மீண்டும் சொதப்பிய ஆர்சனல் அணி, ஒல்வ்ஸ் அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி 

ஆட்டத்தின் முடிவு
ஆட்டத்தின் முடிவு

இங்கிலிஷ் பிரீமியர் போட்டிகள் 31வது வாரத்தை எட்டி சிறப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியாக ஆர்சனல் அணி ஒல்வ்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியானது ஒல்வ்ஸ் அணிக்கு சொந்தமான ஆடுகளத்தில் அரங்கேறியது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்திற்குள் வரவேண்டும் என்ற முனைப்புடன் ஆர்சனல் அணி இந்த போட்டியில் களமிறங்கியது. ஆனால், தனது சிறப்பான ஆட்டத்தை நிலைநிறுத்தி எதிரணிக்கு சவால் விட களமிறங்கியது ஒல்வ்ஸ் அணி.

ஒல்வ்ஸ் அணியின் வியூகம் : 3-5-2

ஆர்சனல் அணியின் வியூகம்: 4-2-3-1

முதல் பாதி:

ஒல்வ்ஸ் அணி மெல்ல ஆட்டத்தை தொடங்க, மறுமுனையில் ம்கிடரியன் அனல் பறக்கும் தாக்குதலை தொடுக்க ஆரமித்துவிட்டார். அவர் அடித்த ஒரு ஷாட் கிராஸ் பாரை விட்டு விலகி சென்றது, ஆனாலும் ஆர்சனல் அணியின் ஆதிக்கம் குறையவே இல்லை. பந்து முழுவதும் தனது பக்கமே இருக்கும் படி பார்த்துக்கொண்டனர் ஆர்சனல் அணியினர். இதனால் இந்த போட்டியானது எளிதில் ஆர்சனல் அணி பக்கம் சென்றுவிடும் என்று எண்ணினர்.

ஆனால் 25' நிமிடத்தில் ஆட்டம் தலைகீழாக மாற தொடங்கியது. மௌடீன்ஹோ 20-யார்ட் தூரத்தில் இருந்து ஒரு ஷாட் அடித்தார். ஆனால் அந்த பந்து கோல் போஸ்டை விட்டு விலகி சென்றது. அடுத்த படியாக ஜிம்னெஸ் அடித்த பந்தை ரியான் பென்னட் கோலாக மாற்ற தவறினார். இப்படி ஒல்வ்ஸ் அணியினர் ஷாட்கள் அடித்து ஆர்சனல் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி கொண்டே இருந்தனர்.

28'வது நிமிடத்தில் ஒரு பிரீ-கிக் வாய்ப்பு ஒல்வ்ஸ் அணிக்கு கிட்ட அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் நெவிஸ். லீனோவை தாண்டி கோலாக மாற்றினார் நெவிஸ்.

நெவிஸ் அடித்த பிரீ-கிக் கோல்
நெவிஸ் அடித்த பிரீ-கிக் கோல்

அடுத்த 9'நிமிட இடைவேளையில் மற்றோரு கோலை போட்டு அசத்தினர் ஒல்வ்ஸ் அணியினர். ஜானி ஓட்டோ அடித்த கிராஸ் பந்தை டோஹெர்ட்டி அழகாக கோலாக மாற்றினார்.

இது இப்படி இருக்க முதல் பாதி முடிய இருக்கும் அந்த நேரத்தில் ஜோட்ட தனது பங்குக்கு ஒரு கோல் போட்டு ஆர்சனல் அணியின் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இரண்டாம் பாதி:

முதல் பாதி முடிவில் 3-0 என்ற கணக்கில் ஒல்வ்ஸ் அணி முன்னிலை வகித்தது. இதனால் மிகவும் துவண்டு போன ஆர்சனல் அணி வீரர்கள் கொதித்தெழுந்து மேலும் ஆக்ரோஷத்தை காட்ட தொடங்கினர். அந்த சமயத்தில் மொன்ரியல் வெகு தொலைவில் இருந்து கோல் போட முயற்சித்தார், ஆனால் அந்த ஷாட்டும் போஸ்டிலிருந்து விலகி சென்றது. ஒரு கோல் கூட போடமுடியாமல் தவித்து வந்தனர் ஆர்சனல் அணியினர்.

இதனிடையே ஆர்சனல் வீரர்கள் பெனால்டி வாய்ப்பு ஒன்றை கோரினர். அதை ஆராய்ந்த ரெபிரீ, பெனால்டி வாய்ப்பு இல்லை என்று மறுக்க ஒல்வ்ஸ் அணியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆர்சனல் தாக்குதல் ஆட்டம் ஆடும் அந்த வேளையில், நிதானமாக தடுப்பாட்டத்தை ஆடி அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை கோல் போஸ்டை நோக்கி செலுத்தி கொண்டே இருந்தனர் ஒல்வ்ஸ் அணியினர்.

சோக்ரடீஸ் அடித்த ஹெட்டர் கோல்
சோக்ரடீஸ் அடித்த ஹெட்டர் கோல்

ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வரும் வேளையில், 80' நிமிடத்தில் ஆர்சனல் அணிக்கு கார்னர் வாய்ப்பு ஒன்று கிட்டியது. அதை ஹெட்டர் மூலம் கோலாக மாற்றினார் சோக்ரடீஸ்.

முடிவில் ஒல்வ்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தியது. இந்த தொடரில் ஏற்கனவே ஸ்பர்ஸ், செல்சி, மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்த ஒல்வ்ஸ் இந்த முறை ஆர்சனல் அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

வெற்றியை கொண்டாடிய ஒல்வ்ஸ் வீரர்கள்
வெற்றியை கொண்டாடிய ஒல்வ்ஸ் வீரர்கள்

அதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்றால் அனைத்து அணிகளும் டாப் 4 இடத்தில் உள்ள அணிகளாகும். ஆர்சனல் அணியை 47 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த மண்ணில் வீழ்த்தியது மற்றோரு சிறப்பு.

ஆர்சனல் அணியை பொறுத்தவரை ஏற்கனவே கடந்த போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வி கண்ட விரக்தியில் இருந்தனர். இப்போது இந்த தோல்வி அவர்களின் டாப் 4 இடத்திற்கு கேள்விக்குறியாக்கி உள்ளது.