி அணிக்கு கிடைத்த வாய்ப்பை இம்முறை முன்கள வீரர் ஜிஎலின்ஸ்கி நழுவ விட்டார்.
கூடுதலாக 5 நிமிடங்கள் கொடுத்த போதும் நாபோலி அணி வீரர்களால, ஆர்சனல் அணியின் தடுப்பை தகர்த்து கோல் அடிக்க இயலவில்லை.
இதனால், ஐரோப்பா லீக் போட்டியில் காலிறுதியில் முதல் லெக் போட்டியில் 2-0 என தோல்வியை தழுவியது நாபோலி. 2 கோல்கள் முன்னிலையுடன் முடித்தது ஆர்சனல் அணி. ஆட்டநாயகனாக ஆர்சனல் அணி வீரர் ராம்சே தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாம் லெக்
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாம் லெக் போட்டி ஏப்ரல் 19ஆம் தேடி நாபோலி அணியின் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் 3 கோல்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது நாபோலி அணி. இல்லையெனில், 2 கோல்கள் அடித்து, ஆர்சனல் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்தால் அடுத்த சுற்றுக்கு நாபோலி சட்னி முன்னேறலாம்.