சென்னை சிட்டி கால்பந்து அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக திகழும் 22 வயதான அலெக்சாண்டர் ரொமரியோ ஜேசுராஜ், இந்த ஆண்டு இந்தியன் லீக் தொடரில் தொடர்ச்சியாக எல்லா போட்டிகளிலும் நன்றாக விளையாடி வருகிறார். அதோடு எதிர்காலத்தில் சிறந்த கால்பந்து வீரராக வரக்கூடிய எல்லா தகுதியும் இவரிடம் உள்ளதாக கால்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை சிட்டி அணிக்காக வலது பக்கவாட்டில் கச்சிதமாக செயல்படும் ஜேசுராஜ், ஸ்பானிஷ் மூவர்களான மான்சி க்ரூஸ், சான்ட்ரோ ரோட்ரிகுஸ் மற்றும் நெஸ்டர் கோர்டிலோ ஆகியோர்களின் ஆட்டத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு இந்தியன் லீக் தொடரில் மொத்தம் 17 போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு கோல்களை அடித்துள்ளார் ஜேசுராஜ்.
தனக்கு கால்பந்தின் மீது எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது என்றும் சென்னை சிட்டி அணியில் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டேன் என்றும் ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு அளித்த பேட்டியில் விரிவாக கூறியுள்ளார் அலெக்சாண்டர் ஜேசுராஜ். அதை இங்கு சுருக்கமாக காண்போம்…
“எனது மாமா திரவியம் தீவிரமான கால்பந்து ரசிகர். அவருக்கு பிரேசில் அணி மீது தீராத காதல் உண்டு. அதன் காரணமாகவே, எனக்கு பிரேசிலின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ரொமரியோ டீ சவுசா ஃபரியா-வின் பெயரை வைத்தார். நான் ஒரு சிறந்த கால்பந்து வீரராக வர வேண்டும் என்பது அவரது ஆசை. என்னை கால்பந்து மைதானத்திற்கு அழைத்துச் சென்றும் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்க வைத்தும் கால்பந்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தினார்”.
“நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது திண்டுக்கல் அணிக்காக மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடினேன். அதன்பிறகு, நான் 13 வயதாக இருக்கும் போதே தமிழக U-16 அணியில் தேர்வானேன். பின்னர் சென்னையிலுள்ள கிறிஸ்துவ கல்லூரியில் சேர்ந்த என்னை, உடற்பயிற்சி இயக்குனர் ஜெபசிங் சிறந்த கால்பந்து வீரராக மாற்றினார். நான் இன்று கால்பந்து வீரனாக இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் இவரே”.
ஜாம்ஷெட்பூர் அணி வீரர் சூசைராஜ் பற்றி கூறுகையில், “எங்கள் கல்லூரி அணியில் ஏற்கனவே மைக்கேல் சூசைராஜ் மற்றும் அஜித் குமார் ஆகியோர் இருந்தனர். இந்திய U-13 அணி முகாம் கோவாவில் நடைபெற்ற சமயத்திலேயே சூசைராஜை எனக்கு நன்றாக தெரியும். நாங்கள் இருவருமே நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்போதும் எனக்கு உதவுபவர் சூசைராஜ்” என தெரிவித்தார்.
சென்னை சிட்டி அணிக்காக தேர்வு செய்யப்படுவதற்கு முன் இரண்டு வருடங்கள் இந்திய வங்கி அணிக்காக விளையாடியது எனக்கு நல்ல அணுபவமாக இருந்தது. சென்னை சிட்டி அணிக்கு தேர்வானதும் முதலில் என் மாமாவிடம் தான் தெரிவித்தேன். அன்று அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. எனக்கு எப்போதெல்லாம் ஆதரவும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் செல்வது என் மாமாவிடம் மட்டுமே.
சென்னை சிட்டி அணி குறித்து பேசுகையில், “இந்த வருட இந்தியன் லீக் தொடரில் நான் தொடர்ந்து நன்றாக விளையாடுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் எங்கள் அணியின் பயிற்சியாளர் தான். ஒவ்வொரு வீரரிடமும் அவர் காட்டும் அக்கறை அளப்பரியது. கடந்த முறை எங்கள் அணி இந்தியன் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்படும் நிலையில் இருந்தது. ஆனால் எங்கள் பயிற்சியாளரின் திட்டமிடலும் சரியான வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்ததும் எங்கள் அணிக்கு பலமிக்கதாக இருந்ததோடு இந்த முறை கோப்பையை வெல்லும் நிலையில் உள்ளோம். மேலும் இந்தாண்டு தொடர் தொடங்குவதற்கு முன்பு நடைபெற்ற மூன்று மாத முகாம் வீரர்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியை அளித்தது. அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறார்கள். சென்னை சிட்டி கால்பந்து குடும்பத்தில் நானும் ஒரு அங்கம் என்பது பெருமையாக உள்ளது” என சந்தோஷமாக கூறுகிறார் ஜேசுராஜ்.