மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் ஐரோப்பா சாம்பியன் லீக் கால்பந்து தொடர் ரவுண்டு-16 எனப்படும் சுற்றை எட்டியுள்ளது. இதில் இன்று நள்ளிரவு நடந்த போட்டியில் அஜக்ஸ், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ரியல் மாட்ரிட் அணி எளிதில் வெற்றி வாகை சூடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அஜக்ஸ் அணி ரியல் மாட்ரிட் அணிக்கு கடும் சவால் அளித்தது. இதன் காரணமாக ஆட்டத்தின் கடைசி வரை படபடப்பு அடங்கவில்லை. மேலும் பல சர்ச்சைகளும் இந்த போட்டியில் இடம்பெற்றது, அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
முதல் பாதி:
அஜக்ஸ் அணி காலிறுதிக்கு தகுதிபெற கடந்த 16 வருடங்களாக போராடி வருகிறது. இந்த சூழலில் தான் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டது. முதல் பகுதியானது, அஜக்ஸ் அணி பக்கமே காற்று வீசியது. ஆனால் அந்த வாய்ப்புகளை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
அந்த அணியின் மஸ்ராவுய் ஒரு அற்புதமான ஷாட் அடித்தார்,ஆனால் அது அது கோல் போஸ்டில் இருந்து விலகி சென்றது. அந்த தருணத்தில் ரியல் மாட்ரிட் கோல் கீப்பர், கோர்ட்டிஸ் மட்டுமே தடுப்பு வீரராக இருந்தார். இந்த பொன்னான வாய்ப்பை வீணடித்து அஜக்ஸ் அணி.
அதே போன்று டாடிக், ராமோஸ்-ஐ சமாளித்து ஒரு ஷாட்டை அடித்தார். அது துரதிர்ஷ்டவசமாக கோல் போஸ்டில் பட்டு வெளியில் சென்றது. உடனே சாயிச் இதே போன்ற வாய்ப்பை வீணடித்தார்.
இப்படி அஜக்ஸ் அணியினர் மாறி மாறி தாக்குதல் தொடுக்க, அதற்க்கு பலன் கிடைத்தது போல் வான் டீ பீக் மற்றும் தக்லீஅபிகோ உதவியுடன் கோல் கணக்கை தொடங்கியது, அஜக்ஸ் அணி. இதற்கு தகுந்தாற்போல ரியல் மாட்ரிட் கோல் கீப்பர், கோர்ட்டிஸ் மிகப்பெரிய தவறு செய்தார். ஆனால் இந்த நிகழ்வுக்கு இடையே ரெப்ரீ, ஸ்கொமினா VAR மூலம் ஆப்சைடு செக் செய்ய உத்தரவிட்டார். அந்த ரீப்பிலேவில் அஜக்ஸ் அணியின் டாடிக் ஆப்சைடு ஆனது தெளிவாக தெரிந்தது. உடனே ரெப்ரீ அந்த கோல் செல்வது என அறிவித்தார். இதனால் அஜக்ஸ் அணியினர் உடைந்து போயினர். ஆனால் மறுபுறம் கோர்ட்டிஸ்க்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.
இதனால் முதல் பாதி கோல் ஏதும் இன்றி சமனில் முடிந்தது.
இரண்டாம் பாதி:
முதல் பாதியில் பலத்த அடிவாங்கிய ரியல் மாட்ரிட் அணி பின்பு சுதாரித்து கொண்டு தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. இரண்டாவது பாதி தொடங்கிய 15வது நிமிடத்தில் பென்சீமா (60') அஜக்ஸ் அணியின் கோல் கீப்பரான ஓனானாவை வீழ்த்தி ஒரு அசத்தலான கோலை அடித்தார்.இதனால் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
பின்பு பலவகையில் போராடி அஜாக்ஸ் அணியின் சாயிச் 75' நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்க ரியல் மாட்ரிட் அணிக்கு மாற்று வீரராக வந்த அசென்சியோ 87' வது நிமிடத்தில் கோல் போட்டு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அந்த கோல் அடிக்க அற்புதமாக உதவினார் கார்வாஜால்.
இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் அஜக்ஸ் அணியை வீழ்த்தியது. அஜக்ஸ் அணி பல வாய்ப்புகளை உருவாக்கியும் அதற்க்கு பலன் இல்லாமல் போய்விட்டது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது போட்டி மார்ச் 5ல் நடைபெறும்.