3. இனியஸ்டா:
மற்றவர்களின் மனதை வசீகரிக்கும் வகையில் ஆடும் மத்திய கள ஆட்டக்காரரான இனியஸ்டா, ஸ்பெயின் கால்பந்து அணியின் முக்கிய வீரர் ஆவார். இவரும், சக வீரரான ஜாவியும் இணைந்து 2008-09 காலகட்டங்களில் பார்சிலோனா அணிக்கு பல கோப்பைகளை பெற்று தந்தனர். மற்ற வீரர்கள் கோல் அடிப்பதற்கு உதவி புரியும் இனியஸ்டா, பந்தை முன்னகர்த்திச் செல்லும் திறனுக்காகவும் நெருக்கடியான சமயங்களில் கூட மன அமைதியோடு இருப்பதற்காகவும் கால்பந்து உலகில் அறியப்படுபவர். இவரை ஒரு ஆல்-ரவுண்டர் என்றே கூறலாம். ஏனென்றால் அணிக்கு தேவைப்படும் பட்சத்தில் தடுப்பாட்டத்திலும் இக்கட்டான சமயத்தில் கோல் அடிப்பதிலும் வல்லவர்.
2. ஜாவி:
உலகின் மிகச்சிறந்த மத்திய கள ஆட்டக்காரராக அறியப்படும் ஜாவி, பார்சிலோனா அணிக்காக இதுவரை விளையாடியுள்ள வீரர்களில் தலைசிறந்த வீரர் என சந்தேகம் இன்றி கூறலாம். டிக்கி-டாக்கா முறையில் ஆடும் வித்தையை பார்சிலோனா அணியில் அற்புதமாக பின்பற்றியவர் இவரே. எதிரணி வீரரிடம் சிக்காமல் பந்தை கடத்துவதில் இவரை அடித்துகொள்ள ஆள் கிடையாது. தூரத்திலிருந்து கூட பந்தை கச்சிதமாக கடத்தும் ஜாவி, தான் கோல் அடிக்க வேண்டும் என்று நினைக்காமல் அடுத்த வீரர்கள் கோல் அடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பவர்.
1. லியோனல் மெஸ்ஸி:
"இவன் பேரைச் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்" என்ற எந்திரன் பாட்டுக்கு ஏற்றார்ப் போல் கால்பந்து விளையாட்டிற்கென்றே கடவுளால் படைக்கப்பட்டவரே மெஸ்ஸி. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி தான் என்று கூறுவதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இன்று இந்தளவிற்கு உச்சானி கொம்பில் பார்சிலோனா அணி இருக்கிறதென்றால் அதற்கு முழு முதற் காரணம் மெஸ்ஸி. பார்சிலோனா அணிக்காக அதிக கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, பந்தை கடத்திச் செல்லும் திறனுக்காகவும் எந்த சூழ்நிலையிலும் கோல் அடிக்கும் திறனுக்காகவும் கால்பந்து வரலாற்றில் இடம்பெற்றவர். இடது கால் வீரராக இருந்தாலும் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. வருங்காலத்திலும் பார்சிலோனா அணிக்கு பல கோப்பைகளை பெற்று தருவதோடு தன் அற்புதமான விளையாட்டால் ரசிகர்களுக்கும் தொடர்ந்து விருந்து படைப்பார் மெஸ்ஸி.