மே 29-ம் தேதி நடக்கவுள்ள ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் தனது பழைய அணியான ஆர்செனலை தோற்கடிக்க ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார் செல்சீ அணியின் முக்கிய வீரர் ஆலிவர் ஜிராட்.
ஜிராட் கூறுகையில், “எனது பழைய அணியோடு விளையாட நான் எப்போதும் விரும்புவேன். ஆனால் இது எளிதான காரியம் அல்ல. நாம் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் நமக்கு வலியை தரும். ஆனாலும், நமது உணர்வுகளையும் நினைவுகளையும் வெளியே வைத்து விட்டே விளையாட தயாராக வேண்டும். நான் அங்கு இருந்த வரை அணுபவித்து விளையாடினேன். மேலும், இங்கிலாந்தில் எனக்கு ஆர்செனல் தான் முதல் கிளப் என்பதால், எப்போதும் அது எனக்கு சிறப்பான விஷயம். எனது ரத்தமும் நீலமாக இருப்பதை நான் இப்போது உணர்கிறேன். எனது தேசிய அணியும் நீல நிறம் தான். நீலம் எனக்கு நன்றாக பொருந்திப் போகிறது” என்றார்.
செல்சீ அணியில் விளையாடுவதற்காக மீண்டும் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள ஜிராட், செல்சீ வீரர்களோடு சேர்ந்து விளையாடுவதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். “எந்த அணியிலும் நான் விரைவாக ஒன்றிவிடுவேன். எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக தான் இந்த அணியை கருதுகிறேன். ஏற்கனவே நான் எல்லாரிடமும் எளிதாக பழகி விடுவேன். அதோடு இங்குள்ள சில வீர்ர்களை எனக்கு ஏற்கனவே தெரியும்” என்றார்.
“ஆர்செனல் அணியை ஒப்பிடும் போது, செல்சீ அணியில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கலாச்சாரம் உள்ளது. இதனால் தான், கடந்த பத்தாண்டுகளில் ஆர்செனல் அணியை விட செல்சீ அணி எல்லா வகையிலும் வெற்றி வாகை சூடுகிறது. ஆர்செனல் அணியில் உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும். அவர்கள் அதிகமாக பொறுமை காப்பார்கள். ஆனால், செல்சீ அணியில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதனால் தான், வென்ற கோப்பையை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் ,கடந்த பத்தாண்டுகளாக இங்கிலாந்தின் சிறந்த கிளப்பாக செல்சீ திகழ்கிறது” என செல்சீ அணியின் வெற்றி மந்திரம் குறித்து கூறுகிறார் ஜிராட்.
“செல்சீ அனியில் இருக்கும் போது எதற்கும் நேரம் கிடைக்காது. அதுவும் நீங்கள் இளம் வீரராக இருந்தால் அணியில் இடம் கிடைப்பதே கடினம். இளம் செல்சீ வீரர்களின் கனவுகளை அழிக்க நான் விரும்பவில்லை. அவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால் ஒவ்வொரு டிரான்ஸ்ஃபர் விண்டோவிலும் அதிக முதலீடை செய்ய செல்சீ அணி விரும்புகிறது. இதனால் மிகவும் அணுபவம் வாய்ந்த பல நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்களை தங்கள் அணிக்காக வாங்குகின்றனர்” என்கிறார் ஜிராட்.
2018, ஜனவரி மாதம் செல்சீ அணியில் சேர்ந்ததிலிருந்து 62 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிராட், 17 கோல்களை அடித்துள்ளார். ஆலிவர் ஜிராட் குறித்து செல்சீ அணியின் இயக்குனர் மரினா கிரனோக்ஸ்கியா கூறுகையில், “மற்றொரு சீசனிலும் செல்சீ அணிக்காக ஜிராட் விளையாடுவது எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. அவர் எங்கள் அணியில் 18 மாதங்களுக்கு முன் சேர்ந்ததிலிருந்து, பல சமயங்களில் தனது வாய்ப்பிற்காக பொறுமையாக காத்திருந்தார். ஆனால் இப்போதும் கூட அவரால் எங்கள் அணிக்கு நேர்மறையான பங்களிப்பை கொடுக்க முடியும்”.
“அவரது சுய நலமற்ற விளையாடும் முறையோ அல்லது இந்த சீசனில் ஐரோப்பா லீக்கில் அவர் அடித்த பத்து கோல்களோ, என்னவாக இருந்தாலும் ஜிராட் எங்கள் அணியின் முக்கியமான உறுப்பினர். கடந்த சீசனில் செல்சீ அணிக்காக FA கோப்பையை வென்று தந்தது போல் இந்த முறை ஐரோப்பா லீக் கோப்பையை பெற்று தருவார் என நம்புகிறோம்” என கூறுகிறார் செல்சீ அணியின் இயக்குனர்.