பிரீமியர் கோப்பையை நெருங்கும் மான்செஸ்டர் சிட்டி அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி ஆதிக்கம் 

ஆட்டத்தின் முடிவு
ஆட்டத்தின் முடிவு

இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் ஓல்ட் ட்ராபோர்டில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், மான்செஸ்டர் சிட்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. யுனைடெட் அணி பார்சிலோனா அணியிடம் சாம்பியன்ஸ் லீக்கில் கண்ட தோல்விக்கு பின்பு எவெர்ட்டன் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி 4-0 என வெற்றிபெற்றது. மறுபுறம் சிட்டி அணி சாம்பியன்ஸ் லீக் வெற்றிக்கு பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. இந்த போட்டியானது சிட்டி அணியின் கோப்பை கனவுக்கு ஒரு அடி முன்னெடுத்து செல்லும் போட்டியாகவே பார்க்கப்பட்டது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் வியூகம்: 4-3-3

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வியூகம்: 5-3-2

முதல் பாதி:

வழக்கத்துக்கு மாறாக சிட்டி அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுக்காமல் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆனால் மறுபுறம் யுனைடெட் அணியோ சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் அதிர்ச்சிகரமாக, அதாவது 15' நிமிடத்தில் ஸ்டெர்லிங் அடித்த பந்தை டீ ஜியா தடுத்து நிறுத்தினார். தாக்குதல் ஆட்டம் ஆடிய யுனைடெட் அணிக்கு இது சற்று பீதியை கிளப்பியது. உடனே சுதாரித்து கொண்ட யுனைடெட் அணி பந்தை தட்டிக்கொண்டு சிட்டி அணியின் எல்லைக்கு சென்றது. யுனைடெட் அணியின் பிரெட் அந்த பந்தை பெரும் முயற்சி எடுத்து அடிக்க, அது கோல் போஸ்டை விட்டு சற்று விலகி சென்றது.

பந்தை தடுத்து நிறுத்திய டீ ஜியா
பந்தை தடுத்து நிறுத்திய டீ ஜியா

இதையடுத்து அடுத்த சில கணங்களில், போக்பா சற்று கடினமான ஒரு வாய்ப்பை உருவாக்கினார். போக்பா பந்தை லிங்கார்ட்டிடம் அடிக்க, அவர் அந்த 'வாலியை' சற்று கோல் போஸ்டிலிருந்து வெளியே தள்ளினார். இதனால் இரண்டாவது வாய்ப்பும் பறிபோனது. மறுமுனையில் டீ ஜியா தனி ஆளாக சிரமமான வாய்ப்புகளை கோல் விடாமல் தடுத்து கொண்டிருந்தார்.

இரண்டாம் பாதி:

இப்படி முதல் பாதி கோல் ஏதும் இன்றி சமனில் முடிய, சிட்டி அணி பந்தை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக இறங்கியது. அந்த சமயத்தில் தான் சிட்டி அணியின் பெர்னாண்டின்ஹோ காயம் காரணமாக வெளியேறினார். உடனே அவருக்கு மாற்றாக சேன் களமிறங்கினார்.

கோல் போட்ட மகிழ்ச்சியில் பெர்னார்டோ சில்வா
கோல் போட்ட மகிழ்ச்சியில் பெர்னார்டோ சில்வா

இவர் களமிறங்கிய பின் ஆட்டம் சிட்டி அணிக்கு சாதகமாக திரும்பியது. ஆம், இவர் உள்ளே வந்த பின்பு பெர்னார்டோ சில்வா சரியான பகுதியில் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். 54' நிமிடத்தில் சேன் யுனைடெட் அணியினரிடம் இருந்து பந்தை பறித்து மூலையில் நின்ற பெர்னார்டோ சில்வாவிடம் பந்தை பாஸ் செய்தார், உடனே அந்த பந்தை கோல் போஸ்டை நோக்கி அடிக்க அது கோலாக மாறியது. இந்த முறை டீ ஜியாவால் அதை தடுக்க முடியவில்லை.

இதிலிருந்து மீள்வதற்குள் அகுரோ தன்னை நோக்கி வந்த பந்தை லாவகமாக கையாண்டு அதை கோல் போஸ்டை நோக்கி அடித்தார். ஆனால் பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச்சென்றது.

சரி, இதோடு விட்டார்களா 66' நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் போட்டு அசத்தியது, சிட்டி அணி. இந்தமுறை கோல் போட்டவர் சேன். சென் சற்று தொலைவிலிருந்து கோல் அடிக்க ஷாட் அடித்தார். எப்போதும் பெரிய தவறிழைக்காத டீ ஜியா இந்த முறை தவறிவிட்டார். பந்து டீ ஜியா தடுப்பையும் மீறி கோலாக மாறியது.

இரண்டாவது கோலை அடித்த சேன்
இரண்டாவது கோலை அடித்த சேன்

அவ்வளவு தான் ஆட்டம் சிட்டி கைக்குள் சென்று விட்டது, இதனிடையே லுகாக்கு சற்று தூரத்திலிருந்து ஒரு பந்தை அடிக்க அதையும் எட்டர்சன் தடுத்து யுனைடெட் அணியின் கோல் கனவை முழுவதுமாக தடுத்தார்.

ஆட்டம் 2-0 என முடிவுக்கு வந்தது. இதனால் மான்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக் கோப்பையை வெல்வது உறுதியாகிவிட்டது. மறுபுறம் டாப் 4-ல் வர செல்சி மற்றும் ஆர்சனல் அணியிடம் மல்லு கட்டிவருகிறது யுனைடெட் அணி.