இவ்வருட யூ.சி.எல் நாக் அவுட் போட்டிகள் தொடங்க இன்னும் 2 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் ஐரோப்பாவின் பல அணிகளும் இக்கோப்பையை வெல்லும் நோக்கில் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் பி.எஸ்.ஜி, யுவன்டஸ் மற்றும் பாயர்ன் முனிச் போன்ற பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது ரியல் மாட்ரிட். ஆனால், இவ்வருடம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் லா லிகாவில் தடுமாறி வரும் ரியல் மாட்ரிட் அணி கோப்பையை தொடர்ந்து நான்காவது முறையாக வெல்ல வாய்ப்புகள் குறைவு. இவ்வருடம் ரவுண்ட் ஆப் 16-இல் பாயர்ன் முனிச் பலம் வாய்ந்த லிவர்பூலை எதிர்கொள்வதால் அவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது அவ்வளவு எளிதல்ல. ப்ரமியர் லீகை பொறுத்தவரை சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம். வால்வர்டேவின் பார்சிலோனா அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு முக்கிய காரணம் லியோ மெஸ்சியின் அபார பார்ம். அதிக முறை யூ.சி.எல் வென்ற கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருப்பது யுவன்டஸ் அணிக்கு மிகப் பெரிய பலம்.
இம்முறை யூ.சி.எல் வெல்ல அதிக வாய்ப்புள்ள 5 அணிகளின் லிஸ்ட் இதோ,
5. லிவர்பூல்
சென்ற வருடம் பைனல் வரை வந்து ரியல் மாட்ரிடுடன் தோற்ற லிவர்பூல் அணி, இவ்வருடம் இன்னும் பலமாக காட்சியளிக்கிறது. ப்ரிமியர் லீக் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள லிவர்பூல் அணி எஃப்.ஏ கப்பில் எலிமினேட் ஆதலால் நாக் அவுட் போட்டிகளுக்கு தயாராக மற்ற அணிகளை விட நேரம் அதிகமாக உள்ளது. லிவர்பூலின் மிகப் பெரிய பலம் அவர்களுடைய அட்டாக்கிங் வீரர்களான மானே,ஃபிர்மினோ மற்றும் முகமது சாலா தான். இம்முறை கோல் கீப்பர் அலிசன் அசத்தலாக ஷாட்களை சேவ் செய்வது சிறப்பு. லிவர்பூலின் பலவீனம் அவர்களின் டிபன்ஸ். ஆனால், இம்முறை அனுபவம் வாய்ந்த வான் டைகே உள்ளதால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே கூறலாம். எனினும் இம்முறை அவர்கள் யூ.சி.எல்லை விட பிரிமியர் லீக்கில் கவனத்தை செலுத்தும் வாய்ப்பு அதிகம்.
4. பொரூசியா டார்ட்மண்ட்
மானேஜர் க்ளாப் இருந்த பொழுது 2013-இல் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் பைனல் வரை சென்றது பொரூசியா அணி. ஆனால் அதற்கு பின்னர் பாயர்ன் முனிச் அளவிற்கு அவர்களால் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை. இந்த வருடம் மானேஜர் லூசியன் ஃபாவ்ரே தலைமையில் அனைவரையும் கவரும் வகையிலான கால்பந்து ஆடி வருகிறது டார்ட்மண்ட். புன்தஸ்லீகா தரவரிசையிலும் முதலிடத்தில் இருக்கிறது. இந்த அணியின் முக்கிய வீரர் மிகவும் திறமை வாய்ந்த மார்கோ ராயஸ் தான். காயம் காரணமாக 2013-க்கு பிறகு அவரால் தொடர்ந்து ஆதிக்கம் செயலவில்லை. ஆனால் இம்முறை அவரும் ஸ்டரைகர் பாகோ அல்கசாரும் நல்ல பார்மில் உள்ளனர். இவர்களுடன் இளம் நட்சத்திரங்களான புளிசிச்சும் , ஜேடான் சான்சோவும் அபாரமாக ஆடி வருகின்றனர். இந்த அணியின் பலவீனம் மிட்பீல்டு தான். எனினும் இந்த அணியின் மீது எதிர்பார்ப்புகள் குறைவு என்பதால் எவ்வித பயமும் இன்றி ஆடி எதிரணியை அச்சுறுத்த வாய்ப்புகள் அதிகம்.
3. மான்சஸ்டர் சிட்டி
கடந்த முறையே சிட்டி டைட்டில் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருந்தும் காலிறுதியில் லிவர்பூலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இம்முறை பிரிமியர் லீக்கை வெல்ல லிவர்பூலுடன் பலமான போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அணகயின் மிகப் பெரிய பலமே மானேஜர் பெப் கார்டியோலா தான். ஃபுட்பாலின் அனைத்து தந்திரங்களையும் நன்கறிந்த பெப் எதிரணியின் பலவீனத்தை கண்டறிந்து அவர்களை வீழ்த்துவதில் வல்லவர். இவ்வணியின் மற்றொரு பலம் அசைக்க முடியாத மிட்ஃபீல்டு தான். பெர்னான்டின்ஹோ மற்றும் டேவிட் சில்வா போன்ற அனுபவமிக்க வீரர்களோடு ரியாத் மாஹ்ரஸ் மற்றும் ரகீம் ஸ்டெர்லிங் போன்ற திறமை வாய்ந்த இளம் நட்சத்திரங்களும் உள்ளனர்.
2. பார்சிலோனா
ஒவ்வொரு வருடமும் பார்சிலோனா எந்த வித பார்மில் இருந்தாலும் யூ.சி.எல் ஃபேவரட்ஸ் ஆக இருக்க காரணம் லியோனல் மெஸ்சி எனும் ஃபுட்பால் ஜீனியஸ் தான். இவ்வருடம் 21 கோல்கள் மற்றும் 10 அசிஸ்டுகள் செய்து நல்ல பார்மில் இருக்கிறார். பலரால் உலகின் சிறந்த ஸ்டிரைகர் என கருதப்படும் சுவாரஸ் இருப்பது கூடுதல் பலம். இளம் நட்சத்திரம் ஓஸ்மான் டெம்பலே காயத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளது பார்சா ரசிகர்களுக்கு நல்ல செய்தி. கீப்பிங்கில் டெர் ஸ்டெகன் மற்றும் அனுபவம் மிக்க ஜெரார்டு பீகே அசத்தலாக ஆடி வருவது சிறப்பு. பைனல் வரை அரையிறுதி வரை பார்சா ஈசியாக செல்லும் என்று பலரும் கணித்துள்ளனர்.
1. யுவன்டஸ்
ரொனால்டோவை சுத்தமாக பிடிக்காத ஒருவரால் கூட மறுக்க முடியாத விஷயம் யூ.சி.எல்லைப் பொறுத்த வரை அவரின் சாதனைகளை மிஞ்சும் வீரர் எவரும் இல்லை என்பது தான். ஏற்கனவே பலமான அணியாகிய யுவன்டஸ் ரொனால்டோவின் வருகையால் இன்னும் பலம் அடைந்துள்ளது. இவ்வணியின் பலம் அட்டாக்கில் இருக்கும் வெரைட்டி தான் . கவுண்டர் அட்டாக் செய்வதற்கு ரொனல்டோ மற்றும் கோஸ்டா, ஹெட்டருக்கு மஞ்சுகிச் , பாசிங் மற்றும் ட்ரிபிளுக்கு டிபாலா என திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். இத்துடன் பொனுச்சி, சிலனி என அனுபவமிக்க டிபன்டர்கள் பலர் உள்ளனர்.