தேசிய பயிற்சி முகாமிற்கு முதல் முறையாக அழைக்கப்பட்ட தமிழக வீரர் சூசைராஜ்

Michael Soosairaj
Michael Soosairaj

உள்நாட்டில் சிறப்பாக ஆடியதற்கு பரிசாக., இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கபட்டுள்ளார் சூசைராஜ். 2017-18 இந்திய லீக் சீசனில் சிறந்த மிட் ஃபீல்டருக்கான விருதை சூசைராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் இதுவரை பயிற்சி முகாமிற்கு அழைக்கப்பட்டதில்லை. இப்போது தான் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளேன். இப்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. சிறப்பாக செயல்பட்டு நிச்சியம் இந்திய அணியில் இடம்பெறுவேன்” என நம்பிக்கையோடு கூறுகிறார் மைக்கேல் சூசைராஜ்.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பை போட்டிக்கு தயாராவதற்காக இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ஸ்டீமேக் 37 வீரர்களை பயிற்சி முகாமிற்கு அழைத்துள்ளார். இதில் ஆறு வீரர்கள் திங்களன்று விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 31 வீரர்களில் 23 பேர்கள் மட்டுமே இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

“23 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் என் பெயர் இடம்பெறுமா என்பது எனக்கு தெரியவில்லை. வீரர்களுக்கு இடையேயான் போட்டி, குறிப்பாக மிட்ஃபீல்டருக்கு அதிகமாக உள்ளது. நான் இறுதிப் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் நான் கவலைப் பட மாட்டேன்” என்கிறார் இந்த தமிழ்நாட்டு வீரர்.

இந்த பயிற்சி முகாமில் எந்த விதமான விளையாட்டு ஸ்டைலை பயிற்சியாளர் ஸ்டீமேக் வலியுறுத்துவார் என இவரிடம் கேட்டால், “ஒன் டச் மற்றும் டூ டச் என்பதை நான் மிகவும் விரும்புவேன். அதோடு ஒன்று சேர்தல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றையும் நான் விரும்புவேன்” என்றார்.

இரண்டு சீசன்களாக (2016-18) இந்தியன் லீக் அணியான சென்னை சூபர் சிட்டிக்கு விளையாடி வந்த சூசைராஜ், சென்ற வருடம் இந்தியன் சூப்பர் லீக்கின் ஜேம்ஷெட்பூர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். நேற்று, இவரையும் இவரது சகோதரர் மைக்கேல் ரெஜினாவையும் கொல்கத்தாவைச் சேர்ந்த ATK அணி ஒப்பந்தம் செய்துள்ளது. “ATK அணுகிய விதம் எங்களுக்கு பிடித்திருந்தது. இப்போது என் சகோதரரும் என்னோடு சேர்ந்து இப்போது விளையாடப் போகிறார். கொல்கத்தாவில் நாங்கள் விளையாடப் போவதை மிகவும் விரும்புகிறேன்” என்கிறார் சூசைராஜ்.

Michael Soosairaj
Michael Soosairaj

களத்தில் எல்லாரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என சுனில் ஷேத்ரி போன்ற மூத்த வீரர்கள் உத்வேகம் அளிப்பார்கள் என்று கூறுகிறார் சூசைராஜ், “உனக்கு இது தான் முதல் பயிற்சி முகாம். அதனால் தேவையில்லாத அழுத்தத்தை உன் மீது போட்டுக் கொள்ளாதே. களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பணிவாக நடந்துகொள் என தனக்கு சுனில் ஷேத்ரி அறிவுரை கூறியதாக தெரிவிக்கிறார் சூசைராஜ்.

பயிற்சி முகாமிற்கு முதல் முறையாக வந்துள்ள மற்றொரு வீரரான ஜோபி ஜஸ்டின் கூறுகையில், “ஒட்டுமொத்த வீரர்களும் எப்படி உடலளவிலும் மனதளவிலும் மற்றும் தந்திரத்திலும் வலிமையாக உள்ளார்கள் என்பதை பயிற்சியாளர் ஸ்டீமேக் சோதிக்க விரும்புகிறார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக திட்டம் வைத்துள்ளார். உங்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டு எங்களிடம் தனியே பேசியுள்ளார். அதை நாங்கள் வெளியே கூற முடியாது” என்கிறார். இவரும் ATK அணிக்காக இந்த சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர் ஸ்டீமேக்கோடு ஐ.எம் விஜயனை ஒப்பீடு செய்வதே தவறானது என தெளிவு படுத்தும் ஜஸ்டின், இந்த உலகில் ஒரே ஒரு விஜயன் தான். அவரிடம் தினமும் பல வித்தைகளை கற்று வருகிறேன். எப்போதும் அவர் உத்வேகம் கொடுப்பவர்” என்கிறார்.

App download animated image Get the free App now