ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்டு 16 போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டியில் PSG அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியையும் மற்றும் FC போர்டோ அணி, ரோமா அணியையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முடிவில் முன்னணியில் இருக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும்.
PSG vs மான்செஸ்டர் யுனைடெட்:
பிரான்ஸ் ஜாம்பவானும், இங்கிலிஷ் ஸ்டார் அணியும் கடந்த மாதம் நடைபெற்ற முதல் லெக் ரவுண்டு 16 போட்டியில் மோதின. இதில் பிரான்ஸ் அணியான PSG 2-0 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட முன்னிலையில் இருக்கிறது. PSG அணியில் நட்சத்திர வீரரான நெய்மார் இல்லாத போதிலும் அந்த அணியின் தூணாக ம்பெப்பே விளங்கி வருகிறார். முதல் லெக் போட்டியில் கடைசி கட்டத்தில் கோல் அடித்து முன்னிலைக்கு காரணமாக இருந்துள்ளார். இதே போன்று இன்றும் அவரது துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், PSG அணி எளிதாக காலிறுதிக்கு தகுதி பெறலாம்.
யுனைடெட் அணியை பொறுத்தவரை இங்கிலிஷ் ப்ரீமியர் லீக்-இல் சௌதாம்ப்டன் அணியை 3-2 என வீழ்த்திய கையோடு களமிறங்குகிறது. ஆனாலும் 2-0 என பின் தங்கியுள்ளதால் ஒரு பெரிய ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் சன்சேஸ் மற்றும் போக்பா அணியில் இல்லாதது அந்த அணிக்கு மேலும் பின்னடைவான ஒன்று.
PSG எதிர்பார்க்கப்படும் XI : (4-2-3-1)
பப்போன்; கெஹெர், சில்வா, கிம்பெம்பே, பெர்னெட்; வெரட்டி, மார்குயின்ஹோஸ்; குங்கு, ட்ரஸ்க்லெர், டி மரியா; ம்பெப்பே.
மான்செஸ்டர் யுனைடெட் எதிர்பார்க்கப்படும் XI : (4-2-3-1)
டீ ஜியா; யங், ஸ்மாய்லிங், லிண்டெல்ஆப், ஷா; மேக்டோமினாய், ப்ரெட்; டாலொட், பெரியரா, ராஷ்போர்ட்; லூக்காகு.
FC போர்டோ vs ரோமா:
சாம்பியன்ஸ் லீக்கில் மிகவும் நெருக்கமான போட்டியாக பார்க்கப்படுவது இந்த போட்டியை தான். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எப்படி பார்த்தாலும் இந்த போட்டியில் FC போர்டோ வெல்லவே வாய்ப்புள்ளது என கணிக்கப்படுகிறது. ஆனால் அந்த அணி 1-2 என பின் தங்கியுள்ளது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் எழுச்சி காணும் பட்சத்தில் வெற்றியை பதிவு செய்யலாம்.
ரோமா அணியை பொறுத்தவரை போர்டோ அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதே கிடையாது. ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. அணிக்கு பலம் சேர்ப்பது நடுகள வீரர்களான டீ ரோசி, பெல்லேக்ரினி மற்றும் கொலரோவ். இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வெற்றியை ருசிக்கலாம். அது மட்டுமின்றி ரோமா முன்னிலையில் இருப்பதால் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.
FC போர்டோ எதிர்பார்க்கப்படும் XI : (4-4-2)
காசில்லஸ்; டெலஸ்,பெப்பே, பிலிப், மிலிட்டியாவ்; அட்ரியன், டேனிலோ, ஹெறீரா, ப்ராஹ்மி; பெர்னாண்டோ, டிகுய்ன்ஹோ.
ரோமா எதிர்பார்க்கப்படும் XI : (4-3-3)
மிராண்டே; பிளோரின்சி, பாஜியோ, ஜீசஸ், கொலரோவ்; கிறிஸ்டன்ட், டீ ரோசி, பெல்லேக்ரின; எல் ஷார்வ்ய், ஸிகோ, சானியலோ.