உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் கால்பந்து லீக் போட்டிகளில் ஒன்று இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் போட்டிகள். வாராவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த போட்டிகள் நடைபெறும்.
2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது.
கேம் வீக் 17க்கு ஆன ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெற்றன.
சனிக்கிழமை மதியம் எதிஹாட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணி எவர்டன் அணியை எதிர்கொண்டது. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-1 கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் கேப்ரியல் ஜீசஸ் 2 கோல் ரஹீம் ஸ்டெர்லிங் 1 கோல் அடித்தனர். எவர்டன் தரப்பில் கால்வின் லெவின் கோல் அடித்தார்.
சனிக்கிழமை மாலை 6 போட்டிகள் நடைபெற்றன. அதில் லண்டன் நகரில் நடைபெற்ற போட்டிகளில் கிரிஸ்டல் பேலஸ் அணி லெய்செஸ்டர் சிட்டி அணியை 1-0 என வென்றது. டோட்டன்ஹாம் அணி பர்ன்லி அணியை 1-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் கிறிஸ்டியன் எரிக்சன் கோல் அடித்து வெற்றி பெற செய்தார்.
ஹட்டர்ஸ்பீல்ட் இல் நடந்த போட்டி ஒன்றில் சாலமன் ரண்டன் அடித்த கோல் மூலமாக நியூகேஸ்டெல் யுனைடெட் அணி ஹட்டர்ஸ்பீல்ட் அணியை 1-0 என வென்றது. வோல்வெர்ஹாம்டன் அணி 2-0 என்ற கணக்கில் போர்ன்மௌத் அணியை வென்றது. அந்த அணியின் ராவுல் கிமினேஸ் மற்றும் இவான் சர்வலேரோ தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.
வாட்போர்ட் இல் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் வாட்போர்ட் அணி 3-2 என்று கார்டிஃப் சிட்டி அணியை வென்றது. வாட்போர்ட் அணி முதல் 68 நிமிடங்களில் 3 கோல் அடித்தது. அந்த அணியின் டேஉலோபியூ, ஹாலெபஸ், குயினா ஆகியோர் கோல் அடித்தனர். கார்டிஃப் தரப்பில் ஆட்ட இறுதியில் ஹோய்லெட்,பாபி ரீட் கோல் அடித்த போதிலும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
க்ரேவன் காட்டேஜ் இல் மாலையில் நடைபெற்ற 'லண்டன் டெர்பி' இல் புல்ஹாம் அணி வெஸ்ட்ஹாம் அணியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய வெஸ்ட்ஹாம் அணி முதல் பாதியில் 2 கோல் அடித்தது. அந்த அணியின் ராபர்ட் ஸநாட்கிராஸ், மைகேல் அன்டோனியோ ஆகியோர் கோல் அடித்தனர். புல்ஹாம் அணி தொடர்ந்து முயற்சித்த போதிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் டெர்பி போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட்ஹாம் அணி வெற்றி பெற்றது.
ஞாயிற்றுகிழமை 3 போட்டிகள் நடந்தன. இதில் செல்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் அணியை வென்றது. செல்சி அணியின் நட்சத்திர வீரர் ஈடன் ஹாசர்ட் இரண்டு மாதங்களுக்கு பின் பிரீமியர் லீக் போட்டிகளில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
மற்றொரு ஆட்டத்தில் சவுத்ஹாம்டன் அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. சவுத்ஹம்டன் அணி வீரர் டேனி இங்ஸ் முதல் பாதியில் 2 கோல் அடித்து அந்த அணி முன்னிலை பெறசெய்தார். ஆர்சனல் சார்பாக மிகிடாரின் கோல் அடித்தார்.இதனால் சவுத்ஹம்டன் அணி முதல் பாதி முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆர்சனல் அணி இந்த வருடம் பிரீமியர் லீக் போட்டிகளில் முதல் பாதி முடிவில் ஒரு போட்டியில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாதி துவக்கத்தில் ஆர்சனல் அணியின் மிகிடாரின் மேலும் ஒரு கோல் அடித்து போட்டியை சமநிலை படுத்தினார். போட்டி முடிவடைய 5 நிமிடம் உள்ள நிலையில் மாற்று வீரராக வந்த சார்லி ஆஸ்டின் கோல் அடித்து சவுத்ஹம்டன் அணி வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 22 போட்டிகளுக்கு பிறகு ஆர்சனல் அணி தோல்வியை தழுவியது.
ஞாயிறு மாலை நடைபெற்ற 'கேம் ஆப் தி வீக்' என்று கருதப்பட்ட போட்டியில் இந்த சீசன் பிரீமியர் லீக் போட்டியில் ஒரு முறை கூட தோற்காத லிவர்பூல் அணி பலம் வாய்ந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி முதலில் கோல் அடித்தது. அந்த அணியின் மானே முதல் பாதியில் கோல் அடித்தார். மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஒரு கோல் அடித்து சமநிலை படுத்தினார். முதல் பாதி முடிவில் ஆட்டம் 1-1 என்ற நிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் லிவர்பூல் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. மாற்று வீரராக வந்த அந்த அணியின் ஷாக்கீரீ 2 கோல் அடித்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றி மூலம் லிவர்பூல் அணி புள்ளிகள் பட்டியலில் 45 புள்ளிகளுடன் முதலிடதுக்கு முன்னேறியது.
மான்செஸ்டர் சிட்டி ,டோட்டன்ஹாம் ,செல்சி அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஆட்டங்களின் முடிவு சுருக்கமாக:
மான்செஸ்டர் சிட்டி 3-1 எவர்டன்
கிரிஸ்டல் பேலஸ் 1-0 லெய்செஸ்டர் சிட்டி
டோட்டன்ஹாம் 1-0 பர்ன்லி
ஹட்டர்ஸ்பீல்ட் 0-1 நியூகேஸ்டெல் யுனைடெட்
வோல்வெர்ஹாம்டன் 2-0 போர்ன்மௌத்
வாட்போர்ட் 3-2 கார்டிஃப் சிட்டி
புல்ஹாம் 2-0 வெஸ்ட்ஹாம்
பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-2 செல்சி
சவுத்ஹாம்டன் 3-2 ஆர்சனல்
லிவர்பூல் அணி 3-1 மான்செஸ்டர் யுனைடெட்