அரை இறுதிக்குள் நுழைந்த பார்சிலோனா அணி; மான்செஸ்டர் யுனைடெட் அணி அவுட்- சாம்பியன்ஸ் லீக் 2019

இரண்டாவது லெக் போட்டியின் முடிவு
இரண்டாவது லெக் போட்டியின் முடிவு

ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இதன் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக அரங்கேறியுள்ளது. இதன் ஒரு போட்டியாக இரண்டாவது லெக்கில் பார்சிலோனா அணி மான்செஸ்டர் அணியை தனது சொந்த மைதானத்தில் சந்தித்தது.

முதல் லெக் போட்டியில் 1-0 என முன்னிலையில் இருந்த பார்சிலோனா அணி இந்த போட்டியிலும் வென்று அரைஇறுதிக்குள் நுழைய காத்திருந்தது. அந்த எண்ணத்திற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணி முட்டுக்கட்டை போடுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இவ்வளவு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நள்ளிரவு 12.30க்கு ஆட்டம் தொடங்கியது.

பார்சிலோனா அணியின் வியூகம் : 4-3-3

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வியூகம்: 4-3-1-2

முதல் பாதி :

பார்சிலோனா அணியில் ஒரு மாற்றமாக செர்ஜியோ ராபர்டோ உள்ளே வர நெல்சன் விலக்கப்பட்டார். மீண்டும் மெஸ்ஸி மற்றும் கொடின்ஹோ இணை தக்குதலை தொடுக்க தயாரானது. மான்செஸ்டர் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன.

வழக்கம் போல மான்செஸ்டர் அணியின் நாயகனான ராஷ்போர்ட் முதல் நிமிடத்திலேயே பார்சிலோனா அணியின் தடுப்பை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். அப்போது அவர் அடித்த ஷாட் ஆனது மயிரிழையில் கிராஸ்பாரில் பட்டு வெளியே சென்றது. இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை இழந்தனர் மான்செஸ்டர் அணியினர்.

அடுத்தபடியாக ஸ்காட் மேக்டோமினாய் பந்தை கடத்தி பார்சிலோனா எல்லைக்குள் நுழைத்தார். இவர் சற்று தடுமாற கோல் போடா முடியாமல் போனது. ஆட்டம் தொடங்கிய முதல் ஆறு நிமிடத்தில் இரண்டு வாய்ப்புகளை தவறிவிட்டது மான்செஸ்டர் அணி. இந்த தருணத்தில் பார்சிலோனா வீரர்கள் என்ன நடக்கிறது என்பதறியாது திகைத்தனர்.

இதிலிருந்து மீள்வதற்குள் மான்செஸ்டர் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது, ரகிட்டிக் பிரெடிடம் பந்தை பறிக்க முயலும் போது தவறுநடந்ததால் பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. பிறகு ரெபிரீ VAR முறையை பயன்படுத்தி தனது பெனால்டி முடிவை திரும்ப பெற்றார். இதனால் பார்சிலோனா அணியினர் பெருமூச்சு விட்டனர்.

இப்படி தாக்குதலை தொடுத்து கொண்டே இருந்தனர் மான்செஸ்டர் அணியினர், இதனிடையே ராஷ்போர்ட் மீண்டும் ஒரு ஷாட் சற்று தொலைவில் இருந்து அடிக்க அதை பார்சிலோனா கோல் கீப்பர் ஆண்ட்ரே ஸ்டேஜ்ன் அழகாக தடுத்தார்.

கோல் போட்ட மகிழ்ச்சியில் மெஸ்ஸி
கோல் போட்ட மகிழ்ச்சியில் மெஸ்ஸி

அவ்வளவு தான், மான்செஸ்டர் அணியின் ஆதிக்கம் இதோடு முடிவுக்கு வந்தது, ஆம் பார்சிலோனா ஜாம்பவான் மெஸ்ஸி யங்கிடம் இருந்து பந்தை கடத்தி மான்செஸ்டர் வலைக்கு செலுத்தினார். மெஸ்ஸியின் இந்த கோலால் பார்சிலோனா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து அடுத்த நான்கு நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் மான்செஸ்டர் எல்லைக்குள் நுழைந்து ஒரு ஷாட் அடித்தார். ஆனால் மான்செஸ்டர் அணியின் கோல் கீப்பரின் மோசமான ஆட்டத்தால் மற்றோரு கோல் பார்சிலோனா வசம் சென்றது. உருண்டு வந்த பந்தை டீ ஜியா தடுக்க முடியாததால் பார்சிலோனா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

26' நிமிடத்தில் ஹாட்ட்ரிக் கோல் அடிக்கும் முனைப்புடன் மீண்டும் உள்நுழைந்தார் மெஸ்ஸி, இந்த முறை அந்த ஷாட் கிராஸ் பாரில் பட்டு வெளியில் சென்றது. பிறகு கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பையும் மெஸ்ஸி சரியாக பயன்படுத்தவில்லை.

முதல் பாதி முடியும் தருவாயில் ராபர்டோ, ஜோர்டி ஆல்பாவின் அற்புத கிராஸ் ஷாட்டில் கோல் போட முயற்சித்தார். ஆனால் இந்த முறை டீ ஜியா அற்புதமாக அதை தடுத்தார்.

இரண்டாம் பாதி:

முதல் பாதியில் மான்செஸ்டரின் ஆட்டம் அபாரமாக இருந்தாலும் மெஸ்ஸியின் துடிப்பான ஆட்டத்தால் 2-0 என பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே மூன்றவாது கோலை போட விளைந்தார் மெஸ்ஸி, ஆனால் டீ ஜியாக்கு முன்னின்ற யங் அந்த பந்தை வெளியே தட்டினார்.

மஞ்செஸ்டரின் முக்கிய வீரர்களான லுகாகு மற்றும் சஞ்செஸ் ஆகியோர் வெளியே அமரவைத்ததால், மான்செஸ்டர் அணி கோல் போட முடியாமல் திணறினர்.

இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் முழுக்க மான்செஸ்டர் வீரர்கள் சோர்ந்து காணப்பட்டனர். இதனிடையே கொடின்ஹோ பெனால்டி பாக்ஸிற்கு வெளியில் இருந்து ஒரு ஷாட் அடிக்க அது நேராக வலைக்குள் சென்று விழுந்தது. இந்த அற்புதமான ஷாட்டை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

கொடின்ஹோ கோல் அடித்த காட்சி
கொடின்ஹோ கோல் அடித்த காட்சி

3-0 என முன்னிலையுடன் ஆட்டம் பார்சிலோனா அணி பக்கம் நகர்ந்தது. 64' நிமிடத்தில் கொடின்ஹோ ஷாட்டை மிஞ்சும் வகையில் ஒரு கோல் போட முயற்சித்தார் மெஸ்ஸி. மேலே வந்த பந்தை மெஸ்ஸி பைசைக்கிள் கிக் அடித்தார், ஆனால் பந்து கோல் போஸ்டை விட்டு சற்று விலகி சென்றது.

பிறகு லுகாகு மற்றும் சன்சேஸ் மாற்று வீரராக களம்கண்டும் மான்செஸ்டர் அணிக்கு பலனளிக்கவில்லை. கடைசி கட்டத்தில் இருவரும் தனது பங்குக்கு தலா ஒரு ஷாட் அடித்தனர், ஆனால் டெர் ஸ்டேஜ்ன் அற்புதமாக இரண்டையும் தடுத்தார்.

மறுமுனையில் டீ ஜியா மட்டும் தனியாளாக மெஸ்ஸியின் ஹாட்ட்ரிக் வாய்ப்பை தடுத்து கொண்டே இருந்தார். இது ஒன்று மட்டுமே அவருக்கு கிடைத்த வெற்றியாகும்.

வெற்றியை கொண்டாடிய பார்சிலோனா வீரர்கள்
வெற்றியை கொண்டாடிய பார்சிலோனா வீரர்கள்

முடிவில் பார்சிலோனா அணி 3-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வென்றது. மொத்தமாக இரண்டு லெக் போட்டியிலும் சேர்த்து 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அரையிறுத்துக்குள் நுழைந்தது பார்சிலோனா அணி. அந்த அரையிறுதி போட்டியில் லிவர்பூல் அல்லது போர்டோ அணியை சந்திக்கவிருக்கிறது. இன்று நடக்கும் மற்றோரு காலிறுதி போட்டியில் அந்த முடிவு தெரியும்.

Edited by Fambeat Tamil