எப்போதெல்லாம் ஆப்ரிக்கன் கால்பந்து ஒரு அடி முன்னேறி வைக்கிறதோ அப்போதெல்லாம் இரண்டு அடி பின்னால் போகிறது என்பதை சமீப காலங்களில் பார்த்து வருகிறோம். 2017-ல் நடைபெற்ற ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் (AFCON) ரசிகர்களிண் கண்களுகு விருந்து படைத்தது. தங்களால் எத்தகைய சிறப்பான ஆட்டத்தை வழங்க முடியுமோ அதை ரசிக்கும் படியாக ரசிகர்களுக்கு கொடுத்தது கடந்த தொடர். ஆனால் 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் கலந்து கொண்ட ஐந்து ஆப்ரிக்க அணிகளில் எந்த அணியும் க்ரூப் சுற்றை தாண்டவில்லை. இதற்கிடையில் இன்று எகிப்தில் கோலாகளமாக ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன் தொடங்கவுள்ளது.
எந்தவொரு உலகத் தரமான அணியும் இல்லாததால், இத்தொடர் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா தொடரின் தரத்திற்கு நிகராகாது என வழக்கமாக கூறப்படுவதுண்டு. ஆனால் இந்த முறை நிச்சியம் அப்படி இருக்காது என எதிர்பார்க்கலாம். தொடரை எகிப்து நடத்துவது மட்டுமல்லாமல், 24 அணிகள் கலந்து கொள்வதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் பல முன்னனி வீரர்கள் கலந்து கொள்வதால் இந்த வருட தொடர் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்.
வழக்கமாக குளிர் காலத்தில் தான் ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் தொடர் நடைபெறும். ஆனால் இந்த வருடம் கோடை காலத்தில் (ஜூன் 21 முதல் ஜூலை 19 வரை) நடைபெற இருப்பதாலும், இந்த சமயத்தில் மற்ற எந்த கால்பந்து தொடர்களும் இல்லாததாலும் உலகளவில் பார்வையாளர்களை ஈர்க்கக்கூடும். முஹமது சாலா மற்றும் சடியோ மனே தற்போது தான் தங்கள் லிவர்பூல் அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையை பெற்று தந்துள்ளார்கள். அதே உற்சாகத்தோடு தங்கள் தேசிய அணிக்கு இவர்கள் கோப்பையை பெற்று தருவார்களா?
எகிப்து நாட்டில் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறார் முஹமது சாலா. இந்த முறை தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் கோப்பையை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே இரண்டு முறை (1986 மற்றும் 2006) இந்த தொடரை நடத்தியுள்ள எகிப்பது, அந்த இரண்டு முறையும் கோப்பை வென்று சாதித்தது. உள்நாட்டில் நடைபெறுவதால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற அழுத்தம் எகிப்து அணிக்கு இருக்கும். அணுபவம் வாய்ந்த பல வீரர்களை கொண்ட எகிப்து அணி, முஹமது சாலாவை தான் முழுமையாக நம்பியுள்ளது.
எகிப்தை தவிர்த்து பார்த்தால், கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள மற்றொரு நாடாக செனகல் கருதப்படுகிறது. தொடர்ந்து பல திறமையான வீரர்களை உற்பத்தி செய்யும் செனகல், இன்னும் ஒரு தடவை கூட ஆப்ரிக்க கப் ஆஃப் நேஷன்ஸ் கோப்பையை வெல்லாதது ஆச்சர்யமாக உள்ளது. அதற்கான தருணம் இப்போது வந்துள்ளதாக பலர் கருதுகின்றனர். ஏனென்றால் செனகல் அணியின் நட்சத்திர வீரர் சடியோ மனே தற்போது முழு ஃபார்மில் உள்ளார்.
இது தவிர 43 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் கோப்பை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது மொராக்கோ அணி. அணுபவம் வாய்ந்த தடுப்பாட்ட வீரர்களான மெதி பெனடியா மற்றும் ரொமய்ன் சாய்ஸ் அணிக்கு பக்கபலமாக உள்ளார்கள். கடந்த 12 மாதங்களில் கேமரூன் துனிசியா போன்ற அணிகளை வென்றதோடு உலக கோப்பையில் ஸ்பெயின் அணியை டிரா செய்த நம்பிக்கையோடு இந்த தொடரில் களம் இறங்குகிறது மொரோக்கோ.
முஹமது சாலாவை தவிர இந்த தொடரில் கலக்க காத்திருக்கும் வீரர்கள்.
ரியாத் மஹ்ரெஸ் - அல்ஜீரியா
தனது முதல் சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடிய ரியாத், அணிக்கு தேவைப்பட்ட சமயத்தில் தனது பங்களிப்பை வழங்க தவறியதில்லை. மான்செஸ்டர் சிட்டி கோப்பை வென்ற அன்று இவர் அடித்த கோலை அவ்வுளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது. அதே ஆட்டத்தை தனது தேசிய அணிக்காகவும் விளையாடுவாரா? ஆப்ரிக்க கண்டத்தில் அல்ஜீரியா பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், இதுவரை இந்த கோப்பையையும் வாங்கியதில்லை. இந்த முறை ரியாத் மஹ்ரெஸ் சிறப்பாக விளையாடினார் என்றால் அல்ஜீரியா கோப்பை வெல்ல அதிக வாய்புள்ளது.
ஹகிம் ஜியெச் – மொரொக்கோ
தனது சிறப்பான ஆட்டத்தால் ட்ச்சு அணியான அஜ்க்ஸை சாம்பிய்ன்ஸ் லீக் அரையிறுதி வரை அழைத்துச் சென்றுள்ளார் ஹகிம் ஜியெச். கடந்த சீசனில் இவரது சிறப்பான செயல்பாட்டை பார்த்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ப்ரீமியர் லீக் அணிகள் இவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றன. ரஷ்யாவில் நடைபெற்ற உலக கோப்பையில் தாங்கள் எப்படிபட்ட அணியையும் வெல்லும் வலிமையுள்ளவர்கள் என்பதை நிரூபித்துள்ளது மொரொக்கோ. தற்போது சிறந்த ஃபார்மில் உள்ள ஹகிம் மொரோக்கா அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வாரா?
நிகோலஸ் பெபெ – ஐவரி கோஸ்ட்
லீகு 1 தொடரில் இந்த சீசனில் 38 போட்டிகளில் கலந்து கொண்டு 22 கோல்களை அடித்துள்ளார் நிகோலஸ் பெபெ. அதுமட்டுமல்லாமல் 11 முறை சக வீரர்கள் கோல் அடிக்கவும் உதவி புரிந்துள்ளார். இதே ஃபார்மை தனது தேசிய அணியான ஐவரி கோஸ்டுக்கும் வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ட்ரோக்பா, யாயா டவுரே ஓய்வுக்குப் பிறகு வலிமை குன்றிய அணியாக கருதப்படும் ஐவரி கோஸ்டை தனது சிறப்பான ஆட்டத்தால் தலைநிமிர வைப்பாரா நிகோலஸ்?