கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் பிரசித்தி பெற்ற போட்டிகளில் ஒன்று சாம்பியன்ஸ் லீக். 2018 19 ஆம் ஆண்டுக்கான சீசனில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் சுற்று 16இல் இரண்டாம் லெக்கை எட்டியுள்ளது. இந்த சுற்றில் இதற்கு முந்தைய போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான ரியல் மாட்ரிட் அணி அஜக்ஸ் அணியிடம் தனது சொந்த மைதானத்தில் படுதோல்வியை தழுவியது. தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற அணி இப்படி படுதோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
அதற்கு அடுத்ததாக அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று பாரிஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதும் போட்டியாகும்.
முதல் லெக் - மான் செஸ்டர் மண்ணில் பாரிஸ் ஆதிக்கம்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சொந்த மைதானமான ஓல்டு டிராபோர்டில் பாரிஸ் அணியின் நட்சத்திர வீரரான கிம்பெம்பே அருமையான ஹெடிங் மூலம் 53வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து பாரிஸ் அணியை முன்னிலை படுத்தினார், அடுததாக இளம்வீரர் இம்பப்பே 60வது நொடியில் ஒரு கோல் அடிக்க அரங்கமே அமைதிக்கொலம் பூண்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து இறுதிவரை மான்செஸ்டர் யுனைடெட் அணியால் மீண்டு வர இயலவில்லை. முதல் லெக்கை 0-2 என சொந்த மைதானத்தில் இழந்தது. இப்போட்டியில் காயம் காரணமாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆடவில்லை.
இரண்டாவது லெக்கில் - மான்செஸ்டர் யுனைடெட் பதிலடி

சுற்று 16இன் இரண்டாவது லெக் போட்டிகள் இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது. நேற்றைய போட்டியில் பாரிஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. பாரிஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 முதல் லெக் போட்டியின் முன்னிலையுடன் துவங்கியது.
போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் லுகாக்கு கோல் அடிக்க, மான்செஸ்டர் மைதானத்தில் பாரிஸ் அணி கோல் அடிக்கையில் நிலவிய அதே அமைதி இங்கு இப்பொழுது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜுவான் பெர்னாட் கோல் அடிக்க சிங்க கர்ஜனை போல கரகோசத்தால் அரங்கம் அதிர்ந்தது.
ஆனால், அதை அடக்கும் விதமாக 30வது நிமிடத்தில் லுகாக்கு மீண்டும் ஒரு கோல் அடிக்க அப்படி ஒரு மயான நிசப்தம். தற்போது பாரிஸ் அணி 3-2 என்ற முன்னிலை வகித்தது. இனி பாரிஸ் அணி கோல் அடிக்கவில்லை என்றாலும் தடுப்பாட்டதில் கவனம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.
கடைசி நிமிட பெனால்டி

கடைசி கட்டத்தில் மான்சஸ்டர் இன்னும் ஒரு கோல் அடித்ததால் 3-3 என சமன் ஆனாலும், அதிக வெளி மைதான கோல்கள் அடிப்படையில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெல்லும் என்றிருந்தது. இரண்டாம் பாதி துவங்கி இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் பாரிஸ் அணி 3-2 என்ற முன்னிலையில் நீடித்தது.
90வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் டலோட் அடித்த பந்து D- பாக்ஸ் உள்ளே இருந்த கிம்பேம்பே கையில் பட, ரிவ்யூ மூலம் பெனால்டி வழங்கப்பட்டது.
ஆட்டத்தின் 90+4வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் முன்கள வீரர் மார்கஸ் ராஷஃபோர்டு பந்தை லாவகமாக வலையில் பொட, இறுதி நொடியில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.