கால்பந்து வீரருடன் கடலில் விழுந்த விமானம் கண்டெடுப்பு! 

சாலாவிற்காக வருந்தும் கால்பந்து ரசிகர்கள்
சாலாவிற்காக வருந்தும் கால்பந்து ரசிகர்கள்

இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன அர்ஜெண்டினிய கால்பந்து வீர்ர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

28 வயதான சாலா, 2015-ம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாண்டெஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது திறமையை பார்த்த இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டிஃப் சிட்டி கிளப், இந்த வருடம் ஜனவரி 19-ம் தேதி 18 மில்லியன் யூரோ கொடுத்து தங்கள் அணிக்காக சாலாவை ஒப்பந்தம் செய்தது. இவ்வுளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அந்த வீரரிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என கால்பந்து ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், தனது புதிய அணியான கார்டிஃப் சிட்டியில் சேர்வதற்காக ஜனவரி 21-ம் தேதி பிரான்ஸிலிருந்து இலகு ரக விமானத்தில் பயணம் செய்தார் சாலா. கிளம்பிய சற்று நேரத்திலேயே குயர்ன்சேய் தீவிற்கு அருகே காணாமல் போனது அவரது விமானம். விமானத்தில் சாலாவும் இங்கிலாந்தைச் சேர்ந்த விமான ஓட்டியும் மட்டுமே இருந்தனர்.

எமிலியானோ சாலா
எமிலியானோ சாலா

விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் காவல்துறையினர், விமானம் இங்கு விழுந்திருந்தால் நிச்சியம் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறி சில நாட்களிலேயே தங்கள் தேடுதல் முயற்சியை கைவிட்டனர். ஆனால் சாலாவின் குடும்பத்தார் நம்பிக்கை இழக்காமல் தனிப்பட்ட முறையில் தேடுதல் முயற்சியை மேற்கொண்டனர். இதற்காக கிரௌடுஃபண்டிங் மூலம் மக்களிடம் நிதி திரட்டியதில் கிடைத்த மூன்று லட்ச யூரோ தொகையைக் கொண்டு டேவிட் மீயார்ன்ஸ் என்பவரை நியமித்து தேடுதல் பணியை தொடங்கினர்.

டேவிட்டின் கப்பலின் மூலம் ஒலி அலைகளை வைத்து கடலுக்கடியில் சோதித்ததில் கடந்த ஞாயிறன்று விமானத்தின் உடைந்த பாகமும் இடிபாடுகளுக்கு இடையே ஒரு நபரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "நாங்கள் கண்டுபிடித்த வரையில் இடிபாடுகளுக்கு இடையே ஒரு பயணி இருப்பது நன்றாக தெரிகிறது. இது வருத்தத்துகுரிய விஷயம். அடுத்தக்கட்ட முயற்சியை பற்றி விமான ஓட்டி மற்றும் பயணியின் குடும்பத்தாரிடம் ஆலோசித்து வருகிறோம்" என இங்கிலாந்து அரசாங்கத்தின் விமான விபத்துக்கான விசாரணை ஆணையம் (AAIB) அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தாங்கள் கண்டுபிடித்த விமான பாகத்தின் புகைப்படங்களையும் AAIB வெளியிட்டுள்ளது.

தொலைந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக செய்தி பரவியதை தொடர்ந்து, “இதை என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு கெட்ட கனவு. நான் அவர்களிடம் (விமானத்தை தேடும் குழுவிடம்) தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நாட்கள் நகர்கிறதே தவிர சாலா குறித்தோ தொலைந்த விமானம் குறித்தோ இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தான் அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்” என அதிர்ச்சியுடம் கூறியுள்ளார் சாலாவின் தந்தை ஹோரசியோ. தற்போது இவர் மட்டுமே அர்ஜெண்டினாவில் உள்ளார். சாலாவின் மற்ற உறவினர்கள் அனைவரும் தேடுதல் பணிக்கு உதவ சென்றுள்ளனர்.

கார்டிஃப் சிட்டி விளையாடிய போட்டியில் சாலாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது
கார்டிஃப் சிட்டி விளையாடிய போட்டியில் சாலாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது

சனிக்கிழமை அன்று கார்டிஃப் சிட்டி விளையாடிய போட்டியில், சாலாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இரு அணி கேப்டன்களும் மலர் தூவி மரியதை செலுத்தினர். போட்டியை பார்க்க வந்த பல ரசிகர்கள் சாலாவின் பெயரை தாங்கிய பதாகைகளையும் புகைப்படத்தையும் ஏந்திய படி முழக்கமிட்டதையும் பார்க்க முடிந்தது. அந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கார்டிஃப் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் கார்டிஃப் சிட்டி பயிற்சியாளர் நீல் வெர்மனாக் கூறுகையில், "நிச்சியம் இந்த வெற்றியை நினைத்து சாலா பெருமிதப்படுவார். நடந்த சம்பவங்கள் கார்டிஃப் சிட்டியை மிகவும் ஆழமாக பாதித்துள்ளது" என்றார்.

Edited by Fambeat Tamil