எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். எங்கள் செயல்முறைக்கு முழு ஆதரவு கொடுங்கள். இந்திய கால்பந்து அணி நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என போராடுவது நம் அனைவரின் கடமை என இந்திய கால்பந்து அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் இகோர் ஸ்டிமக் தெரிவித்தார்.
பயிற்சியாளராக நியமித்த முதல் முறைகாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டிமக், “கால்பந்து விளையாடும் ஒவ்வொரு தேசமும் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதையே தங்களின் லட்சியமாக கொண்டுள்ளது. இது அவர்களின் கனவாக உள்ளது. நான் இங்கு வந்து இரண்டு வாரங்கள் தான் ஆகிறது. அதற்குள் நம் அணி உலக கோப்பைக்கு செல்லும் என நான் கூறினால் அது முட்டாள்தனமானது” என்று கூறினார்.
எதிர்காலத்திற்கான விதைகள் இந்திய அணியில் தூவப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட ஸ்டிமக், பலனை அறுவடை செய்ய இதுவே சரியான நேரம் என்றார். “உலக கோப்பைக்கு செல்ல வேண்டும் என்பது இந்திய கால்பந்து சங்கத்தின் லட்சியம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் லட்சியமாகும். அரசாங்கம், ரசிகர்கள், ஊடகங்கள் என அனைவரும் இந்தியா உலக கோப்பையில் விளையாட வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த கனவை நிறைவேற்ற வேண்டுமென்றால் நாம் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார் ஸ்டிமக்.
“உலக கோப்பை குறித்து கனவு கானும் எந்த தேசத்தையும், மக்களையும், ரசிகர்களையும் அல்லது எவரையும் நாம் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நமது கனவுகளோடு சேர்த்து நம் கடும் உழைப்பையும் கொட்ட வேண்டும். நமது வெற்றிக்கு சிறந்த அணுகுமுறை, சிறந்த தொடர்பாடல் என அனைத்தும் தேவை”.
இந்திய கால்பந்து கழகங்களுக்கு இடையே சிறப்பான தொடர்பாடல் இருப்பது அவசியம் என அழுத்தமாக கூறும் ஸ்டிமக், “இரண்டு லீக்குகளுக்கு இடையே பிரச்சனை உள்ளது. நமது கால்பந்து விளையாட்டிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் உள்ளது. நாம் சிறப்பாக தொடர்பு வைத்துக் கொண்டால் இதையெல்லாம் சரி செய்ய முடியும்” என்றார்.
அனைத்து லீக்குகள் மற்றும் அணிகளோடு சம்மந்தப்பட்டவர்களிடம் சேர்ந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது என்பதை ஸ்டிமக்-கும் அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்ப இயக்குனரும் ஒப்புக் கொள்கின்றனர். “லீக்குகளின் தற்போதைய நிலைமை போர் மோதல்கள் அல்ல. ஒன்றாக சேர்வதற்கே இந்த போராட்டம். நமக்கு இப்போது தேவை நேர்மறையான சூழ்நிலையும் தரமான மற்றும் அதிகமான போட்டிகளும் தான். நாம் விளையாடும் முறையே இங்கு முக்கியமானது. இந்தியன் லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் குறித்து தன் மனதில் உள்ளதாகவும் அவர்களோடு சேர்ந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்” என்றும் கூறினார் ஸ்டிமக்.

“நிச்சியம் நான் எல்லா கிளப்புகளுக்கும் செல்வேன். அணியின் பல்வேறு பயிற்சியாளர்களிடமும் பேசுவேன். அவர்களோடு நிச்சியம் தொடர்பு வைத்துக் கொள்வேன். என் பயிற்சியாளர் பதவியில் இதுவும் ஒரு முக்கியமான அம்சம். அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் இந்திய கால்பந்து அணியில் தனது பங்கு என்பது, வீரர்களை தேசிய முகாமுக்கு தேர்ந்தெடுப்பது மற்றும் U-23 அணி மற்றும் சீனியர் அணிக்கு பயிற்சி வழங்குவது மட்டுமல்ல. நான் இறுதி முடிவெடுப்பவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனது கருத்தையும் கால்பந்து கூட்டமைப்பு நிச்சியம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்” என்றார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமக்கோடு அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (AIFF) தொழில்நுட்ப இயக்குனர் டோரு இசக்கும் கலந்து கொண்டார்.