"CIES Football Observatory" என்ற அமைப்பு சமீபத்தில் கால்பந்து விளையாட்டில் தற்போதைய நிலவரப்படி அதிக தொகைக்கு மதிப்பிடப்படும் ஐந்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த 5 வீரர்கள் யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
5. ஜேடன் சான்சோ
இவருடைய சந்தை மதிப்பு – 159.4 யூரோ மில்லியன்
மான்செஸ்டர் சிட்டி யூத் அகாடமியில் இருந்து வெளிவந்த முக்கியமான வீரர் ஜேடன் சன்சோ. ஆனால் அகாடமியை விட்டு வெளியே வந்ததும் ஜெர்மன் அணியான போரிஸா டோர்ட்மெண்ட் அணிக்கு விளையாடச் சென்றார். அப்போது வெறும் எட்டு மில்லியன் யூரோவிற்கே சான்சோவை ஒப்பந்தம் செய்தது போரிஸா டோர்ட்மெண்ட். இளம் வீரர்களை உலகத் தரமான வீரர்களாக மாற்றும் போக்கு எப்போதும் போறரிஸா அணியில் உள்ளது.
தற்போது இவரும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளார். முதல் வருடத்தில் தான் விளையாடிய 12 போட்டிகளில் ஒரு கோலும், நான்கு முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார். இவரது சிறப்பான விளையாட்டைப் பார்த்து இங்கிலாந்து அணியில் சேர்த்தார் பயிற்சியாளர் சவுத்கேட். ஐரோப்பாவில் உள்ள முக்கிய அணிகள் இவர் மீது கண் வைத்துள்ள நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் அணி இவரை ஒப்பந்தம் செய்ய மிகுந்த விருப்பம் காட்டுகிறது. இப்போதுள்ள நிலவரப்படி இவருடைய மதிப்பு 159.4 யூரோ மில்லியன்.
4. லியோனல் மெஸ்ஸி
இவருடைய சந்தை மதிப்பு – 167.4 யூரோ மில்லியன்
ஒரு கால்பந்து வீரராக மெஸ்ஸியின் சாதனைகளை கூற இந்தப் பக்கங்கள் போதாது. கால்பந்து விளையாட்டுக்கென்றே பிறவி எடுத்தார்ப் போல் உள்ளார் மெஸ்ஸி. வருடம் மாறுகிறதே தவிர அவருடைய கோல் அடிக்கும் தாகம் இன்னும் குறையவேயில்லை. இந்த வருட சீசனிலும் 51 கோல்களை அடித்து அசத்தியதோடு தனது பார்சிலோனா அணி லா லீகா கோப்பையை வெல்ல உதவியும் புரிந்துள்ளார்.
ஆனால் சம்பியன்ஸ் லீக் தொடர் இவருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இருந்தாலும், இந்த முறை பலோன் டி ஆர் விருதை வெல்ல மெஸ்ஸிக்கே அதிக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இந்த விருதை வென்றால் இது அவருக்கு ஆறாவது முறையாகும். தற்போது தனது தேசிய அணியான அர்ஜெண்டினாவிற்கு தனது கேப்டன்சியின் கீழ் முதல் சர்வதேச கோப்பையை பெற்று தரும் முயற்சியில் கோப்பா அமெரிக்கா தொடரில் விளையாடி வருகிறார்.
3. ரஹீம் ஸ்டெர்லிங்
இவருடைய சந்தை மதிப்பு – 217.8 யூரோ மில்லியன்
மன்செஸ்ட்ர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் சமீப காலமாக தவறான காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் அடிபட்டு வருகிறார். இவர் மீதான விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், களத்தில் இவரது செயல்பாடு கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பாகவே இருந்துள்ளது. பாப் கார்டியாலோ மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளர் ஆன பிறகு, ப்ரீமியர் லீக்கின் சிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் ஸ்டெர்லிங்.
இந்த சீசனில் 25 கோல்களும் 12 முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ள ஸ்டெர்லிங், ப்ரீமியர் லீக்கின் சிறந்த இளம் விருதை வென்றுள்ளர். ப்ரீமியர் லீக் கோப்பையை இரண்டாவது முறையாக மான்செஸ்டர் சிட்டி வெல்ல உதவியதோடு உள்நாட்டில் மூன்று கோப்பைகளை வென்ற முதல் இங்கிலாந்து அணி என்ற பெருமையையும் மான்செஸ்டர் அணி பெற உதவி புரிந்துள்ளார். இங்கிலந்து தேசிய அணியிலும் இவர் முக்கியமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. முஹமது சாலா
இவருடைய சந்தை மதிப்பு – 219.6 யூரோ மில்லியன்
செல்சீ அணியில் விளையாடிய போது மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, தன் திறமை மீது சந்தேகப்படவர்கள் முன் நிரூபித்து காட்ட வேண்டும் என்ற வெறியில் லிவர்பூல் அணியில் சேர்ந்த சாலா, அந்த சீசனில் 32 கோல்களை அடித்தார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக கோல்களை அடித்த ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். இந்த வருட சீசனிலும் 27 கோல்களை அடித்து லிவர்பூல் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்ல உதவி புரிந்துள்ளார்.
லிவர்பூல் அணி இவரை 42 யூரோ மில்லியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்த போது, இவருக்கு இது அதிகப்படியான தொகை என பலரும் விமர்சித்தனர். ஆனால் தாங்கள் செலவழித்த தொகை நியாயமானது தான் என லிவர்பூல் அணியை எண்ண வைத்துள்ளார் சாலா. இவருடைய சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
1. கைலான் ம்பாபே
இவருடைய சந்தை மதிப்பு – 252 யூரோ மில்லியன்
2016/17 சீசனில் கைலான் ம்பாபே ஏஎஸ் மோனகோ அணிக்காக விளையாடிய போது 21 கோல்களை அடித்து அசத்தினார். அதோடு தனது அணி லீகு 1 கோப்பயை வெல்ல உதவினார். இவரை ஒப்பந்தம் செய்ய ரியல் மாட்ரிட் மற்றும் பிஎஸ்ஜி அணிகள் போட்டி போட, கடைசியில் பிரென்ச் அணியான பிஎஸ்ஜி அணிக்காக 180 யூரோ மில்லியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதுவரை அனைவரின் எதிர்பார்பையும் பூர்த்தி செய்யும் விதமாகவே விளையாடி வருகிறார் ம்பாபே. இந்த சீசனில் மட்டும் 39 கோல்களை அடித்துள்ளதோடு 12 முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இந்த இளம் வீரர் கல்பந்து உலகில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கிறார்.