FC கோவா ரசிகர்களுக்கு செர்ஜியோ லோபெராவின் வேண்டுகோள்- ஐ.எஸ்.எல் 2018/19

செர்ஜியோ லோபெரா- FC கோவா
செர்ஜியோ லோபெரா- FC கோவா

உலகில் கொடிகட்டி பறக்கும் விளையாட்டு என்றால் அது கால்பந்தாட்டம் தான். ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலைகீழ், காரணம் கிரிக்கெட். எனவே கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை மாற்ற மற்ற விளையாட்டுகள் முன்னுரிமை கொடுக்கப்பட்டு விளையாடி வருகிறது. அப்படியான ஒன்று தான் ஐ.எஸ்.எல். இது இந்தியாவில் நடத்தப்படும் கால்பந்து தொடர். இது இந்தியர்கள் மத்தியில் தற்போது மெல்ல பிரபலமாகி வருகிறது. இதனை பற்றி இந்தியா கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் பலமுறை கூறியுள்ளார். அதாவது ரசிகர்கள் கிரிக்கெட் அல்லாது மற்ற விளையாட்டிற்கும் ஆதரவு தரவேண்டும் என்பது தான்.

இப்படி ஒரு சூழலில் தான் ஐ.எஸ்.எல் 2018/19 சீசனின் அரையிறுதி போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில் FC கோவா அணியும் மும்பை சிட்டி FC அணியும் மோதவுள்ளன. இதனிடையே FC கோவா அணியின் செர்ஜியோ லோபெரா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, "எங்களது அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்றதொரு ஆட்டத்தை அரையிறுதி போட்டியிலும் தொடர விரும்புகிறோம். இந்த நிலைக்கு அணியின் வீரர்களே காரணம். அவர்களின் உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது".

மேலும் அவர் கூறியதாவது, " இந்த சீசன் எங்களுக்கு மிகவும் உணர்வு பூர்வமானது. ஆம், கோவாவை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் எங்களது உழைப்பிற்கு பின்னால் பெரும் துணையாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் எந்த இடத்திற்கு விளையாட சென்றாலும் தனிமையை நாங்களும், எமது அணியினரும் என்றும் உணர்ந்ததே இல்லை" என்றார்.

இறுதியாக " நாங்களும் எமது ரசிகர்களை இந்த சீசனில் எந்தவிதத்திலும் ஏமாற்றவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் ரசிப்பதற்கும், மகிழ்வதற்கும் ஒரு தருணத்தை இங்கு உருவாக்கியுள்ளோம்".

"எனது ஒரே வேண்டுகோள் என்னவென்றால் FC கோவா பங்குபெறும் இரண்டாவது லெக் போட்டி சொந்த மைதானமான கோவாவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ரசிகர்களான உங்களது ஆதரவு அணியினருக்கு அவசியம் தேவை. எனவே மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழிய நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இது வீரர்களுக்கு புத்துணர்ச்சியை தந்து சிறப்பாக விளையாட தூண்டும். நான் நினைத்தது கண்டிப்பாக நடக்குமா என்று தெரியவில்லை, காரணம் போட்டி ஒரு வேலைநாளில் நடைபெறுவதால்" இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறி முடித்தார்.

அவர் குறிப்பிடும்படி இந்த சீசனில் கோவா அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்து வருகிறது. அதற்க்கு முக்கிய காரணம் லோபெராவே ஆகும். இவரின் கீழ் அந்த அணி பல வெற்றிகளை அசாத்தியமாக குவித்து வந்துள்ளது. அதுவும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மூன்றாவது சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அணியை இந்த அளவுக்கு முன்னேற்றியது லோபெராவின் முயற்சியால் தான். அதுமட்டும் இன்றி இந்த சீசனில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது, அதில் ஒன்று ஒரே சீசனில் 43 கோல்கள் அடித்த அணி என்பது தான். அதிலும் அந்த அணியை சேர்ந்த கோரோ 18 கோல்கள் அடித்து முன்னணியில் உள்ளார். இது ஒரு சீசனில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்சமும் ஆகும்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி மும்பையில் (முதல் லெக்) மார்ச் 9 அன்று 7.30க்கு நடைபெறவுள்ளது.

Edited by Fambeat Tamil