இந்த வருட ப்ரீமியர் லீக் சீசன் கடைசி கட்டம் வரை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு அணியும் கோப்பைக்காக கடுமையாக போராடிய நிலையில், பெப் கார்டியாலாவின் மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ரீமியர் லீக் கோப்பையை வென்றது. லிவர்பூல் அணியை விட ஒரு புள்ளி மட்டுமே அதிகம் பெற்று மான்செஸ்டர் சிட்டி கோப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது அனைத்து போட்டிகளும் முடிந்து, யார் சாம்பியன் என்று தெரிந்த நிலையில், இந்த வருட சீசனில் யார் சிறந்த விங்கர்கள் என்ற பட்டியலை இப்போது பார்ப்போம். இந்த வருடம் பல விங்கர்கள் தங்கள் அணிக்காக கோல் அடித்து வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல் தங்கள் அணியின் வீரர்கள் கோல் அடிப்பதற்கு உதவியாகவும் இருந்துள்ளனர்.
இந்த வருட ப்ரீமியர் லீக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட 5 விங்கர்களின் பட்டியல் இதோ…
5. ரியான் ஃப்ரேசர்
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ரியான் ஃப்ரேசர், AFC Bournemouth அணிக்காக வலதுபுற விங்கராக விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு இந்த அணியில் சேர்ந்த ரியான் இதுவரை 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த சீசனில் 45 புள்ளிகளை பெற்று ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 14-வது இடமே பிடித்தாலும், இந்த சீசன் முழுவதும் தனது முழு திறமையை பயன்படுத்தி அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளார் ரியான். தனது அணிக்காக ஏழு கோல்களையும் 14 முறை கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார் ரியான். தனது காலடியில் பந்தை வைத்து கொண்டு வேகமாக ஒடும் திறன் கொண்ட ரியான், எதிரணியின் தடுப்பாட்ட வீரர்களீடம் சின்ன இடைவெளி கிடைத்தாலும் அதை கோல் அடிக்க பயன்படுத்துவதில் வல்லவர்.
4. ரஹீம் ஸ்டெர்லிங்
2015-ம் ஆண்டு லிவர்பூல் அணியிலிருந்து மான்செஸ்டர் சிட்டிக்கு மாறிய ரஹீம் ஸ்டெர்லிங், கடந்த வருடம் போல் இந்த வருடமும் தனது அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். பெப் கார்டியாலாவின் மேலாண்மையில், மான்செஸ்டர் சிட்டியின் தாக்குதல் ஆட்டத்தில் முக்கியமான வீரராக திகழ்கிறார் ஸ்டெர்லிங்.
இந்த ஆண்டு 34 போட்டிகளில் விளையாடி, 17 கோல்களையும் 10 முறை தன் சக வீரரகள் கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார் ஸ்டெர்லிங். இந்த ஆண்டு இடது புறத்தில் இருந்து அதிகமான கோல்களை இவர் அடித்துள்ளார். தனது கடுமையான உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் உலகின் சிறந்த விங்கராக திகழ்கிறார் ஸ்டெர்லிங்.
3. சடியோ மனே
செனகல் நாட்டைச் சேர்ந்த சடியோ மனே, லிவர்பூல் அணிக்காக இடதுபுற விங்கராக செயல்பட்டு வருகிறார். இந்த சீசன் லிவர்பூல் அணிக்கு மறக்க முடியாத சீசனாகும். ஏனென்றால் 97 புள்ளிகள் எடுத்தும் அந்த அணியால் ப்ரீமியர் லீக் கோப்பையை வெல்ல முடியவில்லை. ப்ரீமியர் லீக்கில் மிகவும் கடுமையாக உழைக்கும் அணிகளில் லிவர்பூலும் ஒன்று என்பதை இந்த சீசனில் நிரூபித்துள்ளார் ஜர்கன் க்ளோப்.
36 போட்டிகளில் விளையாடி 22 கோல்களையும் ஒரு முறை கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார் சடியோ. மேலும், ப்ரீமியர் லீக்கில் அதிக கோல் அடித்த வீரர்களுக்காக வழங்கப்படும் தங்க காலனி விருதை தன் சக அணி வீரரான முகமது சாலா மற்றும் ஆர்செனல் வீரர் ப்யாரே எமிரிக் அவுபாமீயாங்கோடு பகிர்ந்து கொண்டார். இந்த சீசனில் தன் கால்களால் மட்டுமல்ல, தலையாலும் கோல் அடித்துள்ளார் சடியோ.
2. முகமது சாலா
தொடர்ந்து இரண்டாவது வருடமாக தங்க காலனி விருதை வென்றுள்ளார் முகமது சாலா. கடந்த சீசனில் 36 போட்டிகளில் 32 கோல்கள் அடித்த இந்த எகிப்திய வீரர், இந்த ஆண்டு 38 போட்டிகளில் விளையாடி 22 கோல்களை அடித்துள்ளார். 2016-ம் ஆண்டு லிவர்பூல் அணீயில் சேர்ந்த சாலா, அதிலிருந்து அணியின் தூணாக விளங்குகிறார். ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ள சம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில், தனது முழு திறமையையும் பயன்படுத்தி லிவர்பூல் அணிக்கு கோப்பை வென்று தருவார் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
1. ஈடன் ஹசார்ட்
கடந்த ஆண்டு உலக கோப்பையிலிருந்து இப்போது வரை ஈடன் ஹசார்ட் ஃபார்மில் இம்மியளவு கூட குறையவில்லை. இந்த சீசனில் செல்சீ அணியை பல போட்டிகளில் தனி ஆளாக வெற்றி பெற வைத்துள்ளார். இந்த வருடம் 16 கோல்களையும் 15 முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார் ஹசார்ட். இதனால் தான் இவரை பல அணிகள் ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றன.
இந்த சீசனில் பல அற்புதமான கோல்களை அடித்துள்ளார் ஹசார்ட். ,முக்கியமாக, வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியுடனான போட்டியில், ஐந்து தடுப்பாட்ட வீரர்களை கடந்து அற்புதமாக கோல் அடித்தார் ஹசார்ட். அடுத்த சீசனில் ரியல் மாட்ரிட் அணிக்கு ஹசார்ட் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.தொடர்ந்து செல்சீ அணிக்கு விளையாடுவாரா அல்லது ரொனால்டோ இல்லாமல் தினறும் ரியல் மாட்ரிட் அணிக்குச் செல்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.