முன்னாள் ஆர்செனல் அணி வீரர் ஜோஸ் அண்டோனியோ ரெயஸ் கார் விபத்தில் பலி

Jose Antonio Reyes
Jose Antonio Reyes

முன்னாள் ஆர்செனல் மற்றும் செவில்லா அணி வீர்ர் ஜோஸ் அண்டோனியோ ரெயஸ் கார் விபத்தில் பலியானார். அவருக்கு வயது 35. இந்த துக்ககரமான செய்தியை ஸ்பானிஷ் கிளப்பான செவில்லா, தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

செவில்லா அகாடமியில் பயிற்சி பெற்ற ஜோஸ் ரெயஸ், இளம் வயதிலேயே செவில்லா அணியில் இடம் பெற்றார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு ஆர்செனல் அணிக்கு சென்றார். அந்த வருட சீசனில் வெல்ல முடியாத அணியாக திகழ்ந்த ஆர்செனல், ப்ரீமியர் லீக் மற்றும் FA கோப்பையை வென்று அசத்தியது. இந்த இரு கோப்பையும் வென்ற அணியில் ஜோஸ் ரெயஸும் இடம் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் ரியல் மாட்ரிட் அட்லெடிகோ மாட்ரிட், பென்ஃபிசியா போன்ற அணிகளுக்கு விளையாடிய ரெயஸ், சமீப வருடங்களாக ஸ்பெயின் நாட்டின் இரண்டாம் டிவிஷன் கிளப்பான Extremadura UD அணிக்கு விளையாடி வந்தார். 2006/07 சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது லா லீகா கோப்பையை வென்றுள்ளதோடு செவில்லா மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடிய சமயத்தில் ஐந்து ஐரோப்பா கோப்பைகளை பெற்றுள்ளார்.

“தங்கள் கிளப் வரலாற்றில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக ரெயஸ் உள்ளார்” என செவில்லா அணி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளது. ரெயஸின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது சொந்த ஊரான உடெராவில் இரண்டு நாட்களுக்கு கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என நகர கவுன்சில் தனது இணையதளத்தில் கூறியுள்ளது. திங்களன்று இறுதிச் சடங்கு நடக்கவுள்ள நிலையில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக செவில்லா ஸ்டேடியம் எடுத்துச் செல்லப்படுகிறது.

“எங்கள் அணியின் முன்னாள் வீரர் கார் விபத்தில் பலியான செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்” என ஆர்செனல் அணி தெரிவித்துள்ளது. ஆர்செனல் அணியின் முன்னாள் பிரபல வீரர் தியரி ஹெண்ரி கூறுகையில், “அற்புதமான வீரர், சிறந்த நண்பர் மற்றும் வித்தியாசமான மனிதர். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் மன தைரியத்தோடு இருக்க வேண்டும்” என்றார். 2004 முதல் 2007 வரை ஹென்ரியும் ரெயஸும் ஆர்செனல் அணிக்காக விளையாடியுள்ளனர்.

Jose Antonio Reyes
Jose Antonio Reyes

ஜோஸ் அண்டோனியோ ரெயஸின் சில சாதனைகள்:

செவில்லா அணியின் வரலாற்றிலேயே 16 வயதில் அணிக்குள் நுழைந்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2004-ம் ஆண்டு ஆர்செனல் அணிக்காக 17 மில்லியன் யூரோ தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆர்செனல் அணிக்காக 69 போட்டிகள் விளையாடியுள்ள ரெயஸ், 16 கோல்கள் அடித்துள்ளார். ஸ்பெயின் தேசிய அணிக்காக 21 போட்டிகளில் விளையாடி நான்கு கோல்களை அடித்துள்ளார்.

·2006-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் சேர்ந்த ரெயஸ், சீசனின் இறுதிப் போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி இரண்டு கோல்கள் அடித்து லா லீகா கோப்பையை பெற்று தந்தார்.

·ஐரோப்பா லீக் வரலாற்றில் அதிக முறை கோப்பையை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரெயஸ். ஆட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக இரண்டு முறையும் செவில்லா அணிக்காக மூன்று முறையும் இந்த கோபையை வென்றுள்ளார்.