நான் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதிலேயே தற்போதுள்ள லிவர்பூல் அணியே பலம் வாய்ந்தது என அந்த அணியின் பயிற்சியாளர் ஜர்கன் க்ளாப் கூறியுள்ளார். சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணியை சந்திக்கவுள்ளது லிவர்பூல்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள லிவர்பூல், இந்த முறை கட்டாயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது. அரையிறுதியில் பார்சிலோனா அணியிடம் பெற்ற வெற்றி இவர்களின் மன உறுதியை வெளிப்படுத்தும். முதல் லெக் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த போதும் சற்றும் மனம் தளராமல் இரண்டாவது லெக்கில் நான்கு கோல் அடித்து வெற்றி பெற்றது லிவர்பூல்.
ஒரு பயிற்சியாளராக இது க்ளாப்பிற்கு நான்காவது ஐரோப்பியன் ஃபைனல். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற போரிஸா டோர்ட்மண்ட் அணியின் பயிற்சியாளராகவும் 2016-ம் ஆண்டு ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் தோற்ற லிவர்பூல் அணியின் பயிற்சியாளராகவும் க்ளாப் இருந்துள்ளார்.
இதுகுறித்து க்ளாப் கூறுகையில், “இதற்கு முன் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்ற அணிகளை விட இந்த அணியே பலமிக்கது. எனது பழைய அணிகளை நான் குறை கூற விரும்பவில்லை. அவர்களை நான் விரும்புகிறேன். வெற்றி பெறுவதற்காக அவர்களும் தங்களிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்தார்கள். ஆனால் இப்படியொரு சிறந்த அணியோடு நான் இதற்கு முன்பு இறிதிப் போட்டிக்கு சென்றதில்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும். தங்களால் சாத்தியமான அனைத்தையும் சிறப்பாக எங்கள் வீரர்கள் பயன்படுத்துகிறார்கள். இது அற்புதமான விஷயம்” என்கிறார்.
எனினும், ஒரு பயிற்சியாளராக தன்னுடைய முதல் பெரிய சாதனையை இன்னும் தான் தாண்டவில்லை என தெளிவாக கூறுகிறார் க்ளாப். பயிற்சியாளராக 15 வருடங்களுக்கு முன்பு, குறைந்த பட்ஜெட்டில், மிகச்சிறிய மயன்ஸ் அணியை பண்டிஸ் லீகா தொடருக்கு முன்னேற்றினார் க்ளாப். அந்த சாதனையை தான் இப்போது குறிப்பிடுகிறார்.
கடந்த மூன்று போட்டிகளில் காயத்தால் விளையாடமால் இருந்த முன்கள வீரர் ராபர்டோ ஃபிர்மினோ, நிச்சியம் இறுதிப் போட்டிக்குள் முழு உடல் தகுதி பெற்றுவிடுவார் என நம்பிக்கை தெரிவிக்கிறார் க்ளாப். ஆனால் நடுகள வீரர் நபி கெய்டாவின் காயம் இன்னும் சரியாகவில்லை என்றே தோன்றுகிறது. “ஃபிர்மினோ கடந்த வாரம் பயிற்சியில் கலந்து கொண்டார். அவரைப் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. இறுதிப் போட்டியில் நபி விளையாடுவது தான் சந்தேகம். ஆப்ரிக்கா கப் ஆஃப் நேஷன்ஸ் தொடரில் அவரை விளையாட வைக்க முயற்சி செய்வோம்” என கூறுகிறார் க்ளாப்.
ப்ரீமியர் லீக்கில் டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் லிவர்பூல் வெற்றி பெற்றுள்ளதால், இறுதிப் போட்டி கடுமையான சவாலாக இருக்கும். இரண்டு போட்டிகளிலும் 2-1 என்ற கோல் கணக்கிலேயே வெற்றி பெற்றது லிவர்பூல்.
“இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என கூறுவது கடினம். ஏனென்றால் எங்கள் அணியும் டோட்டஹம் அணியும் தரத்தில் ஒன்று போல் உள்ளன. எங்கள் இரு அணிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு நிலைத்தன்மை மட்டுமே. மேலும், சரியான சூழ்நிலைகளில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். போட்டியன்று சரியான மனநிலையில் விளையாடினாலே பாதி வேலை முடிந்தது. இரு அணிகளுக்கும் ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக தெரியும். அதனால் வித்தியாசமான முறையில் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்கிறார் க்ளாப்.