14 வருட காத்திருப்பிற்குப் பிறகு, இறுதியாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது லிவர்பூல் அணி. சனிக்கிழமை இரவு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்து இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில், டோட்டஹம் ஹாட்ஸ்பர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது லிவர்பூல். ஆனால் அன்றைய போட்டியில், பந்தை தன் கடுப்பாட்டில் அதிக நேரம் வைத்திருந்ததோடு கோலை நோக்கி அதிக ஷாட்களையும் அடித்த அணியாக டோட்டஹம் விளங்கியது
ஆனாலும் டோட்டஹம் அணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்நிலையில், எங்கே தவறு நடந்தது என்பது குறித்து விளக்கவே இந்த கட்டுரை.
1. முழுமையாக காயத்திலிருந்து மீளாத ஹாரி கனே விளையாடியது
மான்செஸ்டர் அணியுடனான காலியிறுதிப் போட்டியின் போது காயம் அடைந்த ஹாரி கனே, அதன் பிறகு இப்போது தான் முதல் முறையாக விளையாட வந்துள்ளார். அதுவும் இறுதிப் போடியில். கனே காயத்திலிருந்து முழுமையாக மீண்டு விட்டார் என போட்டிக்கு முன்பு ரசிகர்க்ள் அனைவரையும் நம்ப வைத்திருந்தனர்.
ஆனால் சனிக்கிழமை அன்று போட்டியில், போதிய உடற்தகுதி இல்லாமல் களத்தில் நேரத்தை தான் வீணடித்து கொண்டிருந்தார் கனே. ஆட்டத்தின் 90 நிமிடமும் கனேவை விளையாட வைத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார் பயிற்சியாளர் போச்செட்டினோ. கனேவின் ஆட்டத்தால் எந்த நன்மையும் டோட்டஹம் அணிக்கு ஏற்படவில்லை. 90 நிமிடம் விளையாட வைத்ததற்குப் பதில் மாற்று வீரராக கனேவை இறக்கியிருக்கலாம். முடிவில் கோப்பையை இழந்தது தான் மிச்சம்.
2. மாற்று வீரரை சரியான நேரத்தில் இறக்காதது
ஹாரி கனே போலவே, லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் ராபர்டோ ஃபிர்மினோவும் முழு உடற்தகுதி இல்லாமல் தான் இருந்தார். இருவருமே ஆட்டத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த லிவர்பூல் பயிற்சியாளர் க்ளாப், ஃபிர்மினோவை 90 நிமிடம் விளையாட வைக்காமல் உடனடியாக டிவோக் ஓர்ஜியை மாற்று வீரராக களம் இறக்கினார்.
ஆனால், மறுபுறமோ, கனே கோப்பையை வென்று தருவார் என ஆட்டத்தின் முழு நேரமும் கனேவை விளையாட வைத்தார் போச்செட்டினோ. அரையிறுதியில் அஜக்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றி பெற வைத்த லூகாஸ் மவுரா மாற்று வீரராகவே இறங்கினார். இதுவும் ஒரு தவறு. மாற்று வீரர்களை சரியாக பயன்படுத்தாமல் கோட்டை விட்டார் டோட்டஹம் பயிற்சியாளர் போசெட்டினோ.
3. அணுபவம் Vs புதியது
கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணியிடம் பெற்ற அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது லிவர்பூல். இதன் மூலம் பல அணுபவங்களை லிபர்பூல் பெற்றிருக்கும். ஆனால் டோட்டஹம் அணியோ இப்போது தான் முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
முதல் முறையாக இறுதிப் போட்டி விளையாடுவதால், அவர்களின் அணுபவமின்மை களத்தில் அழகாக தெரிந்தது. 65% பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், கோலை நோக்கி எட்டு ஷாட்களை அடித்திருந்த போதும் டோட்டஹம் அணியால் வெல்ல முடியவில்லை. தங்களுக்கு வந்த வாய்ப்பை நழுவ விட்டார்கள் என்று தான் இதை கூற வேண்டும்.
ஆனால், லிவர்பூல் அணிக்கு அணுபவம் மிகவும் கை கொடுத்தது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டியை சரியாக பயன்படுத்தி முதல் பாதியில் முன்னிலை பெற்றனர். இப்படி சில தவறுகள் செய்ததால் டோட்டஹம் அணியால் வெற்றி பெற முடியவில்லை.