சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: குரூப் சுற்று முடிவுகள்

நெய்மர் மற்றும் ம்பாப்பெ
நெய்மர் மற்றும் ம்பாப்பெ

ஐரோப்பாவில் மிகவும் பிரசித்திபெற்றது கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடர். 2018/19 ஆம் ஆண்டிற்கானசாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றுப் போட்டிகள் நேற்றிரவு முடிவடைந்தது.

இந்தப் போட்டியின் குரூப் சுற்றில் பங்குபெறும் அணிகள் அனைத்தும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் வீதம் 32 அணிகளும் 8 பிரிவுகளில் இடம்பெறும். இதில் ஒரு அணி மற்ற அணிகளுடன் "ஹோம் அண்ட் அவே"முறையில் மொத்தம் ஆறு ஆட்டங்கள் விளையாடும்.

குரூப் ஏ-வில் ஜெர்மனியை சேர்ந்த போரஸ்ஸியா டார்ட்மன்ட், ஸ்பெயின் அணியான அட்லெட்டிகோ மாட்ரிட், பிரான்சின் மொனாக்கோ மற்றும் கிளப் பெரூகே அணிகள் இடம் பெற்றன. டார்ட்மன்ட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் தலா 13 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

குரூப் பி-ல் பலம் வாய்ந்த பார்சிலோனா, இங்கிலாந்தின் டோட்டன்ஹாம், இத்தாலிய அணியான இன்டெர் மிலன் மற்றும் டச்சு அணியான பிஸ்வி இடம்பெற்றன. 14 புள்ளிகள் பெற்று பார்சிலோனா அணி முதலிடம் பெற்றது. கோல் வித்தியாசத்தில் இன்டெர் மிலன் அணியைப் பின்னுக்கு தள்ளி டோட்டன்ஹாம் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஆப் டெத் எனக் கருதப்பட்ட சி குரூப்பில் பிரான்ஸ் சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மன், சென்ற முறை இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்தின் லிவர்பூல் அணி, இத்தாலிய அணியான நாபோலி மற்றும் ரெட் ஸ்டார் பெல்கிரேட் அணிகள் இடம் பெற்றன. பி ஸ் ஜி அணி 11 புள்ளிகள் பெற்று ரவுண்டு ஆப் 16-க்கு தகுதிபெற்றது. கடைசி லீக் போட்டியில நாபோலி் அணியை வென்று லிவர்பூல் அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

சற்று பலம் குறைந்த அணிகள் இடம் பெற்ற குரூப் டி-இல் ஜெர்மனியின் ஷால்கா 04, போர்ச்சுகலின் போர்டோ, துருக்கி அணியான காலாடாசரே அணி மற்றும் லோகமோடிவ் மாஸ்கோ அணிகள் இருந்தன. ஒரு ஆட்டத்தில் கூடத் தோற்காமல் போர்டோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஷால்கா அணி இரண்டாம் இடம் பெற்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

குரூப் ஈ-இல் ஜெர்மனி சாம்பியன் பேயர்ன் முனிச், நெதர்லாந்தின் அஜாக்ஸ், போர்ச்சுகலின் பென்பிகா கிரீஸ் அணியான ஏ ஈ கே ஏதென்ஸ் அணிகள் உள்ளன. இதில் ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் பேயர்ன் முனிச் மற்றும் அஜாக்ஸ் அணிகள் முறையே 14 மற்றும் 12 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

எப் குரூப்பில் இங்கிலாந்து சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி. பிரான்ஸ் நாட்டின் லியான், ஜெர்மனியின் ஹாப்பன்ஹாம் அணி மற்றும் உக்ரைனின் ஷக்தார் டானேஷ்க் அணிகள் இடம் பெற்று உள்ளன. மான்செஸ்டர் சிட்டி ஒரு ஆட்டத்தில் தோற்ற போதிலும் 13 புள்ளிகள் பெற்று முன்னேறியது. ஒரு ஆட்டத்தில் கூடத் தோற்காத லியான் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஜி இல் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட், இத்தாலிய அணி ரோமா, ரஷ்யா அணியான சிஸ்கேஏ மாஸ்கோ, செக் அணியான விக்டோரியா ப்ளஸின் உள்ளன. எதிர்பார்த்ததை போலவே ரியல் மாட்ரிட் அணி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ரோமா அணி இரண்டாம் இடம் பெற்று ரவுண்டு ஆப் 16க்கு தகுதி பெற்றது.

குரூப் ஹச்-இல் இத்தாலிய சாம்பியன் ஜுவேண்டஸ், இங்கிலாந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட், ஸ்பெயினின் வேலன்சியா மற்றும் யங் பாய்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ள. கடைசி லீக் போட்டியில் தோற்ற போதிலும் ஜுவேண்டஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு முன்னேறின.

குரூப் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்த அணிகள் அனைத்தும் ஐரோப்பா கோப்பையில் விளையாடும்.