கிங்ஸ் கோப்பை 2019: இந்திய Vs குரகுவா போட்டி பற்றிய அலசல் ரிப்போர்ட்

Indian Football Team
Indian Football Team

புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டீமேக் பதவியேற்றப் பிறகு, அவரது தலைமையில் சர்வதேச தொடரில் தனது முதல் போட்டியை இன்று விளையாடவுள்ளது இந்திய கால்பந்து அணி. கிங்ஸ் கோப்பை தொடருக்காக தாய்லாந்து சென்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று குரகுவா அணியை எதிர்கொள்கிறது.

கடந்த சில வருடங்களாக தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது இந்திய அணி. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டண்டைனின் அளப்பரிய பங்கு என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட AFC ஏசியன் கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் பயிற்சியாளர் பதவியிலிருந்து கான்ஸ்டண்டைன் நீக்கப்பட்டார்.

தற்போது புதிதாக குரேஷியாவை சேர்ந்த இகோர் ஸ்டீமேக் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால் என்றால், இதுநாள் வரை கான்ஸ்டண்டைன் சொல்லிக் கொடுத்து வீரர்களிடம் நிலைபெற்றுள்ள விளையாடும் முறை. ஸ்டீமேக்கை பொறுத்தவரை, மிட் ஃபீல்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. ஆனால் கான்ஸ்டண்டைன் இந்திய அணியினருக்கு தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.

Indian Team in Training
Indian Team in Training

இப்போது உள்ள இந்திய அணியில் ஃபார்மில் உல்ள பல வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் புதிய பயிற்சியாளருக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டீமேக்கின் திட்டத்தை களத்தில் வீரர்கள் எவ்வாறு செயல்படுத்தப் போகிறர்கள் என்பதில் தான் இந்தியாவின் வெற்றி அடங்கியுள்ளது. நிச்சியம் இது அவ்வுளவு எளிதல்ல. ஏனென்றால் ஸ்டீமேக்கின் கீழ் இந்திய அணி இரண்டு வாரங்களே பயிற்சி எடுத்துள்ளது.

தற்போது பிஃபா ரேங்கில் 101-வது இடத்தில் உள்ள இந்தியா, இந்த கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் ஒரு சில ரேங்குகள் முன்னேறலாம். இந்தியாவை எதிர்த்து போடியிடப் போகும் குரகுவா, டச்சு கரீபியன் தீவாகும். நிச்சியம் இந்த அணி இந்தியாவிற்கு கடும் சவாலை அளிக்கும். முதல் முறையாக இந்த தொடரில் பங்கேற்றாலும், பிஃபா ரேங்கில் 82-வது இடத்தில் உள்ளது குரகுவா. இந்த அணியில் உள்ள பல வீரர்கள் ஐரோப்பிய லீக்குகளில் விளையாடிய அணுபவம் உள்ளவர்கள்.

சர்வதேச கால்பந்தில் குரகுவா அணியின் பயணம் உத்வேகம் மிக்கது. 2014-ம் ஆண்டு 183-வது ரேங்கில் இருந்து அடுத்த மூன்று வருடத்திற்குள் 68-வது ரேங்கை பிடித்தது குரகுவா. எனினும் 2019-ம் ஆண்டு போதிய ஆட்டங்கள் இல்லாமல் ஓய்விலேயே இருந்துள்ளனர் குரகுவா வீரர்கள். இந்த வருடம் அவர்கள் விளையாடிய ஒரு போட்டியிலும் ஆண்டிகுவா & பார்படா அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றனர்.

இந்தப் போட்டியில் இந்தியாவிற்கு இருக்கும் ஒரு சாதகம் என்றால், சுனில் ஷேத்ரி தலைமையிலான நம் அணியை பற்றி குரகுவாவிற்கு எதுவும் தெரியாது. ஆகையால் இந்தியா வெற்றி பெற்றால் ஆச்சர்யம் இல்லை.

கணிப்பு:

எல்லா வகையிலும் இந்திய அணியை விட மேலோங்கியே இருக்கிறது குரகுவா. புதிய பயிற்சியாளரின் தலைமையில் கடுமையான சவாலை எதிர்கொள்ள உறுதியாக உள்ளது இந்தியா. எனினும் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையே போதிய நெருக்கம் இல்லாமல் இருப்பது இந்திய அணிக்கு குறையே.

1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைய அதிக வாய்ப்புள்ளது.

போட்டி பற்றிய தகவல்கள்:

மைதானம்: சாங் மைதானம், புரிராம், தாய்லாந்து

நேரம்: மதியம் இரண்டு மணி (இந்திய நேரப்படி)

ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார்.