"அர்ஜெண்டினா அணியை எந்தளவிற்கு மெஸ்ஸி விரும்புகிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்" - ஆகுவேரா

Sergio Aguero and Lionel Messi
Sergio Aguero and Lionel Messi

எப்போதெல்லாம் அர்ஜெண்டினா அணி மோசமாக விளையாடுகிறதோ அப்போதெல்லாம் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் செர்ஜியோ ஆகுவேரா மீது கடும் விமர்சனம் எழும். ஏனென்றால் இவர்கள் இருவரும் தங்கள் விளையாடும் கிளப் அணிகளுக்காக பல கோப்பைகளை பெற்று தந்துள்ளார்கள். ஆனால் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடும் போது மட்டும் மோசமாகவே செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் தனது முதல் போட்டியிலேயே கொலம்பியா அணியிடம் மோசமாக தோல்வியடைந்துள்ளது அர்ஜெண்டினா. இதனால் பலரும் மெஸ்ஸியை விமர்சித்து வருகின்றனர். அடுத்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த செர்ஜியோ ஆகுவேரா கூறுகையில், “அர்ஜெண்டினா அணியை எந்தளவிற்கு மெஸ்ஸி விரும்புகிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.

இந்த ஆண்டு பார்சிலோனா அணிக்காக சிறப்பாக விளையாடி 51 கோல்களை அடித்துள்ளதோடு ஆறாவது முறையாக ஐரோப்பிய தங்க காலனி விருதை வென்றுள்ளார் மெஸ்ஸி. முதல் முறையாக பார்சிலோனா அணியின் கேப்டனாக இந்த சீசனில் பங்கேற்ற மெஸ்ஸி, தன் அணியை லா லீகா கோப்பையை வெல்ல வைத்துள்ளார்.

அதேப் போல் செர்ஜியோ ஆகுவேராவும் மான்செஸ்டர் சிட்டி அணியில் சிறப்பாக விளையாடி ப்ரீமியர் லீக் உள்பட மூன்று உள்நாட்டு கோப்பைகளை தன் அணி வெல்ல உதவி புரிந்துள்ளார். இந்த ஆண்டு ப்ரீமியர் லீக்கில் இவர் 30 கோல்களை அடித்துள்ளார். இரு வீரர்களும் ஃபார்மில் இருப்பதால் இந்த முறை எப்படியாவது கோப்பா அமெரிக்காவை அர்ஜெண்டினா அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

“யாரும் தோல்வியடைய விரும்ப மாட்டார்கள். சாம்பியன்ஸ் லீக் மற்றும் கோப்பா டெல் ரேயில் பார்சிலோனா தோல்வியடைந்த ஏமாற்றத்தில் மெஸ்ஸி இருக்கிறார் என்பது உண்மை தான். ஆனால் அவர் மிகச்சிறந்த வீரர், அனுபவம் வாய்ந்தவர். கால்பந்து விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது அவருக்கு நன்றாக தெரியும். மற்றவர்களை விட இதை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர் அவர்” என பத்திரிக்கையாளரிடம் பேசிய போது ஆகுவேரா தெரிவித்தார்.

இளமை காலம் தொட்டே மெஸ்ஸியும் ஆகுவேராவும் சிறந்த நண்பர்கள். கோப்பா அமெரிக்காவை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற தாகம் மெஸ்ஸிக்கு இருப்பது குறித்து ஆகுவேரா கூறுகையில், “எப்படிப்பட்ட ஆசையோடு இந்த தொடரில் மெஸ்ஸி விளையாட வந்துள்ளார் என்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும். அவரது மகிழ்ச்சியே எங்களுக்கான அடிப்படை. அர்ஜெண்டினா அணியை அவர் எந்தளவிற்கு விரும்புகிறார் என்பது எங்களுக்கு தெரியும். பல புதிய வீரர்கள் அணியில் சேர்ந்துள்ளனர். புதிய பயிற்சியாளர்கள் இணைந்துள்ளனர். ஆனால் எப்போதும் நாங்கள் அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடுவோம்” என்றார்.

Lionel Messi
Lionel Messi

முதல் போட்டியின் தோல்வி குறித்து மெஸ்ஸி கூறுகையில், “யாரையும் நாங்கள் குறை சொல்ல விரும்பவில்லை. இன்னும் போட்டிகள் மீதமுள்ளன. அதை தைரியமாக எதிர்கொள்வோம். கடந்த போட்டியிலிருந்து நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு எங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவோம். தோல்வியிலிருந்து மீள்வது கடினம் தான். அடுத்து வரவுள்ள பராகுவே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இடம் பெறுவோம்” என்றார்.

அர்ஜெண்டினா அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. அடுத்த போட்டியில் பராகுவே அணியையும் அதற்கடுத்த போட்டியில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியையும் எதிர்கொள்ள உள்ளது மெஸ்ஸி படை.