பார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்

லூயிஸ் என்ரிக்
லூயிஸ் என்ரிக்

உலகில் சிறந்த விளையாட்டு கால்பந்து தான் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வர். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட உலகின் ஏதோ ஒரு மூலையில் தொழில்முறையாகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ ஏதாவது ஒரு அணி கால்பந்தை விளையாடிக் கொண்டிருக்கும். அந்தளவிற்கு பிரபலமானது கால்பந்து விளையாட்டு. உணர்ச்சிகளும், உணர்வுகளும், கொண்டாட்டங்களும் அடங்கியதே கால்பந்து விளையாட்டு.

பட்டியல் போடுவது என்றாலே ஒரு அலாதியான விஷயம். அதுவும் விளையாட்டில் பட்டியல் போடுவதற்கு கேட்கவா வேண்டும்! உனக்கு பிடித்தவர் பட்டியலில் உள்ளாரா, எனக்கு பிடித்தவர் பட்டியலில் உள்ளாரா என இந்த பட்டியலை வைத்து நண்பர்களிடையே பெரிய சண்டையே (விளையாட்டாக) நடைபெறும். அப்படிப்பட்ட பட்டியல் ஒன்றை தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பார்சிலோனா கிளப் சாதனைக்கு பெயர் பெற்றது. ஐரோப்பாவின் பல பரிசுக் கோப்பைகளை பெற்றுள்ள பார்சிலோனா கிளப், உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எதனால் பார்சிலோனா வெற்றிகரமான கிளப்பாக இருக்கிறது? அதன் நிர்வாகத்தினாலா? அதன் ரசிகர்கள் காரணமா? இல்லவே இல்லை. பார்சிலோனா வெற்றிகு ஒரே காரணம் அதன் வீரர்கள் மட்டுமே.

அப்படிப்பட்ட பார்சிலோனா அணியின் தலைசிறந்த பத்து வீரர்களின் பட்டியலே இது.

10. லூயிஸ் என்ரிக்:

ஒரு பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்கின் திறமையை அனைவரும் அறிவர். ஆனால் பல திறமைகளை கொண்ட என்ரிக், பார்சிலோனா அணிக்காக விளையாடிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆட்டத்தின் போது பந்தை லாவகமாக கடத்துவதும், கோலிற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும் இவருக்கு கை வந்த கலை. இவரது கால்பந்து திறம் மட்டுமல்லாமல் இவரது கோபமும், போராட்ட குணமும் ரசிகர்களிடம் ஏக பிரபலம்.

9. அண்டோனி ரமலெட்ஸ்:

அண்டோனி
அண்டோனி

மதிப்பு வாய்ந்த சமோரா கோப்பையை ஐந்து முறை வாங்கிய அண்டோனி ரமலெட்ஸ், பார்சிலோனா அணியின் மிகச்சிறந்த கோல்கீப்பர் ஆவார். களத்தில் சுறுசுறுப்போடும் அறிவாற்றலோடும் செயல்படும் அண்டோனி, எந்த இடத்தில் நின்றால் தன்னால் எதிரணி அடிக்கக்கூடிய கோலை தடுக்க முடியும் என நன்கு அறிந்து வைத்திருப்பவர். பந்தை எப்படி தடுக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் அண்டோனி, கண் இமைக்கும் நேரத்தில் பந்தை பிடித்து எதிரணியின் எல்லைக்குள் போடுபவர். கோல்கீப்பருக்கென்று புதிய அடையாளத்தை கொடுத்ததோடு பார்சிலோனா அணியை பல உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்.

8. பெப் கார்டியாலா:

பெப் கார்டியாலா
பெப் கார்டியாலா

நவீன காலகட்டத்தின் மிகச்சிறந்த பயிற்சியாளராக அறியப்படும் பெப் கார்டியாலா, பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார் என்ற விபரம் ஒரு சிலருக்கே தெரியும். படைப்பு திறன்மிக்க வீரராக கருதப்படும் கார்டியாலா, முதன் முதலாக ஐரோப்பிய கோப்பையை பார்சிலோனா அணி வென்ற போது அந்த "கனவு அணியின்" அங்கமாக இருந்தவர். சில ஆண்டுகள் பார்சிலோ அணியின் கேப்டனாகவும் இருந்தவர். பின்னாளில் தான் விளையாடிய அணிக்கே பயிற்சியாளராக வந்து நான்கு ஆண்டுகளில் 14 கோப்பைகளை பார்சிலோனா அணி வெல்ல காரணமாக இருந்தார். தான் விளையாடிய காலத்திலேயே டிக்கி-டாக்கா முறையை பின்பற்றிய கார்டியாலா, தனது பயிற்சியாளர் காலகட்டத்தில் இந்த முறையை பிரபலமாக்கினார்.

7. ரிவால்டோ:

ரிவால்டோ
ரிவால்டோ

மத்திய கள ஆட்டக்காரரான ரிவால்டோ, 1998 மற்றும் 1999-ம் ஆண்டு பார்சிலோனா அணி லா லிகா கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். நமது மனதை மயக்கும் வகையில் ஃப்ரீ கிக் வாய்ப்புகளை கோலாக மாற்றும் ரிவால்டோ, தன் தலைமுறை வீரர்களில் படைப்பாற்றல் மிக்க வீரராக அறியப்படுகிறார். எவ்வுளவு தொலைவிலிருந்தும் கோல் அடிக்கும் திறன், பைசைக்கிள் கிக் போன்ற அற்புதமான திறமைகளை பெற்றுள்ள ரிவால்டோ, பெனால்டி அடிப்பதில் வல்லவர்.

6. ஜோகன் குருய்ஃப்:

ஜோகன் குருய்ஃப்
ஜோகன் குருய்ஃப்

1970-களில் பார்சிலோனா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஜோகன் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். கோல் அடிக்கும் திறனுக்காக அறியப்படும் ஜோகன், பார்சிலோனா அணி பல போட்டிகளையும் கோப்பைகளையும் வெல்ல காரணமானவர். கால்பந்தில் இவர் கண்டுபிடித்த 'குருய்ஃப் வளைவு' முறையை இன்று பல வீரர்கள் பின்பற்றுகிறார்கள். பந்தை முன்னகர்த்தி செல்வதிலும், வேகத்திலும் ஜோகனை மிஞ்ச முடியாது. பார்சிலோனா அணிக்கான கால்பந்து தத்துவத்தை உருவாக்கியவர் ஜோகன் தான் என கூறுவதில் எந்த மிகையுமல்ல என்கிறார் மற்றொரு முக்கிய வீரரான ஜாவி.

5. கார்லோஸ் புயோல்

கார்லோஸ் புயோல்
கார்லோஸ் புயோல்

தனது வாழ்க்கையையே பார்சிலோனா அணிக்கு கொடுத்தவர் என்றால் அது கார்லோஸ் புயோலாகத் தான் இருக்க முடியும். நீண்ட காலம் பார்சிலோனா அணிக்கு கேப்டனாக இருந்த புயோல், மூன்று சாம்பியன்ஸ் லீக் கோப்பை உள்பட 20 கோப்பைகளை வென்றுள்ளார். இன்று கால்பந்து கிளப்புகளில் பலமான அணியாக பார்சிலோனா இருக்கிறதென்றால் அதற்கு தடுப்பாட்ட வீரராக 15 வருடங்கள் அணுபவம் கொண்ட புயோலும் ஒரு காரணம். எதிரணி வீரரை கோல் அடிக்க விடாமல் தடுப்பதிலும் டேக்கிள் செய்வதில் புயோல் திறன் பெற்றவர்.

4. ரொனால்டினோ:

ரொனால்டினோ
ரொனால்டினோ

ரொனால்டினோவின் கால்பந்து திறமையும் பந்தை வைத்து எதிரணி வீரருக்கு அவர் வித்தை காட்டுவதையும் உலகமே அறியும். ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் பார்சிலோனா அணிக்காக விளையடிய போதே ரொனால்டினோ பிரபலம் அடைந்தார். பார்சிலோனாவின் பெருமைக்குரிய பத்தாம் நம்பர் ஜெர்சியை இவர் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எதிரணி கூட மதிக்கும் வீரரான ரொனால்டினோ பார்சிலோனா அணிக்காக 140 போட்டிகளில் விளையாடி 70 கோல்கள் அடித்துள்ளார்.

3. இனியஸ்டா:

இனியஸ்டா
இனியஸ்டா

மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் வகையில் ஆடும் மத்திய கள ஆட்டக்காரரான இனியஸ்டா, ஸ்பெயின் கால்பந்து அணியின் முக்கிய வீரர் ஆவார். இவரும், சக வீரரான ஜாவியும் இணைந்து 2008-09 காலகட்டங்களில் பார்சிலோனா அணிக்கு பல கோப்பைகளை பெற்று தந்தனர். மற்ற வீரர்கள் கோல் அடிப்பதற்கு உதவி புரியும் இனியஸ்டா, பந்தை முன்னகர்த்திச் செல்லும் திறனுக்காகவும் நெருக்கடியான சமயங்களில் கூட மன அமைதியோடு இருப்பதற்காகவும் கால்பந்து உலகில் அறியப்படுபவர். இவரை ஒரு ஆல்-ரவுண்டர் என்றே கூறலாம். ஏனென்றால் அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் தடுப்பாட்டத்திலும் இக்கட்டான சமயத்தில் கோல் அடிப்பதிலும் வல்லவர்.

2. ஜாவி:

ஜாவி
ஜாவி

உலகின் மிகச்சிறந்த மத்திய கள ஆட்டக்காரராக அறியப்படும் ஜாவி, பார்சிலோனா அணிக்காக இதுவரை விளையாடியுள்ள வீரர்களில் தலைசிறந்த வீரர் என சந்தேகம் இன்றி கூறலாம். டிக்கி-டாக்கா முறையில் ஆடும் வித்தையை பார்சிலோனா அணியில் அற்புதமாக பின்பற்றியவர் இவரே. எதிரணி வீரரிடம் சிக்காமல் பந்தை கடத்துவதில் இவரை அடித்துகொள்ள ஆள் கிடையாது. தூரத்திலிருந்து கூட பந்தை கச்சிதமாக கடத்தும் ஜாவி, தான் கோல் அடிக்க வேண்டும் என்று நினைக்காமல் அடுத்த வீரர்கள் கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பவர்.

1. லியோனல் மெஸ்ஸி:

மெஸ்ஸி
மெஸ்ஸி

"இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்" என்ற எந்திரன் பாட்டுக்கு ஏற்றார்ப் போல் கால்பந்து விளையாட்டிற்கென்றே கடவுளால் படைக்கப்பட்டவரே மெஸ்ஸி. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி தான் என்று கூறுவதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இன்று இந்தளவிற்கு உச்சானி கொம்பில் பார்சிலோனா அணி இருக்கிறதென்றால் அதற்கு முழு முதற் காரணம் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக அதிக கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, பந்தை கடத்திச் செல்லும் திறனுக்காகவும் எந்த சூழ்நிலையிலும் கோல் அடிக்கும் திறனுக்காகவும் கால்பந்து வரலாற்றில் இடம்பெற்றவர். இடது கால் வீரராக இருந்தாலும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. வருங்காலத்திலும் பார்சிலோனா அணிக்கு பல கோப்பைகளை பெற்று தருவதோடு தன் அற்புதமான விளையாட்டால் ரசிகர்களுக்கும் தொடர்ந்து விருந்து படைப்பார் மெஸ்ஸி.

App download animated image Get the free App now