ரியல் மாட்ரிட் அணியை விட்டு சம்மரில் ரொனால்டோ வெளியேறி ஜுவென்டஸ் அணியில் இணைந்ததில் இருந்தே அந்த அணிக்கு பொறாத காலமாகத்தான் இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு சாம்பியன்ஸாக இருந்த ரியல் மாட்ரிட், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அஜாக்ஸ் அணியிடம் 1-4 (3-5) என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து சுற்று 16ல் வெளியேறியது.
தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணி இம்முறை காலிறுதி சுற்றுக்கே தகுதி பெறாதது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், கோப்பா டெல் ரே போட்டியிலும் அரையிறுதியில் எதிரி அணியாக கருதப்படும் பார்சிலோனாவிடம் சொந்த மைதானத்தில் 0-3 என படுதோல்வி அடைந்தது.
10 நாட்களில் 3 முறை பார்சிலோனாவிடம் தோல்வியை தழுவியது. இதில் இரண்டு கோப்பா டெல் ரே போட்டியும் இரு லா லிங்கா போட்டியும் அடங்கும்.
ரியல் மாட்ரிட் அணியில் மாற்றங்கள் தேவைப்படும் தருணம் இது. திறமை வாய்ந்த வீரர்களை வெளியில் அமர்த்தி வைப்பது நீண்ட காலத்திற்கு சரிவராது. அவர்களை விடுவித்தால் நிச்சயம் மற்ற அணிகளுக்கு சிறப்பாக ஆடுவார்கள். அப்படி வெளியேறி தன்னை நிரூபித்துக்கொள்ள தகுதியானவர்களில் 3 நபர்கள் பற்றிய தகவல்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம். அவர்கள் முவரும் பிரீமியர் லீக் செல்ல இருப்பதாக பேச்சுகளும் எழுகின்றன.
#இஸ்கோ
2018 ஆம் ஆண்டுக்கு பிபா வழங்கும் சிறந்த வீரருக்கான விருது லூகா மோட்ரிக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் , இஸ்கோ ரொனால்டோ அணியில் இருக்கையில் அவருக்கு கோல் அடிக்க பல தருணங்களில் காரணமாக இருந்திருக்கிறார். ஆனால், இந்த ஆண்டு இஸ்கோ மிக மோசமான சீசனை சந்தித்து வருகிறார்.
26 வயதான இவர் அனைத்து வித தொடர்களிலும் கிளப்க்கு 26 போட்டிகளில் ஆடி நான்கு கோல்களை அடித்தார், ஆனால் அவர் இந்த சீசனில் லாலிகாவில் 16 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார். காயம் காரணமாகவும் அவர் வெளியில் அமர்த்தப்பட்டார்.
சொலாரி கீழ் இவரால் பெரிதும் செயல்பட முடியவில்லை என்பதே தெளிவாக தெரிகிறது. இவர் கோல் அடித்து அசத்தும் வீரர் இல்லையென்றாலும், நடுகளத்தில் பந்தை லாவகமாக கடத்தி சென்று முன்கள வீரர்களுக்கு அனுப்பி கோல் ஆக்கும் அளவிற்கு திறன் பெற்றவர்.
இவர் நீண்டகாலமாக மான்செஸ்டர் சிட்டி அணியுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற சீசனில் அவர் பிரீமியர் லீக்கில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#மார்கோ அசென்சியோ

ரியல் மாட்ரிட் அணியின் இளம் வீரர்களுள் ஒருவரான அசென்சியோ, திறமையாக தாக்குதலில் ஈடுபடக்கூடியவர். பென்சீமா தற்போது உச்சகட்ட ஃபார்மில் உள்ளதால், இவருக்கு பெரிதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுவரை 34 போட்டிகளில் ஆடியுள்ள அசென்சியோ 6 கோல்கள் அடித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணி மேலிடத்துடன் நல்ல இணக்கத்தில் இருந்தாலும், அடுத்த கட்டத்திற்கு செல்ல சில முடிவுகளை அசென்சியோ எடுத்து தான் ஆக வேண்டும்.
இவர் செல்சி அணியுடன் தொடர்பில் இருந்து வந்தாலும், இரண்டு வருடம் அந்த அணிக்கு வீரர்கள் பரிமாற்றத்தில் தடை இருப்பதால், லிவர்பூல் மற்றும் டாட்டிங்ஹாம் அணியால் இவரின் வரவிற்கு காத்திருப்பதால், அவர்களை நோக்கி அடுத்த சீசனில் அடியெடுத்து வைப்பார் என தெரிகிறது.
#கேரத் பேல்

ரொனால்டோ அணியை விட்டு வெளியேறிய பின் அவரின் இடத்தை பேல் நிரப்புவார் என ரசிகர்களும் அணி நிர்வாகமும் நம்பியது. ஆனால் அவரின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.
இந்த சீசனில் அனைத்து தொடரிலும் சேர்த்து 34 போட்டிகளில் 13 கோல்களை அடித்துள்ளார். இது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம், வருகின்ற சீசனில் பேல் மீண்டும் இங்கிலாந்து நோக்கி நகர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு சீசனாக, மான்செஸ்டர் யுனைடெட் அணி இவரிடம் பேசி வருகிறது. தொடர்ந்து மவுனமாக இருந்து வரும் பேல் இம்முறை பிரீமியர் லீக் நோக்கி நகருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.